மெல்ல மறைகிறது அச்சு பலகை தயாரிப்பு தொழில்: தவிக்கும் தொழிலாளர்கள் | Kalvimalar - News

மெல்ல மறைகிறது அச்சு பலகை தயாரிப்பு தொழில்: தவிக்கும் தொழிலாளர்கள்மார்ச் 23,2024,10:32 IST

எழுத்தின் அளவு :

உடுமலை: கரும்பு சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் குறைந்து வருவதுடன், வெல்லம் உற்பத்தியும் முற்றிலுமாக சரிந்துள்ளதால், அச்சுப்பலகை தயாரிக்கும் தொழிலாளர்கள் வேலையிழந்து பாதித்து வருகின்றனர்.


உடுமலை ஏழு குள பாசன திட்ட பகுதிகளான போடிபட்டி, பள்ளபாளையம், வடபூதனம், தளி, வாளவாடி சுற்றுப்பகுதிகளில், பல ஆயிரம் ஏக்கரில், கரும்பு சாகுபடியாகி வந்தது. குறிப்பிட்ட சதவீதம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விற்பனை செய்தாலும், வெல்லம் உற்பத்தியும் அப்பகுதியில், பிரதானமாக இருந்தது.


விளைநிலங்களில், வெல்லம் உற்பத்திக்காக, கிரஷர் அமைத்து, சீசன்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது.


பல்வேறு காரணங்களால், கரும்பு சாகுபடி வெகுவாக குறைந்து விட்டது; பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு மாறி விட்டனர். இதனால், ஓணம் சீசனில் மட்டும், வெல்லம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


இந்நிலையில், வெல்லத்துக்கும் நிலையான விலை கிடைக்கவில்லை; கேரளா வர்த்தகமும் சில ஆண்டுகளாக குறைந்து விட்டது.எனவே, விளைநிலங்களில், கிரஷர் அமைத்து வெல்லம் உற்பத்தி செய்பவர்களும் மாற்றுத்தொழிலுக்கு செல்லத்துவங்கி விட்டனர். அது சார்ந்த பிற தொழிலாளர்களும் வேலையிழந்து வருகின்றனர்.


அவ்வகையில், வெல்லம் உற்பத்திக்கான அச்சுப்பலகை தயாரிக்கும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்புச்சாற்றை, பெரிய பலகையில், அமைந்துள்ள அச்சுகளில் ஊற்றியே வெல்லம் தயாரிக்கின்றனர்.


இதற்கான பலகைகள், பிரத்யேகமாக உடுமலை, பள்ளபாளையம் உள்ளிட்ட இடங்களில் தயாரிக்கப்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வந்தனர். தற்போது ஆர்டர்கள் இல்லாமல், அத்தொழிலாளர்கள் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.


அவர்கள் கூறியதாவது: 


முன்பு, சீசன்தோறும், நுாற்றுக்கணக்கான அச்சுப்பலகைகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வந்தோம். பல்வேறு மாவட்டங்களில் இருந்து, உடுமலைக்கு வந்து இவற்றை வாங்கிச்செல்வர்.


தற்போது நிலை தலைகீழாக மாறி, சீசன் சமயத்திலும் ஆர்டர்கள் இல்லை. ஒரு கிரஷர் செட் என்பது, 5 செட் பலகைகளை உள்ளடக்கியதாகும்.நுாறு அச்சுகளை கொண்ட பலகை தயாரித்தால், 600 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.


ஒரு பலகை தயாரிக்க, மூன்று நாட்களாகிறது. வேலையிழந்து வரும் எங்களுக்கு நலவாரியங்கள் வாயிலாக, தமிழக அரசு உதவ வேண்டும்.


இவ்வாறு, தெரிவித்தனர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us