ஆடியாலஜிஸ்ட், ஸ்பீச் அண்டு லாங்குவேஜ் தெரபி | Kalvimalar - News

ஆடியாலஜிஸ்ட், ஸ்பீச் அண்டு லாங்குவேஜ் தெரபி

எழுத்தின் அளவு :

மொழியை கற்றுக்கொள்ளவும், பேசவும் கேற்கும் திறன் மிகவும் முக்கியம். இதில் ஏற்படும் குறைபாடுகளை பற்றிய படிப்பே ஆடியாலஜி. நோயாளிகளுக்கு கேட்கும் திறனில் ஏற்பட்ட குறைபாடுகளை கணித்து, அவர்களை பழைய நிலைக்கு மீட்பது பற்றி ஆடியாலஜியில் கற்றுத்தருகின்றனர். குழந்தைகளே பெரும்பாலும் நோயாளிகளாக உள்ளனர். விபத்து, நோய், உளவியல் ரீதியான பாதிப்புகளால் பேச்சு குறைபாடுகளை சந்திக்கும் பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சரியாக பேசவும், கேட்கவும் இயலாதவர்களுக்கும் மொழியை கையாளுவதில் சிரமப்படுபவர்களுக்கும் திக்குவாய், உச்சரிப்பு குறைபாடு, பேச கற்றுக்கொள்ள சிரமப்படும் குழந்தைகளுக்கும் இவர்கள் உதவுகின்றனர். குரல்வளை நீக்கப்பட்டவர்களுக்கும் பேச கற்றக்கொடுக்கின்றனர். ஆடியோலஜிஸ்ட் ஆடியோ மீட்டரை உபயோகிக்கின்றனர். இதன் மூலமாக எந்த அளவு உரத்த சத்தத்தை நோயாளிகளால் கேட்க முடிகிறது என்பதையும், ஒலிகளை வேறுபடுத்த முடிகிறதா என்பதையும்இவர்கள் அறிகின்றனர். இதன் மூலமாக குறைபாட்டின் அளவையும், தீவிரத்தையும் கண்டுபிடிக்கின்றனர்.

நோயாளிகளின் தனிப்பட்ட, உளவியல் ரீதியான தகவல்களுடன் இவற்றை ஒப்பிட்டு, சிகிச்சை பற்றி முடிவெடுக்கின்றனர். இதற்கான சிறப்பு கருவிகளின் உதவியுடன் பேச்சு சோதனை நடத்தி குறைபாடுகளை பதிவு செய்துகொள்கின்றனர். முழுவதுமாக பேசும் திறனை இழந்து விட்டவர்களுக்கு சைகை மொழி கற்றுத்தருகின்றனர். மற்றவர்களுக்கு ஒலிகளை உருவாக்குவது, குரலை மேம்படுத்துவது, மொழித்திறனை அதிகரிப்பது பற்றியும் கற்றுத்தருகின்றனர்.

நோயாளிகளுக்கு மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தினருக்கும் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சிகிச்சைக்கு ஏற்ப அவர்களுடன் பழக வேண்டிய முறை பற்றி அறிவுரை தருகின்றனர். ஒரு சில குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஆடியாலஜி, லாங்குவேஜ் அண்டு ஸ்பீச் தெரபிஸ்ட் சிகிச்சை அளிக்கின்றனர். நரம்பியல் பாதிப்பு,கேட்கும் திறன், கற்கும் திறன் குறைபாடு கொண்டவர்களுக்கே இவர்களால் உதவ முடியும்.

ஸ்பீச் பேட்டர்ன்ஸ், பேத்தாலஜி, ஹியரிங் எய்ட் தெராபிடிக்ஸ், பொனிட்டிக்ஸ், அனாட்டமி, பிசியாலஜி, சைக்காலஜி, நியூராலஜி, ஆடியாலஜி, பிசிக்ஸ் ஆப் சவுண்ட், டிசீஸ் ஆப் த இயர், நோஸ் அண்டு துரோட் போன்ற பாடங்கள் ஆடியாலஜி, ஸ்பீச் அண்டு லேங்குவேஜ் தெரபியில் கற்றுத்தருகின்றனர். படிப்பின் போதே செய்முறை பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. முதலில் நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதை கவனிக்கவும், பின் சிகிச்சையின் போது தெரபிஸ்ட்களுக்கு உதவி செய்யவும் அனுமதிக்கின்றனர்.

ஆடியாலஜிஸ்ட், ஸ்பீச் அண்டு லேங்குவேஜ் தெரபிஸ்ட்களுக்கு ஆஸ்பத்திரி, உடல் ஊனமுற்றவர்களுக்கான சமுதாய கூடங்கள், நலவாழ்வு மையங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. தனியாக கிளினிக் அமைத்து சிகிச்சை அளிக்கவும் முடியும். பெரிய தொழிற்சாலைகள் ஒலிமாசுபாடு குறித்து கண்காணிக்க இவர்களை பணிக்கு அமர்த்துகின்றன. இதில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆசிரியராகவோ, ஆய்வாளராகவோ, நிர்வாக பொறுப்புகளிலோ பணியாற்ற முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us