பங்குச் சந்தை பணிவாய்ப்புகள் எப்படி? இதற்கு எதைப் படிக்க வேண்டும்? | Kalvimalar - News

பங்குச் சந்தை பணிவாய்ப்புகள் எப்படி? இதற்கு எதைப் படிக்க வேண்டும்?ஜனவரி 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

நிறுவனங்களும் அரசும் தங்களது எதிர்கால செயல்பாட்டுக்குத் தேவைப்படும் நிதியைப் பெற பங்குகளை வெளியிடுகின்றன. இவற்றை பங்குச் சந்தையில் வெளியிடுகின்றன. பிரைமரி மற்றும் செகண்டரி எனப்படும் 2 பிரிவுகளாக பங்குகள் விற்கப்படுகின்றன. ஒரு நிறுவனத்தின் புதிய பங்குகள் பிரைமரி மார்க்கெட் முறையிலும் பழைய பங்குகளில் வணிகம் நடத்துவது செகண்டரி மார்க்கெட் முறையிலும் வாங்கி விற்கப்படுகின்றன.

இத்துறையில் விற்பனை, பைனான்சியல் அசிஸ்டண்ட், பர்சனல் பைனான்சியல் அட்வைசர், ஸ்டாக் புரோக்கர் போன்ற பல்வேறு பணி வாய்ப்புகள் இருக்கின்றன. சட்ட நுணுக்கங்கள், காப்பீடு, வங்கிச்சேவை, கணிதவியல் திறன், உத்தி, விற்பனைத் திறன், விற்பனைக்குரிய பொருட்களைப் பற்றிய நுண்ணறிவு போன்ற திறமைகள் உள்ளதைப் பொறுத்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.

இத்துறையில் மிளிர, நல்ல கணிதத் திறன் மற்றும் பகுத்து ஆராயும் திறன் ஆகியவை தேவை. சந்தை செயல்பாடு பற்றிய சரியான யூகங்கள், மனிதர்களுடன் எளிதில் பழகும் தன்மை போன்றவை ஸ்டாக் புரோக்கர்களுக்குத் தேவை. சந்தை நிலவரத்திற்கேற்ப உடனடியாக முடிவெடிக்கும் திறமை, துல்லியமான அனலிடிகல் திறன், பேரம் பேசி விற்கும் திறன் இருந்தால் டிரேடிங் பணியில் ஈடுபடலாம். மொத்தத்தில் குழுவாகப் பணி புரியும் தன்மை, சுய நம்பிக்கை, கம்ப்யூட்டர் திறன், கடினமான சூழலிலும் அமைதியாகப் பணி புரியும் சுபாவம் ஆகியவற்றைப் பெற்றிருப்பவருக்கு இது நல்ல துறையாக விளங்கும்.

காமர்ஸ், அக்கவுண்டன்சி, பொருளாதாரம், நிதி மற்றும் நிர்வாகவியல் படித்தவருக்கு இத்துறை பொருத்தமானது என்றே கூறலாம். எம்.பி.ஏ.,வெல்த் மேனேஜ்மென்ட், பைனான்சியல் இன்ஜினியரிங், ஸ்டாக் மார்க்கெட் பிரிவில் பட்ட மேற்படிப்பு படிப்புகள் இதற்கு உங்களை தகுதியானவராக மாற்றும். சி.சி.ஏ.பி., எனப்படும் சூகிரைஸில் சர்டிபைட் அனலிஸ்ட் புரொகிராம்’ படித்தவர்கள் இத்துறையில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம். இந்தியாவின் முன்னணி பிசினஸ் நிறுவனங்கள் இன்று இத்துறையோடு தொடர்புடைய சிறப்புப் படிப்புகளை நடத்துகின்றன.

பி.எஸ்.இ., பயிற்சி நிறுவனம், ஜம்னாலால் பஜாஜ் நிர்வாகவியல் பள்ளி ஆகிய நிறுவனங்களும் இதில் சிறப்புப் படிப்புகளை நடத்துகின்றன. இன்றைய பொருளாதாரச் சூழலில் வெல்த் மேனேஜ்மென்ட் போன்ற நிதி தொடர்புடைய படிப்புகள் சிறப்புப் பெற்றிருக்கின்றன. பங்குச் சந்தைகளுக்கு இன்று இத்துறையின் நுணுக்கங்களை அறிந்த திறனாளர்கள் தேவை. எனவே ஸ்டாக் மார்க்கெட் தொடர்பான படிப்புகளைப் படிப்பது நிச்சயம் நல்ல வாய்ப்புகளைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us