சார்லஸ் வாலஸ் உதவித்தொகை​ | Kalvimalar - News

சார்லஸ் வாலஸ் உதவித்தொகை​செப்டம்பர் 17,2021,00:00 IST

எழுத்தின் அளவு :

​இந்திய கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் அவர்களது, கலை, கல்வி மற்றும் தொழில்முறை லட்சியங்களை அடையவும், சர்வதேச தொடர்புகளை விரிவுபடுத்தவும் கடந்த 40 ஆண்டுகளாக சார்லஸ் வாலஸ் இந்தியா டிரஸ்ட், உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியா இதற்கு உறுதுணையாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.



முக்கியத்துவம்


1855ம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறந்த சார்லஸ் வாலஸ், இந்தியா மற்றும் இங்கிலாந்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். அவரது நினைவாக 1981ல் இந்திய மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சார்லஸ் வாலஸ் இந்தியா டிரஸ்ட் நிறுவப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 3000 உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.



உதவித்தொகை விபரங்கள்:


1. கலை மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு துறைகளில் உயர்கல்விக்கான உதவித்தொகை


2. வரலாற்று நிபுணர்கள் மற்றும் சமூக அறிஞர்களுக்கான விசிட்டிங் பெல்லோஷிப்


3. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்களுக்கான உதவித்தொகை



ஆகிய பிரிவுகளில் உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.



கலை மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு துறைகளில் உயர்கல்விக்கான உதவித்தொகை



கலைஞர்களுக்கான இந்த உதவித்தொகை திட்டம், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஓர் ஆண்டு முதநிலை படிப்பை மேற்கொள்வதற்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் நிபுணத்துவம் பெற இத்திட்டம் உதவுகிறது. ஒரு பல்கலைக்கழக அமைப்பை கடந்து, தங்கள் சொந்த தொழில்முறை மேம்பாட்டு திட்டத்தை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகள் மூலம் வடிவமைக்கும் நபருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவை பொதுவாக 3 முதல் 6 மாதங்கள் வரை இருக்கும்.



​​உதவித்தொகை: 


இங்கிலாந்தில் தங்குமிடம், இதர செலவுகள் மற்றும் சர்வதேச்  விமான போக்குவரத்து செலவினங்களுக்கு 600 பவுண்டுகள். உள்நாட்டு போக்குவரத்து மற்றும் காப்பீட்டு செலவுகளை விண்ணப்பதாரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.



உதவித்தொகை காலம்: 10 மாதங்கள் 



கலை பிரிவுகள்:


* விசுவல் ஆர்ட்ஸ்


* பர்பாமன்ஸ் ஆர்ட்ஸ் - நடனம், நாடகம், இசை, இயக்கம்


* பிலிம் - திரைக்கதை எழுதுதல் மற்றும் இயக்கம் உட்பட சினிமா சார்ந்த பணிகள்


* போட்டோகிராபி


* டிசைன்


* ஆர்ட்ஸ் ஹிஸ்ட்ரி



பாரம்பரிய பாதுகாப்பு:


* பாதுகாப்பு கட்டடக்கலை


* பாரம்பரிய திட்டங்கள் அல்லது தளங்களின் மேலாண்மை


* மரம், கல், உலோகம் (உலோக கட்டமைப்புகள், கவசம் மற்றும் கலைப்பொருட்கள் உட்பட), ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் படம் போன்ற பொருட்களின் பாதுகாப்பு. 


* நிலப்பரப்பு பாதுகாப்பு


* அருங்காட்சியகங்கள் மற்றும் சேகரிப்புகளின் மேலாண்மை


* பொறியியல், பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் பாதுகாப்பு 



தகுதிகள்:


* இந்தியாவில் வாழும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்


* 28 முதல் 38 வயதுக்குள் இருக்க வேண்டும்


* கடந்த ஐந்து ஆண்டுகளில் சி.டபிள்யு.ஐ.டி., மானியம் பெற்றவர்களாக இருக்கக் கூடாது


* உரிய கல்வித் தகுதி அல்லது தொழில்முறை தகுதி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிடத்தக்க பணி அனுபவம் பெற்றவராக இருப்பது வரவேற்கத்தக்கது




தேவைப்படும் ஆவணங்கள்:


* ஆங்கில மொழிப் புலமைக்கான ஐ.இ.எல்.டி.எஸ்., சான்றிதழ் 


* விண்ணப்பித்த பாடத்திட்டம் மற்றும் அவை சார்ந்த சான்றுகள்.


* இங்கிலாந்தில் எதிர்பார்க்கும் கல்வி அனுபவங்கள் மற்றும் இந்திய திரும்பிய பிறகான திட்டங்கள் ஆகியவை குறித்த சுய விளக்கம்.



தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடுத்த கட்டமாக, புதுதில்லியில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் நேர்காணல் நடத்தப்படும். அதன்பிறகு, உதவித்தொகை பெற தகுதியானவர்கள் அறிவிக்கப்படுவர்.



விபரங்களுக்கு:


இணையதளம்: https://www.charleswallaceindiatrust.com/scholarships


இ-மெயில்: cwit@in.britishcouncil.org 



வரலாற்று நிபுணர்கள் மற்றும் சமூக அறிஞர்களுக்கான விசிட்டிங் பெல்லோஷிப்



கலை மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு துறைகளில் உயர்கல்விக்கான உதவித்தொகையை அடுத்து இரண்டாவதாக இடம்பெறுவது, வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகளுக்கான உதவித்தொகை திட்டம். எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரும் இத்திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் உள்ள குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்கள் வரை தேவையான அனுபவத்தை பெறலாம். 



தகுதிகள்: 


* இந்தியாவில் வாழும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.


* 25 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். எனினும், மொழிபெயர்ப்பாளர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை


* முதுநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது குறைந்தது 5 வருட தொழில்முறை அல்லது கல்வி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


* இந்த உதவித்தொகை கால அனுபவத்தை, இந்தியாவில் பயன்படுத்தும் திட்டம் குறித்த முன்மொழிவை வழங்க வேண்டும்


* முந்தைய 5 ஆண்டுகளில் சார்லஸ் வாலஸ் உதவித்தொகையை பெற்றவராக இருத்தல் கூடாது



பங்கேற்கும் முக்கிய நிறுவனங்கள்:


தி பிரிட்டிஷ் லைப்ரரி


யுனிவர்சிட்டி ஆப் கெண்ட்


கிங்க்ஸ் காலேஜ் லண்டன்


யுனிவர்சிட்டி ஆப் ஸ்டிர்லிங்


யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா


கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி


யுனிவர்சிட்டி ஆப் லண்டன்


ஈடின்பர்க் யுனிவர்சிட்டி


குவின்ஸ் யுனிவர்சிட்டி, பெல்பாஸ்ட்


டெல்பினா பவுண்டேஷன், லண்டன் 


காஸ்வொர்க்ஸ் டிரையேங்கில் ஆர்ட்ஸ் டிரஸ்ட், லண்டன்


யுனிவர்சிட்டி ஆப் வேல்ஸ்



விண்ணப்பிக்கும் முறை: இந்த உதவித்தொகை வாய்ப்புகள் ஆண்டு முழுவதும் பரவுவதால் பொதுவான காலக்கெடு எதுவும் இல்லை. குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் காலக்கெடுவை சரிபார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 



விபரங்களுக்கு: https://www.charleswallaceindiatrust.com/visiting-fellowships



ஆராய்ச்சி உதவித்தொகை



குறுகிய கால ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் 20 பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றன. இவை, கல்வி ஆராய்ச்சியில் ஈடுபடும் அறிஞர்களுக்கு முன்னுரிமை என்றபோதிலும், கலை அல்லது பாரம்பரிய பாதுகாப்பு துறைகளில் பணிபுரியும் வல்லுநர்களும், குறுகிய கால ஆராய்ச்சி செய்ய விண்ணப்பிக்கலாம்.



​​ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் இங்கிலாந்தில் தங்குவதற்கான செலவுகளுக்கு 1,400 பவுண்டுகள் வழங்கப்படுகிறது. இந்த நிதி பொதுவாக மூன்று வார காலத்திற்கு போதுமானது. இங்கிலாந்தில் மூன்று வாரங்களுக்கு மேல் தங்க திட்டமிடும் விண்ணப்பதாரர்கள் இந்த உதவித்தொகையை மற்ற நிதியுதவியுடன் கூடுதலாக பெறலாம். இங்கிலாந்தின் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்தின் இறுதி கட்டத்தில் உள்ள இந்திய மாணவர்களுக்கும், 600 பவுண்டுகள் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 



ஆய்வு துறைகள்:


* வரலாறு


* இலக்கியம்


* தொல்லியல்


* கலை வரலாறு


* தத்துவம்


* பர்பாமிங் அண்ட் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ்


ஆகிய துறைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். குறிப்பாக, மேலாண்மை, விஞ்ஞானம், பொருளாதாரம், சட்டம், சமகால சர்வதேச உறவுகள், டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், ஆந்த்ரோபாலஜி மற்றும் பப்ளிசிங் ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுவதில்லை.



தகுதிகள்: 


* இந்தியாவில் வாழும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.


* 25 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். 


* சிறந்த ஆங்கில புலமை பெற்றிருக்க வேண்டும்.


* படிப்பை முடித்து குறைந்தது, 4 ஆண்டுகள் ஆராய்ச்சி அல்லது துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டத்தின் இறுதி கட்டத்தில் இருக்க வேண்டும்.


* இந்த உதவித்தொகை கால அனுபவத்தை எவ்வாறு பயன்படுத்த உள்ளனர் என்பதை விவரிக்க வேண்டும். உதவித்தொகை காலம் முடிந்துபின், இந்தியாவிற்கு திரும்ப சென்று இந்த அனுபவத்தை பயன்படுத்த உள்ள விதத்தையும் விளக்க வேண்டும்.


* முந்தைய 5 ஆண்டுகளில் சார்லஸ் வாலஸ் உதவித்தொகையை பெற்றவராக இருத்தல் கூடாது



விண்ணப்பிக்கும் முறை:


மின்னஞ்சல், அஞ்சல் முகவரி மற்றும் புகைப்படத்துடன் சுயவிபரம், இந்தியாவில் உள்ள தொடர்பு விவரங்கள் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். இங்கிலாந்தில் எதை பெற விரும்புகிறீர்கள் என்பதற்கான தெளிவான அறிக்கை மற்றும் என்ன ஆதாரங்களை ஆலோசிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் 3 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். விண்ணப்பதாரர்களின் பணியை நன்கு அறிந்தவர்கள் இரண்டு பேரின் விபரங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.



விபரங்களுக்கு: https://www.charleswallaceindiatrust.com/research



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us