பார்டென்டர் பணி - சந்தோஷமும், சம்பாத்தியமும் பெறலாம்! | Kalvimalar - News

பார்டென்டர் பணி - சந்தோஷமும், சம்பாத்தியமும் பெறலாம்!

எழுத்தின் அளவு :

பானங்களை கலத்தல் மற்றும் பொருத்திப் பார்த்தல் ஆகிய கலையில் ஆர்வம் கொண்டிருந்து, இரவில் விழித்திருந்து பணி செய்வதை ஒருவர் விரும்பினால், பார்டென்டர் பணிக்கு அவர் பொருத்தமானவர்.

பார்டென்டர் என்பது, லைசென்ஸ் பெற்ற பார்களில், ஆல்கஹால் பானங்களை, சப்ளை செய்யும் பணிகளில் ஈடுபடுபவர். பார்டென்டர் என்பவர், வழக்கமாக, சப்ளை, என்னென்ன சரக்குகள் இருக்கின்றன, ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத பானங்களுடன் கிளாசிக் காக்டெய்ல்ஸ்(cocktails) மற்றும் மாக்டெய்ல்ஸ்(mocktails) ஆகியவற்றை சேர்க்கை செய்தல் போன்றவை இவரின் பிரதானப் பணிகள். இதன்மூலம், வாடிக்கையாளருக்கு, பல்வேறான சுவைகளில்(flavours) பானங்கள் பரிமாறப்படுவதை உறுதி செய்கிறார். சில நாடுகளில், குறைந்த வயதுடைய மற்றும் ஏற்கனவே அதிகம் குடித்த நபர்களுக்கு, பானம் வழங்குவதை மறுக்கும் அதிகாரத்துடன், தன் சுய பாதுகாப்புக்காக ஆயுதம் வைத்துக்கொள்ளும் சட்டப்பூர்வ அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பயிற்சிபெற்ற பார்டென்டர், பல்வேறான பணிவாய்ப்புகளைப் பெற முடியும். பானங்கள் தொழிற்சாலை(Beverage industry) முதல், ஹோட்டல் தொழில்கள் வரை, அவருக்கான வாய்ப்புகள் பல. ஓட்டல்கள், ரெசார்ட்டுகள், Restro-bars, பப்புகள்(Pubs), உல்லாச கப்பல்கள் மற்றும் இரவு விடுதிகள் போன்ற பல இடங்களில், ஒரு பார்டென்டர் பணிபுரிவார்.

ஒரு சாதாரண பார்டென்டராக தனது பணியைத் தொடங்கும் ஒருவர், படிப்படியாக, பார் மேனேஜர் வரை பதவி உயர்வைப் பெறலாம். இந்த வாய்ப்பு, Chain hotels மற்றும் ரெஸ்டாரண்டுகளிலும் கிடைக்கும். அதேபோன்று, பானங்கள் தொடர்பான பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பணிகளையும் பெறலாம்.

ஒரு வெற்றிகரமான பார்டென்டராக விளங்க வேண்டுமெனில், திறன் வாய்ந்தவராகவும், உற்சாகம் மிக்கவராகவும், பானங்களைப் பற்றிய பரந்த அறிவுள்ளவராகவும் இருந்ததல் வேண்டும். இந்த தொழிலைப் பொறுத்தவரை, உங்களின் வெற்றி-தோல்வி என்பது, முற்றிலும் உங்களின் ஆளுமை சார்ந்தே அமையும். மற்ற விஷயங்கள் ஒரு பொருட்டே அல்ல. இந்த தொழிலில், ஈடுபட்டிருக்கும் ஒருவர், பானம் வழங்குபவர், சர்வர், அமைப்பாளர், காசாளர்(cashier), நண்பர், உளவியல் நிபுணர் மற்றும் சிறப்பான பான சேர்க்கை(mixology) நிபுணர் போன்ற பலவகையான தகுதிகளை வகிக்கிறார்.

பார்டென்டரின் பணிகள்

பார் கவுன்டருக்குப் பின்னால், நிறைய கவர்ச்சியும், சிரிப்பும் உண்டு. ஆனால், ஒரு பார்டென்டரின் பணியானது, உண்மையில் சீரியஸான ஒன்று. பார்டென்டர் பணியானது, வெறுமனே மெனு தயார்செய்து, பான சேர்க்கை செய்து, பரிமாறும் பணி மட்டுமல்ல. ஒரு பாருக்குள்ளும், பாருக்கு வெளியேயும் நடக்கும் பல விஷயங்களுக்கு இவர் பொறுப்பாளியாகிறார். பாரின் ஒவ்வொரு அம்சமும் இவரின் கவனத்தில் இருக்க வேண்டும்.

பார் சுத்தமாக இருக்கிறதா மற்றும் சரக்குகள், தீர தீர, முறையாக நிரப்பப்பட்டு வருகின்றனவா, விற்பனை விகிதம் எவ்வாறு இருக்கிறது போன்றவற்றை மேற்பார்வையிடுவது, ஏதேனும் புதிய விஷயங்களை(offers and new arrivals) தனது டீமுடன் பகிர்ந்துகொள்வது மற்றும் விளக்குவது போன்ற பல்வேறான விஷயங்கள், ஒரு பார்டென்டரின் பணிநிலையில் அடங்கும்.

படிப்புகள்

ஒருவர் பார்டென்டர் ஆகவேண்டுமெனில், சிறப்பான கல்வித்தகுதி எதுவும் பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனால், அத்தொழிலின் மீது ஆர்வமும், ஈடுபாடும் இருக்க வேண்டும். ஆனாலும், தொழில்முறை பயிற்சியுடன் வழங்கப்படும் புரபஷனல் படிப்பானது, ஒருவருக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இத்துறைக்கு வரும் பலர், மார்க்கெடிங் பட்டப்படிப்பு அல்லது ஹாஸ்பிடாலிடி பட்டப்படிப்பு ஆகியவற்றை முடித்தவர்களாகவே இருக்கின்றனர்.

பார்டென்டர் பணிக்கென்று பல படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகள், ஆல்கஹால் பானங்களின் அடிப்படைகள், பிராண்டுகளைப் பற்றிய அறிமுகம், பார் சாதனங்களை திறத்தல், சேர்க்கை செய்தலின் சாரம், கண்ணாடி குடுவைகளை கையாளும் விதம், பார் நெறிமுறைகள் மற்றும் ஆல்கஹால் விழிப்புணர்வு, லைசன்ஸ் சட்டங்கள், மெனு திட்டமிடல், பில் போடுதல் மற்றும் விலை நிர்ணயித்தல் போன்ற பலவிதமான அம்சங்களை உள்ளடக்கியவையாகும்.

கல்வி நிறுவனங்கள்

பார்டென்டர் தொடர்பான படிப்புகளை, இந்தியளவில் வழங்கும் கல்வி நிறுவனங்கள்,

* INDIAN INSTITUTE OF BARTENDING(IIBT) - CHENNAI
* INDIAN PROFESSIONAL BARTENDING ACADEMY - PUNE
* CAMBAY INSTITUTE OF HOSPITALITY MANAGEMENT (RAJASTAN & GUJARAY)
* INSTITUTE OF HOTEL MANAGEMENT - MUMBAI
* BAR MASTER, INTERNATIONAL SCHOOL OF BARTENDING - HYDERABAD
* TULLEHO BARTENDING ACADEMY - BANGALORE

சம்பளம்

வெறும் ரூ.5,000 என்ற அளவிலிருந்து, ரூ.50,000 அல்லது அதற்குமேலும் ஒருவரின் சம்பள விகிதம் ஏறிச்செல்லும். ஒருவரின் பணிசெய்யும் திறன் மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து, அவரின் சம்பளம் அமையும். ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பார்கள், விடுதிகள், ரெசார்ட்டுகள், கிளப்புகள் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை. எனவே, இந்தப் பணிக்கு எப்போதுமே அதிக டிமான்ட் உண்டு என்பதை மட்டும் மறக்க வேண்டாம்.

இப்பணி தொடர்பான இதர ஆலோசனைகள்

* ஒரு பார்டென்டர், பலவிதமான பானங்கள் பற்றியும் நினைவில் வைத்துக்கொண்டு, அதை உடனடியாக நினைவுபடுத்தும் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.

* பொதுவாக, வாடிக்கையாளர்கள், தங்களின் சுவை தொடர்பான அனுபவம் மற்றும் புரிதலை, ஒரு பார்டென்டர் பெற்றிருக்க வேண்டுமென விரும்புவார். ஒவ்வொருவரும் விரும்பும் ஒரு புதிய பானத்தை உருவாக்க ஒரு பார்டென்டருக்குத் தெரியவில்லை என்றால், அவர் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, பிராண்டுகளைப் பற்றி தெளிவாக தெரிந்துகொண்டு, சரியான முறையில் சேர்க்கை செய்யவும்(mixing) தெரிந்திருக்க வேண்டும்.

* கண்ணாடி குடுவைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

* ஒரு பானத்தை வாடிக்கையாளருக்கு வழங்கும் முன்னதாக, எப்படி அதை குலுக்க வேண்டும் என்பதையும் அறிய வேண்டும். அப்போதுதான், சரியான சுவையை ஒரு வாடிக்கையாளர் அனுபவிக்க முடியும்.

* பரிமாறும்போது, கோப்பையின் உருளைவடிவ பகுதிக்கு(Rim), 2 இன்ஞ்சுகள் கீழேதான், பிடித்திருக்க வேண்டும்.

* உங்களின் தொழில்முறையில் நேர்த்தியைக் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான், நீங்கள் பிற பார்டென்டர்களிடமிருந்து நீங்கள் வித்தியாசப்படுவதோடு, உங்களின்பால் நிரந்தரமான வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் முடியும்.

* வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர் எடுக்கையில், Rotation முறையைப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம், குறிப்பிட்ட ஒன்றுக்காக, வாடிக்கையாளர் அதிகநேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

* அதிகமாக வழங்குவது மற்றும் அதிக charge செய்வதானது, உங்களின் மீது விரைவாக கெட்டப் பெயரை வரவழைப்பதோடு, உங்களின் வேலைக்கு உலைவைத்து, உங்களின் எதிர்கால பணி உயர்வுகளையே பாதித்துவிடும். மேலும், உங்களின் சொந்த பாக்கெட்டில் பணத்திற்கான இடத்தை அதிகரித்துக் கொள்வது மற்றும் நண்பருக்காக குடிப்பது போன்ற செயல்கள், முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல மற்றும் அது தொழில்முறை தர்மமும் அல்ல. இது ஒரு ஹாஸ்பிடாலிடி தொழில்துறை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

* அந்த நாள் உங்களுக்கு சோகமாக அமைகிறதா அல்லது நன்றாக அமைகிறதா என்பதெல்லாம் பிரச்சினையல்ல. எது எப்படியிருந்தாலும், உங்களின் நடத்தையானது சீராக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும், கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.

* புன்சிரிப்பை காட்டுவது, வாழ்த்துவது மற்றும் அவர்கள் செல்லும்போது மறக்காமல் நன்றியை தெரிவிப்பது போன்ற சாதாரண செயல்கள், உங்களின் மீதான நன்மதிப்பைக் கூட்டும். இதுபோன்ற சிறிய செயல்கள், ஒரு வாடிக்கையாளர் உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேசும் அளவிற்கு கொண்டு செல்லும்.

* பார்டென்டிங் என்பது ஒரு கடினமானப் பணி. பணம் என்பது மிகவும் முக்கியம்தான், ஆனால் அது நிலையானதல்ல. நீங்கள், இரவு நெடுநேரமானாலும் வேலைசெய்ய வேண்டியிருக்கும். ஒரு பார்டென்டர் நினைவில் வைக்கவேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில், ஒரு வாடிக்கையாளர் அதிகமாக குடிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வயதை அடையாத நபர்களுக்கு ஆல்கஹால் பானம் வழங்கக்கூடாது.

* இந்த தொழிலை ஒருவர் தேர்ந்தெடுக்கும் முன்பாக, பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இத்தொழிலின் மீது உண்மையிலேயே ஆர்வம்கொண்டு, விதிமுறைகளைப் பின்பற்றி, கடினமாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும் மற்றும் இரவு நேரங்களில் பணியாற்றும் உடல்திறனையும் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய நபர்களுக்கு, இந்த பார்டென்டிங் தொழிலானது, நல்ல வருமானத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியதாக இருக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us