கல்விக்கடன் பெறுவதற்கான ஆலோசனை | Kalvimalar - News

கல்விக்கடன் பெறுவதற்கான ஆலோசனை

எழுத்தின் அளவு :

கல்விக் கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் விருத்தாசலம் ஆலோசனை வழங்கினார்.

தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலையுடன் இணைந்து, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக, வழிகாட்டி எனும் உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

"அது சரி...! படிக்க நிறைய செலவு ஆகுமே என்ற கவலையா?" எனும் தலைப்பில், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் விருத்தாசலம் பேசியதாவது: மாணவர்களுக்கு பணம் இல்லை என்பதால், கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில், முழு முனைப்புடன் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் கல்விக் கடன் திட்டம். நாட்டில் 25 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. இவற்றில், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., மெடிக்கல், இன்ஜி., உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளுக்கும் வங்கிகள் கல்வி கடன்களை வழங்குகின்றன. பொதுத் துறை வங்கிகளிடம், சிறப்பு படிப்புகளுக்கு மட்டும் கல்விக் கடனை பெற முடியாது.

வங்கிகளிடம் கல்விக் கடனை பெறும் முன், இருக்கும் தேவையான ஆவணங்களை முதலிலேயே தயார் செய்து வைத்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கு வேண்டும். உள்நாட்டில் படிக்கும் படிப்புகளுக்கு 10 லட்சமும், வெளிநாட்டில் உள்ள படிப்புகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. வங்கி கடன்களை திருப்பிச் செலுத்த அதிகபட்சமாக ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை கால அவகாசத்தை வங்கிகள் வழங்குகின்றன.

கல்விக் கடனை பெற விரும்பும் மாணவர்கள், வங்கி பணிகள் அதிகம் இருக்கும் நாட்களைத் தவிர்த்து அணுகினால், கல்விக் கடன் பெறுவதில் இருக்கும் நடைமுறைகள் மற்றும் வழங்க வேண்டிய ஆவணங்கள் என, அனைத்து விவரங்களையும் எளிதில் அறிந்து, கடனை பெற உதவியாக இருக்கும். கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை இல்லாமல் எளிதில் வெற்றி பெற முடியாது என்பதை மாணவர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு விருத்தாசலம் பேசினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us