எம்.பி.ஏ., - இனியும் இதுவோர் மந்திர சொல் அல்ல... | Kalvimalar - News

எம்.பி.ஏ., - இனியும் இதுவோர் மந்திர சொல் அல்ல...

எழுத்தின் அளவு :

எம்.பி.ஏ., என்பது, இனியும், இளைஞர்களை ஈர்க்கும் மந்திர சொல்லாக இருக்க முடியாது. தற்போதைய நிலையில், புதிதாக அப்படிப்பை முடிக்கும் பட்டதாரிகளில், வெறும் 10% பேர் மட்டுமே, நல்ல பணி வாய்ப்புகளை பெறுகிறார்கள்.

பல எம்.பி.ஏ., கல்வி நிறுவனங்கள், பல்வேறான உத்தரவாதங்களைக் கொடுத்து, மாணவர்களை சேர்க்கின்றன. ஆனால், படிப்பின் முடிவில், அந்த உத்தரவாதங்களில் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை. பெரிய கார்பரேட் நிறுவனங்களில், செழிப்பான பணி வாய்ப்புகளைப் பெறலாம் என்ற நினைப்பில், எம்.பி.ஏ., படிப்புகளில் சேரும் நபர்கள், யோசிக்க வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது.

எம்.பி.ஏ., பட்டதாரிகளுக்கான தேவை குறையாத போதிலும், ASSOCHAM சர்வேப்படி, குறைந்தளவிலான பட்டதாரிகளே, பணிவாய்ப்புகளைப் பெறுகிறார்கள். மேலும், பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள், மூடும் நிலையில் உள்ளன என்பது இன்னும் அதிர்ச்சிகரமான ஒரு செய்தியாக உள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவில், குறைந்தபட்சம் 4,500 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை இன்னும் பெருமளவில் உயரும்.

கடந்தாண்டு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், அகமதாபாத், லக்னோ மற்றும் டெஹ்ராடூன் உள்ளிட்ட நகரங்களில், சுமார் 180 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த 2013ம் ஆண்டில், இன்னும் 160 கல்வி நிறுவனங்கள் மூடுவிழா காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2009 முதல் 2012ம் ஆண்டுவரை, வணிகப் பள்ளிகளில், வளாக நேர்காணல், 40% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

கொல்கத்தாவிலுள்ள ISB&M, தற்போது, இக்கட்டான நிலையில் உள்ளது. 2009ம் ஆண்டில், அக்கல்வி நிறுவனத்தில், 180 மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் 2012ம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 32 என்ற அதல பாதாள வீழ்ச்சிக்கு சென்றது. அதற்கு முக்கிய காரணம், 2ம் மற்றும் 3ம் தர வணிகப் பள்ளிகளில் எண்ணிக்கை பல்கி பெருகியதுதான். பெரும்பாலான மாணவர்கள், நேரடியாக வணிகப் பள்ளிகளில் சேர்வதைவிட, AICTE அங்கீகாரம் பெற்று, வேறு கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவெங்கும், வணிகப் பள்ளிகளில் எண்ணிக்கை 3 மடங்காக உயர்ந்துள்ளது. இவற்றில், 3 லட்சத்து 60 ஆயிரம் எம்.பி.ஏ., இடங்கள் உள்ளன. பெரிய கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவர்களுக்கும், அதிகம் அறியப்படாத கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவர்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. சாதாரண கல்லூரிகளில், முறையான உள்கட்டமைப்பு வசதிகளோ, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களோ அல்லது நல்ல பயிற்சி முறைகளோ இருக்காது.

தரக்கட்டுப்பாட்டு செயல்பாட்டில் இருக்கும் சுணக்கம், எம்.பி.ஏ., பட்டதாரிகளுக்கு கிடைக்கும் குறைந்த சம்பளத்திலான பணிகள், தரமற்ற ஆசிரியர்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளால், இந்தியாவில், அக்கல்வி நிறுவனங்கள், பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. மாறிவரும் வணிக சூழலுக்கேற்ப, ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதை பல வணிகப் பள்ளிகள் செய்வதில்லை மற்றும் அடிக்கடி, பாட உள்ளடக்கங்கள் தேவைக்கதிகமாக சேர்க்கப்படுகின்றன.

இந்திய வணிகப் பள்ளிகளில், முதல் 20 இடங்களில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள்தான், உடனடியாக, நல்ல பணிவாய்ப்புகளைப் பெறுகிறார்கள். அந்த எண்ணிக்கை, மொத்த மாணவர்களில் 10% என்ற அளவில் உள்ளது. ஆனால், கடந்த 2008ம் ஆண்டு இந்த சதவீதம் 54% என்ற அளவில் இருந்தது.

அதிகளவு சம்பளத்துடன் பணி வாய்ப்புகள் என்பதை தனக்கான சிறப்பாக விளம்பரப்படுத்தும் கல்வி நிறுவனங்கள், தியரி படிப்புகளை வழங்குகின்றன. இந்தப் படிப்புகளில், இன்றைய கார்பரேட் தேவைக்கேற்ற நடைமுறை திறன்களை வளர்த்துக்கொள்ளும் அம்சங்கள் இருப்பதில்லை. 2 வருட எம்.பி.ஏ., படிப்பிற்கு சுமார் 3லிருந்து 5 லட்சங்கள் வரை செலவு செய்யும் மாணவர்கள், படிப்பு முடிந்தபிறகு, மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் பெறுகிறார்கள். இதன்மூலம், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் பல வணிகப் பள்ளிகள், மாணவர்களை ஏமாற்றுகின்றன.

கடந்த 15 ஆண்டுகளில், ஐ.ஐ.டி.,/ஐ.எம்.எம்., ஆகிய கல்வி நிறுவனங்களிலிருந்து வெளிவரும் மாணவர்களின் தரத்தை மதிப்பிடுகையில், அது குறைந்துள்ளது தெரியவருகிறது. தரமற்ற பள்ளி கல்வியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், போதிய தகுதிகளற்ற ஆசிரியர்களும் காரணம் என்றும் கூறப்படுகிறது.

மேலாண்மை கல்வி நிறுவனங்கள், இன்றைய, உலகப் பொருளாதார தேவைகளுக்கேற்ப, தங்களின் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதில்லை. உலகமெங்கும், பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில், முறையான நடைமுறை பயிற்சியற்ற ஒரு எம்.பி.ஏ., பட்டதாரியை பணிக்கு எடுத்து, அவருக்கு பயிற்சியளித்து, அவர் சரியான நபராக உருவெடுக்கும்வரை காத்திருக்க, பல கார்பரேட் நிறுவனங்கள் தயாராக இல்லை.

கடந்த 2012ம் ஆண்டு, ஆந்திராவில் மட்டும், சுமார் 40 எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., கல்லூரிகளை மூட, AICTE அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகளில் வளாக நேர்முகத் தேர்வே நடப்பதில்லை. எனவே, எம்.பி.ஏ., என்பது சாதாரண ஒரு பட்டப்படிப்பு என்ற நிலை வந்துவிட்டதால், பல கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதேயில்லை. ஆந்திராவில், 2012ம் ஆண்டு, சுமார் 200 எம்.பி.ஏ., கல்லூரிகளில், 20க்கும் குறைவான மாணவர்கள் சேர்ந்தார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல கல்லூரிகளில், தங்கள் மாணவர்களை திறன்களை செம்மைப்படுத்தும் வகையிலான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதில்லை. ஐதராபாத்திலுள்ள, ஒஸ்மானியா பல்கலையில் எம்.பி.ஏ., முடிக்கும் மாணவர்கள், சராசரியாக, ஆண்டிற்கு ரூ.4.5 லட்சம் முதல், 5 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக அப்பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பெரிய பணியை பெற வேண்டும் என்ற மாணவர்களின் ஆவலுக்கும், அதற்காக அவர்கள் தங்களை தயார்செய்து கொள்ளும் செயல்பாட்டிற்குமான இடைவெளி மிக அதிகம். படிப்பை முடித்து புதிதாக வெளிவரும் பல பேர், கஷ்டப்பட விரும்புவதில்லை. போதுமான தொழில்துறை மற்றும் நடைமுறை அனுபவம் இருக்கும் மாணவர்களே, சிறப்பான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். பல பெரிய வணிகப் பள்ளிகள் இந்த வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குகின்றன. ஆனால், 2 மற்றும் 3ம் நிலையிலுள்ள கல்வி நிறுவனங்கள், இத்தகைய தொழில்துறை பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவதில்லை. ஆந்திரா மட்டுமின்றி, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மாநிலங்களில், பல வணிகப் பள்ளிகள் மூடுவிழா நடத்த விண்ணப்பித்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளில், வணிகப் பள்ளிகள், பரபரப்பாக இயங்க காரணம், அவற்றுக்கான நடைமுறைகள் சீராக்கப்படாததே. சில மேலாண்மை கல்வி நிறுவனங்களே, மாணவர்களிடமிருந்து அதிக கட்டணங்கள் மற்றும் நன்கொடைகள் வசூலிப்பதில் வெற்றியடைந்தன.

வணிகப் பள்ளிகளைப் பொறுத்தவரை, இன்னொரு பெரிய சிக்கல், ஆசிரியர் பற்றாக்குறை. மேலாண்மை கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பல ஆசிரியர்கள், அவ்வப்போது வெளியேறி விடுகிறார்கள். ஆண்டுக்கணக்கில் பணிபுரிவது என்பதெல்லாம் பழையக் கதையாகிவிட்டது. இதில் ஒரு கொடுமை என்னவென்றால், எம்.பி.ஏ., படித்துவிட்டு, வெளியில் உருப்படியான வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதினாலும், பலபேர், தனியார் வணிகப் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர்ந்து விடுகிறார்கள். பல மேலாண்மை கல்லூரிகளில், துறைத் தலைவரின் வயது 33 முதல் 35க்குள் இருக்கிறது. இதுபோன்ற ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தின் விதிமுறைப்படி, பாடப் புத்தகங்களில் உள்ளபடி, பாடத்திட்டத்தை, குறிப்பிட்ட காலகெடுவுக்குள் முடித்து விடுகின்றனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள், வேறு எங்கேனும், கூடுதல் சம்பளம் கிடைத்தவுடன், எளிதாக மாறிக்கொள்கிறார்கள். வணிகப் பள்ளிகளில், ஆசிரியராக சேரும் ஒருவரின் ஆரம்பநிலை சம்பளம் ரூ.8,000 என்ற அளவில் தொடங்குகிறது. துறைத் தலைவரின் சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை இருக்கிறது. இந்த சம்பள விகிதம், பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கிடையே வேறுபடவும் செய்கிறது.

சில வணிகப் பள்ளிகள், சில புதிய மேலாண்மை படிப்புகளை, AICTE அங்கீகாரம் பெறாமலேயே, அந்த அங்கீகாரம் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே, மாணவர்களை சேர்த்துக்கொண்டு நடத்த ஆரம்பிக்கின்றன. ஆனால், பின்னாளில் AICTE அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த சூழலில், அந்த மாணவர்களின் நிலையைப் பற்றி கேட்கவே வேண்டாம். பலரின் வாழ்க்கை கேள்விக்குறியான பின்பாக, இறுதியில், அந்தப் படிப்பிற்கு மூடுவிழா நடத்தப்படுகிறது.

தீர்வு என்ன?

வணிகப் பள்ளிகள் தொடர்பான AICTE விதிமுறைகள், தற்போதைய நிலையில், மென்மையாகவும், பல இடங்களில் மீறப்படுவதாகவும் உள்ளன. மாறாக, அந்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும். ஒரு கல்லூரி எம்.பி.ஏ., படிப்பை தொடங்கவும், அது வெளியேறவுமான விதிமுறைகள் கடினமாக முறைப்படுத்தப்பட வேண்டும். தரமற்ற கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது, தயவுதாட்சண்யமின்றி, நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மாணவர்களும் சரி, பெற்றோர்களும் சரி, ஏதோ எம்.பி.ஏ., சேர்கிறோம் என்று இருந்தால், பின்விளைவுகளுக்கு யாரும் பொறுப்பாக முடியாது. தாங்கள் சேரும் கல்லூரியின் தரம், செயல்பாடு, ஆசிரியர் அனுபவம் மற்றும் தகுதி, பாடத்திட்டம், படிப்பிற்கான அங்கீகாரம், வளாக நேர்காணலில் பங்கேற்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறான அம்சங்களை கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும். AICTE இணையதளத்தில், அந்த அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை கல்வி நிறுவனங்களில் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான இடைவெளியில் மாற்றங்களும் பதியப்படுகின்றன. எனவே, எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்கள், AICTE வலைதளத்திற்கு கட்டாயம் சென்று, பட்டியலை சரிபார்க்க வேண்டும். விதிமுறைகள் எத்தனை இருந்தாலும், விழிப்புணர்வுதான் ஒரு மனிதனை பாதுகாக்கும்!

நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us