நியூசிலாந்து | Kalvimalar - News

நியூசிலாந்து

எழுத்தின் அளவு :

தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த நாடு நியூசிலாந்து. 38 லட்சம் மக்கள் தொகையை கொண்டிருக்கிறது இந்த நாடு.பசுமையான விளை நிலங்களையும் சிறந்த கடற்கரைகளையும் பனி படர்ந்த மலைச் சிகரங்களையும் மட்டுமன்றி பாலைவனங்களையும் கொண்டிருக்கிறது நியூசிலாந்து. ஐரோப்பிய கலாசாரத்தைக் கொண்ட நியூசிலாந்து மக்கள் நட்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் தனி மனித சுதந்திரம் கொண்டவர்களாக திகழ்கிறார்கள்.

மிகச் சிறப்பான தரம் வாய்ந்த கல்வியைத் தரும் நியூசிலாந்தில் படிப்பதற்கான பாதுகாப்பான சூழல் நிலவுவது இதன் சிறப்பம்சம் எனக் கூறலாம்.
நியூசிலாந்து கல்வியின் சிறப்பு
  • புதிய சிந்தனைகளுக்கு மதிப்பு தருவதோடு சுய சிந்தனையாளர்களை ஊக்குவிப்பதிலும் நியூசிலாந்து கல்வியாளர்கள் முதன்மை பெற்றவர்கள்.
  • நியூசிலாந்தின் கல்வி முறை பிரிட்டனின் கல்வி முறையை தழுவியது.
  • மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட நாடு என்பதால் பல்கலைகழகங்களில் ஆசிரியர்மாணவர் இடையேயான உறவானது வெளிப்படையாகவும் நெருங்கியதாகவும் இருக்கிறது. இதனால் முழுமையான கல்வி பெறுவது எளிதாகிறது.
  • பல்வேறு கலாசார மக்கள் இங்கு வாழ்வதால், நியூசிலாந்து மக்களின் இயல்பான நட்புணர்வு, அவர்களின் எளிய வாழ்க்கை நெறிகள், திறந்த மனதுடைய போக்கு ஆகியவை வெளிநாட்டு மாணவருக்கு பாதுகாப்பான மற்றும் வெகுவாக நமக்குப் பிடிக்கக்கூடிய கல்வியை உறுதி செய்கிறது.
  • நியூசிலாந்தில் தரப்படும் பயோடெக்னாலஜி, பாரன்சிக் சயன்ஸ், மரைன் இன்ஜினியரிங் போன்ற படிப்புகள் சர்வதேச தரத்தில் மிக மேம்பட்டவை.
  • கல்வி நிறுவனங்களுக்கு அருகில் தங்கி பயிலும் வாய்ப்பு, சிறப்பான போக்குவரத்து வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், உயர்ந்த தரத்திலான உணவு விடுதிகள் போன்றவற்றை நியூசிலாந்தில் மட்டுமே காண முடியும்.
  • ஸ்கீயிங், கெனோயிங், சர்பிங், டிரம்பிங், மவுண்டன் பைக்கிங் போன்ற பரவசமூட்டும் இயற்கையை ஒட்டிய விளையாட்டுக்கள் கூடுதலாக நமக்குக் கிடைக்கின்றன.
  • படிக்கும் போதே சம்பாதிக்கும் வாய்ப்புகளை நியூசிலாந்து பட்டப்படிப்புகள் அளிக்கின்றன. எனினும் பட்ட மேற்படிப்பின் போது இது அனுமதிக்கப்படுவதில்லை.
கல்வி முறை
நியூசிலாந்தின் கல்வி முறை 1870களில் பிரிட்டனின் பல்கலைகழகங்களின் மாதிரியில் உருவாக்கப்பட்டது. இங்கு அரசால் 8 பல்கலைகழகங்கள் நடத்தப்படுகின்றன. சிறப்பான கல்வி முறைக்காகவும், தரமான ஆராய்ச்சிச் சூழலுக்காகவும் நியூசிலாந்து கல்வி உலகப் புகழ் பெற்றது.
பல்கலைகழகங்கள் தவிர, பாலிடெக்னிக் கல்லூரிகள், இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தனியார் கல்வி நிறுவனங்கள் நியூசிலாந்தில் செயல்படுகின்றன. படிக்கும் வாய்ப்பைத் தாண்டி நியூசிலாந்திலேயே பணி புரியும் வாய்ப்பும் தரப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை மற்றும் www.immigration.govt.nz தளங்களிலும் பார்த்துக் கொள்ளலாம்.

கட்டணம் எப்படி?
நியூசிலாந்தில் கல்விக்காக ஆகும் செலவு, பிற வளர்ந்த நாடுகளில் படிப்பதற்காக ஆகும் செலவை விட குறைவு தான். இங்கு பெறப்படும் கல்விக் கட்டணத்தில் பாதித் தொகை மாணவர்களின் சுகாதாரம், வரி, மொழி மற்றும் கல்வியக வசதிகளுக்காகப் பெறப்படுகிறது. கல்விக் கட்டணத்தை முதலில் செலுத்த வேண்டும். பல்கலைகழகத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் விண்ணப்பத் தொகை மற்றும் பரிசீலனைத் தொகை தவிர பிற கட்டணங்கள் திருப்பித் தரப்படும். ஆனால் படிப்பு தொடங்கியபின்பு திருப்பித் தரப்படமாட்டாது. பட்டப்படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் முதல் 8 லட்சம் வரை செலவாகிறது. பட்ட மேற்படிப்புக்கு ரூ.15 லட்சம் வரை ஆகலாம். தங்குவதற்கு 6 லட்சம் வரை செலவாகிறது. நியுசிலாந்தில் உள்ளூர் தொலைபேசி கால்களுக்குக் கட்டணம் கிடையாது.

ஆங்கிலமே அடிப்படை
நியூசிலாந்து கல்விக்கு அடிப்படை ஆங்கிலத் திறனே. ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வில் 6க்கு 5.5 மதிப்பெண் பெற்றவரே நியூசிலாந்தில் கல்வி பயில தகுதியானவர்கள். ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவது மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள் பரிசோதிக்கப்படுகிறது.

நியூசிலாந்தில் கல்வி தரப்படுவது இவற்றில் தான்..
  • விவசாயம், ஹார்ட்டிகல்ச்சர், காடு வளர்ப்பு, வேட்டையாடுதல், சுரங்கவியல்
  • போக்குவரத்து
  • சுகாதாரம் மற்றும் சமூகக் கல்வி
  • இன்ஜினியரிங்
  • டூரிசம்
  • அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல்
  • கம்ப்யூட்டர் சயின்ஸ்
  • இன்சூரன்ஸ்
  • பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன்
  • கலாசாரம், தகவல் மற்றும் பொழுதுபோக்குத் துறை
  • சட்டப்படிப்புகள்
  • பாதுகாப்புத் துறை
  • உற்பத்தியியல்
இனி சில சிறந்த நியூசிலாந்து பல்கலைகழகங்களைப் பார்க்கலாம்.

ஆக்லாந்து பல்கலைக்கழகம்
இது நியூசிலாந்தின் மிகப் பெரிய பல்கலைகழகமாகும். 1883ல் தொடங்கப்பட்ட இது ஆராய்ச்சித் துறைக்காக பெயர் பெற்றது. உலகளாவிய அங்கீகாரத்துடன் செயல்படுகிறது. ஆய்வு மற்றும் சேவையில் மிக உயரிய தரத்தை எட்ட வேண்டும் என்ற நோக்கில் நிறுவப்பட்டது.

சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார மாறுபாடுகளை உள்ளீர்த்து இங்கு பயிலும் மாணவர்களும் அதை உணர்ந்து செயல்படக் கூடிய சந்ததியினராக மாற்ற இது முயலுகிறது. நியூசிலாந்தின் பெரிய நகரமான ஆக்லாந்தில் இது அமைந்திருக்கிறது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள்.

கலை, தொழில் நிர்வாகம், பொருளாதாரம், கல்வியாளர் கல்வி, இன்ஜினியரிங், சட்டம், மருத்துவம் மற்றும் அறிவியல் போன்ற பிரிவுகளில் படிப்புகள் தரப்படுகின்றன. இவை தவிர இறையியல் படிப்பும் தரப்படுகிறது. இதில் 80 நாடுகளைச் சேர்ந்த 4000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பல்கலைகழகத்திற்கு ஒரு லட்சம் பழைய மாணவர்கள் உள்ளனர். இதில் 20000 பேர் வெளிநாட்டு மாணவர்கள்.

கேன்டர்பரி பல்கலைக்கழகம்
நியூசிலாந்தின் தெற்கு தீவுப் பகுதியிலுள்ள கிரைஸ்ட் சர்ச் பகுதியில் இது அமைந்திருக்கிறது. இந்த பல்கலைகழகம் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி, ஆழ்ந்த கல்விப் பயிற்சி, மிகச் சிறந்த கல்விச் சூழல் மற்றும் பன்னாட்டு மாணவர்கள் படிப்பது என பல சிறப்புகளைப் பெற்றுள்ளது.
இந்தியா போன்றே கலை, வணிகவியல், அறிவியல் போன்றவற்றில் பட்டப்படிப்புகளும் அறிவியல் புலத்தில் ஹானர்ஸ் படிப்புகளும் தரப்படுகிறது. முதல் ஆண்டிலேயே பாடத்தைத் தேர்வு செய்யாமல், திறனைப் பொறுத்து 2ம் ஆண்டு விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்யும் வசதி தரப்படுகிறது. இது தவிர, இன்ஜினியரிங், கலை, வனவியல், சமூகப் பணி, மொழி போன்றவற்றில் தொழில் படிப்புகளும் உண்டு. இது தவிர 4 ஆண்டுகளில் முடிக்கக் கூடிய சட்டப்படிப்பு, இசைப் படிப்பு, கல்வியியல் போன்ற படிப்புகளும் தரப்படுகின்றன.

விக்டோரியா பல்கலைக்கழகம்
பிரிட்டனின் மகாராணியான விக்டோரியா ராணியின் வைர விழாவை கௌரவிக்கும் விதத்தில் அவரது பெயர் சூட்டப்பட்டு தொடங்கப்பட்டது இப்பல்கலைகழகம். நியூசிலாந்தில் கவுரவமிக்கதும் புகழ் பெற்றதுமாக இது திகழ்கிறது. சிறப்பான தலைமைப் பண்புகளைக் கொண்ட மாணவர்களை உருவாக்குவதற்காக பெயர் பெற்றது. இங்கு பல்வேறு புலங்களில் மிகச் சிறந்த ஆசிரியர்களால் கல்வி போதிக்கப்படுவதோடு மாணவர்களின் தரமும் உலக அளவில் அறியப்படுகிறது. இங்கு கட்டடவியல், வடிவமைப்பு, மானுடவியல், சமூக அறிவியல், சட்டம், அறிவியல், இன்ஜினியரிங், கல்வியியல், வணிகவியல் மற்றும் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் ஆகிய துறைகள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.
நியூசிலாந்து கல்விக்கு இவை தான் தேவை: எந்த பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்கிறோமோ அதற்கு விண்ணப்பித்து அதில் சேருவதற்கான அனுமதியைப் பெறுவது முதல் படி. படிப்பு தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே இதற்கான முயற்சி தேவை. ஐ.இ.எல்.டி.எஸ்., அல்லது டோபல் தேர்வில் தகுதி பெற்றிருப்பதும் முக்கியம். பின்பு நியூசிலாந்தின் தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விசா பெற வைத்திருக்க வேண்டியது என்ன?
  • பாஸ்போர்ட்
  • கல்வித் தகுதிக்கான ஆதாரங்கள்
  • படிக்க விரும்பும் நியூசிலாந்து
    பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட ஆணை
  • ஐ.இ.எல்.டி.எஸ்.,/டோபல் ஸ்கோர் பட்டியல்
  • கல்விச் செலவு/விடுதிச் செலவு/போக்குவரத்துச் செலவு போன்றவற்றை சந்திக்கும் பொருளாதார சக்திக்கான ஆதாரம் அல்லது நியூசிலாந்து படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளும் ஸ்பான்சரின் கடிதம்
  • தேவைப்படுவோருக்கு மருத்துவத் தகுதிச் சான்றிதழ்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us