கனடா | Kalvimalar - News

கனடா

எழுத்தின் அளவு :

உலகில் வாழத் தகுந்த 174 நாடுகளில் இயற்கை எழில் நிறைந்த கனடா நாடு முதல் 3 இடங்களுக்குள் திகழ்கிறது. சிறந்த கல்வி முறை, அதிக அளவிலான சுகாதாரச் சூழல், குறைந்த அளவிலான குற்றங்கள் மற்றும் தூய்மையானசூழல் ஆகிய காரணங்களால் பலராலும் விரும்பப்படும் நாடாக கனடா விளங்குகிறது. கனடாவில் பள்ளிக் கல்வி வரை இலவசம் தான். கல்வி நிறுவனங்ள் அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் உள்ளன.

கனடா கல்வி நிறுவனங்கள்
கனடாவின் கல்விச் சூழலில் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள், வேலைகளுக்கான சிறப்பு கல்வி நிறுவனங்கள் மற்றும் மொழிப் பள்ளிகள் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றில் சேர அடிப்படைத் தகுதியாக டோபல் தேர்ச்சி தேவைப்படுகிறது.

பொதுவான கல்வித் தகுதிகள்
  • இளங்கலை படிப்புகளில் சேர +2வில் குறைந்த பட்சம் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தொழில் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகளுக்கு +2 வரை கணிதத்தைப் படித்திருக்க வேண்டும்.
  • பட்ட மேற்படிப்புகளில் 4 ஆண்டுகள் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதிலும் குறைந்தது 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஜி.ஆர்.இ., தேர்வில் தகுதி பெற்றிருப்பதும் அவசியம்.
  • பி.எச்டி., ஆய்வுப் படிப்புகளில் சேர பட்டமேற்படிப்பு முடித்திருப்பதும் ஜி.ஆர்.இ., தகுதி பெற்றிருப்பதும் ஏற்கனவே ஆய்வோடு தொடர்புடைய படைப்புகளையும் சேர விரும்பும் பல்கலைகழகத்தில் தர வேண்டும்.
கனடா பட்டப்படிப்புக்கு இவை தான் தேவை
  • கனடா பள்ளித் தேர்வுக்கு இணையான கல்வித் தகுதி
  • ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் சிறப்புத் திறன்
  • சிறந்த பரிந்துரை கடிதங்கள்
  • ஜி.மேட் அல்லது ஜி.ஆர்.இயில் அதிக மதிப்பெண்


பொறியியல் படிப்புக்கான தேவை:
  • கனடா பொறியியல் படிப்புகள் 4 ஆண்டு கால அளவைக் கொண்டவை
  • இதில் சேர தகுதி தரும் படிப்பில் 80 சதவீதம் அல்லது ஏ கிரேடு பெற்றிருக்க வேண்டும்
  • குறிப்பாக கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்
  • டோபல் தேர்வில் 225 முதல் 250 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். டோபலுக்கு பதிலாக சில கல்வி நிறுவனங்கள் ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வு தகுதியை ஏற்றுக் கொள்கின்றன.


எம்.பி.ஏ., படிப்பில் சேர தேவை
  • கனடா எம்.பி.ஏ.,வை முழு நேர நேரடி கல்வியாகவும், பகுதி நேர கல்வியாகவும், தொலைதுõர கல்வியாகவும் குறுகிய கால கல்வியாகவும் படிக்கலாம். 
  • கல்வித் தகுதியில் குறைந்தது 70 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஜிமேட் தேர்வில் 500 முதல் 600க்குள் பெற்றிருக்க வேண்டும்
  • டோபல் தேர்வில் 225 முதல் 300 பெற்று தேர்ச்சி அல்லது இதற்கு சமமான ஐ.இ.எல்.டி.எஸ்., தகுதி. 
  • விண்ணப்பிப்பவரின் தனித் திறன், ஆளுமைத் திறன், கடந்த கால சிறப்புச் சாதனைகள் மற்றும் கல்வித் திறன் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.


சட்டம், மருத்துவம், பல் மருத்துவம் சேர:
  • கல்வித் தகுதியில் குறைந்தது 75 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
    சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 
  • நுழைவுத் தேர்விலும் தகுதி பெற வேண்டும்.


டொரண்டோ பல்கலைக்கழகம்
இது இந்திய மாணவர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் மற்றும் தொழிற்படிப்புகள் புகழ் பெற்றவை. ஆய்வுக்கு முக்கியத்துவம் தரும் பல்கலைகழகம் இது. தனி நபரின் சுதந்திரத்தை இந்த பல்கலைக்கழகம் கவனமாக கையாளுகிறது. மனித உரிமையை அடிப்படையாகக் கொண்ட கல்வி, கேள்வி கேட்டு ஞானம் பெறும் உத்தி என இதன் செயல்பாடுகள் பன்னாட்டு அளவில் பேசப்படுகிறது. அளவில் மிகப் பெரிய பல்கலைக்கழகமாக இருப்பதால் இதன் செயல்பாடுகளும் பிரம்மாண்டமாகவே இருக்கிறது. மனித வளத் துறை, சமூக அறிவியல், அறிவியல், தொழிற்கல்வி என பரந்து விரிந்திருக்கும் இதன் துறைகள் பிரமிப்பூட்டுபவை.
பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களை எடுத்துக் கொள்ளும் போது கடந்த கால கல்வித் திறன், படைப்புகள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவை மிகவும் கவனமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதில் எம்.பி.ஏ. படிக்க விரும்புபவர்கள் ஜிமேட் தகுதி தவிர முழுமையான முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என பல்கலைகழகம் நிர்ணயித்திருக்கிறது. பன்னாட்டு மாணவர்கள் கூடுதலாக ஆங்கிலத் திறனை நிருபிக்க வேண்டியிருக்கிறது. இந்த பல்கலைகழகத்தின் மாணவர் மற்றும் கல்வித் தரத்துக்கு நிகரான கல்வித் திறன்களை அவர்கள் பெற்றிருக்கிறார்களா என்பதை டொரண்டோ பல்கலைகழகம் தீவிரமாக பரிசீலிக்கிறது.
இதில் பட்டப்படிப்புக்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை ஆகிறது. எம்.பி.ஏ. படிப்புக்கு ரூ.15 லட்சம் வரை செலவாகிறது. பள்ளி இறுதி நிலை படிப்புகளாக கலை மற்றும் அறிவியல் பாடங்களைப் படிக்கலாம். பட்டப்படிப்புகளாக பிசினஸ் மேனேஜ்மென்ட், இன்ஜினியரிங் மற்றும் பிற பிரிவுகளைப் படிக்கலாம். பல்கலைக்கழக வளாகத்திலேயே விடுதி அமைந்திருப்பதால் அங்கே தங்கி படிக்கலாம். என்றாலும் வெளியே தங்கி படிப்பதே குறைவான செலவை உள்ளடக்கியிருக்கிறது.

வாட்டர் லும் பல்கலைக்கழகம்
இந்த பல்கலைக்கழகம் புதுமைகளைப் புகுத்துவதற்காக அறியப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக கனடாவின் ஒட்டு மொத்த சிறந்த பல்கலைக்கழகமாக இது சிறந்து விளங்குகிறது. துரிதமாக எதையும் கற்றுக்கொள்ளும் சூழலை இந்த பல்கலைக்கழகம் தருகிறது. இங்கு பாடம் நடத்துவதும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளும் சர்வதேச அளவில் மிகவும் உயர்வானதாக இருக்கிறது. எந்த பிரிவில் படித்தாலும் கம்ப்யூட்டர் திறனானது சிறப்பான அடிப்படைத் திறனாக போதிக்கப்படுகிறது. இங்குள்ள நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தும் ஆய்வகங்களும் நூலகங்களும் இதனால் பெறும் தகவல்களும் வேறு எங்கும் காண முடிவதில்லை.
அப்ளைட் ஹெல்த் சயின்ஸ், கலை, பொறியியல், சூழல் கல்வி, கணிதம், அறிவியல், அக்கவுன்டன்சி, ஆப்டோமெட்ரி, ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிளானிங் போன்றவற்றை ஆய்வு அடிப்படையில் கற்றுக் கொள்ளலாம். தனியார் துறைக்கு நவீன உத்திகளையும் தொழில் நுட்பத்தையும் கற்றுத் தருவது இந்த பல்கலைகழகம் தான்.  இதன் கூட்டுறவுப் படிப்பும் புகழ் பெற்றது.
பட்டப்படிப்புக்கு முந்தைய படிப்புகளுக்கு கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.3.5 லட்சத்திலிருந்து 7 லட்சம் வரை பெறப்படுகிறது. பட்டப்படிப்புக்கு ரூ.5 லட்சத்திலிருந்து 14 லட்சம் வரை ஆகிறது. பல்கலைக்கழக வளாகத்திலேயே விடுதி அமைந்திருப்பதால் அங்கே தங்கி படிக்கலாம். என்றாலும் வெளியே தங்கி படிப்பதே குறைவான செலவை உள்ளடக்கியிருக்கிறது.

கொலம்பியா பல்கலைக்கழகம்
பிசினஸ் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான இந்த பல்கலைக்கழகம் அறியப்படுகிறது. கனடாவின் வான்கூவர் நகரத்தில் அமைந்திருக்கிறது இந்த பல்கலைக்கழகம். உலகின் தலை சிறந்த 40 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இதன் மாணவர்களின் புத்தி கூர்மை, ஆசிரியர்களின் நடத்தும் திறன், பல்கலைக்கழக ஊழியர்களின் சிறப்புத் திறன் ஆகிய காரணங்களால் இந்த பல்கலைக்கழகமானது கலை, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. இதில் தற்போது சுமார் 45 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். இதன் வளாகத்திற்குள் தற்போது தனி சிறப்பு நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு மேம்பட்ட சமூகம் இயங்குகிறது. ஜப்பான், கொரியா மற்றும் மெக்சிகோ நாட்டு மாணவர்கள் பலர் இதை உருவாக்குவதில் பெரும் பங்காற்றி வருகிறார்கள். விரைவில் ஹாங்காங்கில் இதன் அலுவலகம் திறக்கப்படவுள்ளது.  பட்டப்படிப்புக்கு கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.7.8 லட்சம் பெறப்படுகிறது. எம்.பி.ஏ., படிப்புக்கு 13 லட்சம் வரை ஆகிறது. பல்கலைக்கழக வளாகத்திலேயே விடுதி அமைந்திருப்பதால் அங்கே தங்கி படிக்கலாம். என்றாலும் வெளியே தங்கி படிப்பதே குறைவான செலவை உள்ளடக்கியிருக்கிறது.

கனடாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள்

  • வாட்டர்லும் பல்கலைக்கழகம்
  • டொரண்டோ பல்கலைக்கழகம்
  • மெக்கில் பல்கலைக்கழகம்
  • சைமன் பிரேசர் பல்கலைக்கழகம்
  • கார்லடன் பல்கலைக்கழகம்
  • மாண்ட்ரீல் பல்கலைக்கழகம்
  • குவீன்ஸ் பல்கலைக்கழகம்
  • பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்
  • கன்கார்டியா பல்கலைக்கழகம்
  • ஆல்பர்டா பல்கலைக்கழகம்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us