ஏ.எஸ்.இ.ஆர்., - 2023 அறிக்கை! | Kalvimalar - News

ஏ.எஸ்.இ.ஆர்., - 2023 அறிக்கை!ஜனவரி 25,2024,10:23 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உள்ள இளம்பருவத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட, ஏ.எஸ்.இ.ஆர்., எனும் ஆண்டு கல்வி நிலை அறிக்கையின்படி, 86.8 சதவீதம் பேர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர்.



நாட்டில் உள்ள 26 மாநிலங்களைச் சேர்ந்த 28 மாவட்டங்களில் 14 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மொத்தம் 34 ஆயிரத்து 745 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 




ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:



* 14-18 வயதுடையவர்களில் 86.8 சதவீதம் பேர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். எந்த கல்வி நிறுவனத்திலும் சேர்க்கை பெறாதவர்களில், 14 வயதினரது எண்ணிக்கை 3.9 சதவீதமாக உள்ள நிலையில், 18 வயதினரது எண்ணிக்கை 32.6 சதவீதமாக உள்ளது. 



கலை பிரிவு



11ம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்புகளில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 55.7 சதவீதத்தினர் கலை சார்ந்த பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர், அதைத் தொடர்ந்து ஸ்டெம் எனப்படும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் 31.7 சதவீதத்தினரும், வணிகப் பிரிவில் 9.4 சதவீதத்தினரும் சேர்ந்துள்ளனர். ஸ்டெம் பிரிவுகளில் 36.3 சதவீத ஆண்கள் சேர்க்கை பெற்றுள்ள நிலையில், 28.1 சதவீத பெண்களே சேர்ந்துள்ளனர்.



தொழில் பயிற்சி



கணக்கெடுக்கப்பட்ட இளைஞர்களில் 5.6 சதவீதம் பேர் மட்டுமே தொழில் பயிற்சி அல்லது பிற படிப்புகளை தேர்வு செய்துள்ளனர். கல்லூரி அளவில் 16.2 சதவீத இளைஞர்கள் தொழில் பயிற்சி பெறுகிறார்கள். குறிப்பாக, 6 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான கால அளவு கொண்ட குறுகிய கால படிப்புகளை படிக்கின்றனர்.



அடிப்படை திறன்கள்



14 முதல் 18 வயதினரில், சுமார் 25 சதவீதம் பேர் 2ம் வகுப்பு நிலை பாடங்களை அவர்களது மொழியில் சரளமாகப் படிக்க முடியாத நிலையில் உள்ளனர். 3 இலக்க எண்களை ஒரு இலக்க எண்ணால் வகுக்க முடியாத நிலையில் பாதிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். 43.3 சதவீதத்தினர் மட்டுமே அதனை சரியாக கணக்கிடுகின்றனர். இந்த திறன் பொதுவாக, 3வது அல்லது 4வது வகுப்பிலேயே பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



பாதிக்கும் மேற்பட்டோரால் அதாவது, 57.3 சதவீதத்தினரால் ஆங்கிலத்தில் வாக்கியங்களைப் படிக்க முடிகிறது. அவர்களில், 73.5 சதவீத்தினரால் மட்டுமே வாக்கியத்திற்கான அர்த்தத்தை கூற முடிகிறது.



70.9 சதவீத ஆண்களால் அவர்களது மொழியில் இரண்டாம் வகுப்பு நிலை உரையைப் படிக்க முடியும் நிலையில், பெண்கள் சற்று அதிகமாக, அதாவது 76 சதவீதத்தினரால் படிக்க முடிகிறது. இதற்கு நேர்மாறாக, எண்கணிதம் மற்றும் ஆங்கில வாசிப்பில் ஆண்கள், பெண்களை விட சிறப்பாக செயல்படுகின்றனர்.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us