உற்சாகமாக உச்சரியுங்கள் வெற்றி மந்திரத்தை | Kalvimalar - News

உற்சாகமாக உச்சரியுங்கள் வெற்றி மந்திரத்தை

எழுத்தின் அளவு :

நீங்கள் தற்போது பார்ப்பதை விட சிறந்த பணியை பெற விரும்புகிறீர்களா?
உங்களின் ஆர்வம், திறமை மற்றும் எதிர்கால வாழக்கைக்கு ஏற்ப தொழிலை அமைக்க விரும்புகிறீர்களா? இதற்கு ஒரே வழி திட்டமிட்டு செயல்படுதலே.

உங்களுக்கு பிடித்த தொழிலை மறக்காமல், குறைத்து மதிப்பிடாமல் தொடர்ந்து செயல்படுதல்வேண்டும். செயல்பாடுகளில் கவனமுடன் இருக்கும் போது வெற்றி உங்கள் கையில்.

வெற்றிக்கான மந்திரத்தின் சாவிகள்:
1.முடிவு எடுத்தல்
2.திட்டமிடுதல்
3.உறுதியாக இருத்தல்
4.ஒழுக்கம்
5.நிலைப்புத் தன்மை

முடிவு எடுத்தல்
நமது ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பயன் உண்டு. ஒரு முடிவை எடுக்கும்போது பல முறை மனதுக்குள் ஆராய்ந்து கவனமாக எடுக்க வேண்டும். தவறான முடிவு, சிறந்த பயனைத் தராது. பலர் வாழக்கையில் தோல்வியை சந்திப்பது, தவறான முடிவு எடுப்பதால் தான்.

உதாரணமாக, உங்களுக்கு அறிவியலில் ஆர்வம் குறைவு என்று எடுத்துக்கொள்வோம், உங்களின் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு ஆட்பட்டு +2வில் அறிவியல் பாடம் பயின்று வெற்றி பெற்றாலும் கூட அப்பாடம் எதிர்கால வாழக்கையை சிறப்பாக அமைக்காது.

திட்டமிடுதல்
இது வெற்றிக்கான இரண்டாவது படி. திட்டமிடலில் குறை இருக்கும் போது எதிர்பார்த்த பயன் இருக்காது. எதையும் திட்டமிட்டு செயல்படும் போது எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எடுத்துக்காட்டாக, ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வுக்கு தகுந்த நேரத்தில் திட்டமிட்டு படிக்கும் போது தேர்வில் நல்ல ரேங்க் எடுத்து வெற்றி பெறுவீர்கள்.

குறைவான திட்டமிடல் மற்றும் சரியாக செயல்படாத போது நேரம், பணம் அதிகம் செலவாகும். எடுத்துக்காட்டாக, தேர்வுக்கு முன் திட்டமிட்டு படிக்கும் போது வெற்றி அதிகம். இருப்பினும் அதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் இந்த திட்டமிடல் அடுத்த கட்ட தேர்வுக்கு உதவியாக இருக்கும்.

உறுதியாக இருத்தல்
புத்தர், இயேசு, அலெக்சாண்டர், மகாத்மா காந்தி, நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றவர்கள் தங்களின் முடிவு, திட்டமிடலில் உறுதியாக இருந்ததால்தான் வெற்றி பெற்றார்கள். அதுபோல் உங்களின் திட்டமிடுதலில் உறுதியாக இருந்தால் வெற்றியை எளிதாக பெறலாம்.

ஒழுக்கம்
ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை தோல்வியை தழுவும். எடுத்துக்காட்டாக, டாக்டராக வேண்டும் என்று முடிவு எடுத்து படிக்கும் போது, ஒழுக்கம் இல்லையென்றால் கடின உழைப்பை அழித்து விடும்.

நிலைப்புத்தன்மை
விரும்பும் பயனைப் பெற, அனைத்து செயல்பாடுகளிலும் நிலைப்புத் தன்மை அவசியம். எடுத்துக்காட்டாக, தினமும் ஐந்து மணி நேரம் படிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படும் போது இடையில் இரண்டு நாட்கள் படிக்கவில்லை என்றால் உங்களின் முடிவு எடுத்தல், திட்டமிடல், ஒழுக்கத்தில் நிலைப்புத் தன்மை இல்லை என்றே பொருள். எனவே, இம்மந்திரங்களை சரியாக கையாளும் போது, வாழ்வில் ஒவ்வொரு நொடியும் வெற்றி மயம்தான் .

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us