உங்கள் குழந்தை யார் என்று கண்டுபிடியுங்கள்.... | Kalvimalar - News

உங்கள் குழந்தை யார் என்று கண்டுபிடியுங்கள்....

எழுத்தின் அளவு :

ஒரு குழந்தை பிறக்கும்போதே தனக்கென ஒரு தனித் திறமையுடன் பிறக்கிறது. அது தனக்கென ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்கிறது. பிறப்பின் அர்த்தமே தனித்தன்மைதான். ஆனால், அந்த தனித்தன்மைக்கும், சுய விருப்பத்திற்கும் குடும்பமும், சமூகமும் எந்தளவிற்கு மதிப்பும், வாய்ப்பும் தருகிறார்கள் என்று நாம் பார்த்தால், நமக்கு பல அதிர்ச்சிகரமான அனுபவங்களே ஏற்படும்.

சமூகத்தை உருவாக்கியவன் மனிதன்தான் என்றாலும், ஒரு தனிமனிதனை செதுக்குவதில் ஒரு சமூகத்தின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. இந்த சமூகம் ஒரு குழந்தையின் தனித் திறமைக்கு எந்தளவிற்கு முக்கியத்துவமும், வாய்ப்பும் வழங்குகிறது என்று ஆராய்கையில், ஒரு குழந்தைதான் தனது தனித்தன்மையை தியாகம் செய்து, தனது விருப்பத்தை துறந்து, சமூகத்துடன் ஒத்து வாழ நிர்பந்திக்கப்படுகிறது. அதற்கு காரணம் நமது சமூக அமைப்பு.

இந்த சமூகத்தில் செல்வாக்கும், பண பலமும் உள்ளவர்களுக்கே அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த சாதாரண உண்மை. ஆனால் ஒரு குழந்தையின் பெற்றோர், தாங்கள் சமூகத்தில் சாதாரண நிலையில் இருந்தாலும், தங்கள் குழந்தையின் தனித்தன்மைக்கு ஏற்ற வாய்ப்புகள் என்னென்ன உள்ளன என்பதை தெரிந்து கொள்வதோடு, அந்த தனித்தன்மையை மற்றும் திறமையை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் மதிப்பது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

பிறப்பிலேயே தனித்தன்மையை பெற்றிருக்கும் குழந்தையானது, தன்னை சுற்றியிருக்கும் சமூக அம்சங்களை ஒத்தும், தனது எதிர்கால வாழ்வை நிர்ணயிக்க பழகிக்கொள்கிறது. உதாரணமாக இன்றைய இந்திய சமூக பள்ளிகளில், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. அந்த துறைகள்தான் சிறப்பானது என்று மாணவர்களுக்கு, ஆரம்பம் முதலே போதிக்கப்படுகிறது. இதனால், வேறு சில சிறப்பு திறமைகளைக் கொண்டிருக்கும் குழந்தை கூட, மருத்துவம் அல்லது பொறியியல் துறையை தேர்ந்தெடுத்தால்தான், சமூகத்தில் சிறப்பாக வாழ முடியும், மரியாதை கிடைக்கும், தனக்கு உற்சாகமும், ஊக்கமும் கிடைக்கும் என்று நினைத்து, அந்த 2 துறைகளையும் விரும்ப ஆரம்பித்து விடுகின்றன.

வேறு ஏதோ ஒரு துறையில் இருக்கும் தனது சிறப்பு திறனை அது மறந்து, தியாகம் செய்து விடுகிறது. இப்படித்தான் பல அற்புத திறமையாளர்களை சமூகம் இழந்து விடுகிறது. சமூகத்தில் உள்ள பிற நபர்கள் நமது குழந்தையை புரிந்துகொள்வார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே பெற்றோர்கள்தான் தங்கள் சொந்த குழந்தையின் தனித்திறனை புரிந்துகொண்டு, அதை மேம்படுத்தி, அந்த குழந்தைக்கான வாய்ப்பை, தங்களால் இயன்றளவிற்கு உருவாக்க முயல வேண்டும்.

சமூகம் வலியுறுத்தி சொல்லும் விஷயத்திற்கே பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இதன்மூலம் தங்கள் குழந்தையின் தனித்தன்மையை அழிக்கும் பெரும் தவறை அவர்கள் செய்கிறார்கள். சமூகம் பொறியியல் படிப்பிற்கு முக்கியத்துவம் தரலாம், மருத்துவ படிப்பிற்கு முக்கியத்துவம் தரலாம், ஆசிரியப் படிப்பிற்கு முக்கியத்துவம் தரலாம், வழக்கறிஞர் படிப்பிற்கு முக்கியத்துவம் தரலாம், வணிகப் படிப்பான எம்.பி.. படிப்பிற்கு முக்கியத்துவம் தரலாம். ஆனால், தங்கள் குழந்தை என்னவாக இருக்கிறது என்பதுதான் முக்கியம். அதனுடைய ஆத்ம விருப்பம் என்ன, அது என்னமாதிரியான உள்ளார்ந்த விருப்பத்தைக் கொண்டுள்ளது என்பதை அறிந்து, தங்களால் இயன்ற அளவிற்கு, அந்த குறிப்பிட்ட விஷயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அப்போதுதான் ஒரு குழந்தை சாதனையாளராக மாறும்.

மனித அறிவானது, எவ்வளவோ விஷயங்களை உள்ளடக்கியது. அவையெல்லாம் சேர்ந்ததுதான் மனித பரிணாம வளர்ச்சி ஆகும். மருத்துவம், பொறியியல், எம்.பி.. போன்றவை அதன் சிறு பகுதிகள்தான். சமூக முக்கியத்துவம் இருக்கிறது என்பதற்காக ஒரு விஷயம் உயர்ந்ததாகி விடாது. மானுடவியல் ஆராய்ச்சி, தத்துவம், மதம் சார்ந்த ஆராய்ச்சி, வரலாற்று ஆய்வு, புவியியல், உளவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், விவசாயம் போன்ற ஏராளமான துறைகள் உள்ளன. உங்களின் குழந்தை எதில் வேண்டுமானாலும் நிபுணராக இருக்கலாம். எனவே, அதற்கேற்ற குறைந்தபட்ச வாய்ப்புகளையாவது ஏற்படுத்தி தருவது பெற்றோர்களின் கடமை.

வேலைவாய்ப்பு இருக்குமா என்பது பெற்றோர்களின் பெரும் கவலையாக இருக்கலாம். அனைத்திலும் கட்டாய வேலைவாய்ப்புகள் உண்டு. பலவித வித்தியாசமான துறைகளின் வேலைவாய்ப்புகள் பற்றி கல்விமலர் இணையதளத்தில் நிறைய கட்டுரைகள் உள்ளன. எனவே, அவைகளை படித்து தெரிந்துகொண்டு, அதனடிப்படையில் தங்களின் குழந்தைகளுக்கு பெற்றோர் வாய்ப்பளிக்க வேண்டும். அப்போதுதான், குழந்தைகள் சாதனை புரிந்து, பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us