விலங்கு நேசர்கள் விரும்பும் படிப்பும், அதன் வாய்ப்புகளும் | Kalvimalar - News

விலங்கு நேசர்கள் விரும்பும் படிப்பும், அதன் வாய்ப்புகளும்

எழுத்தின் அளவு :

மிருகங்களுக்கென்று தனித்த அறிவும், உணர்வுகளும் உள்ளன. அவைகளை பேணி பாதுகாத்து பராமரிப்பதில் ஆர்வமுள்ளவர்கள், அத்துறை சார்ந்த படிப்புகளை மேற்கொண்டால், விரும்பிய எதிர்காலத்தைப் பெறலாம்.

எருமைகள், பசுமாடுகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள் மற்றும் குதிரைகள் போன்ற பல்வகையான விலங்குகளை பேணி, பராமரிக்கும் கலையை, Bachelor of Veterinary science & Animal husbandary (BVSc & AH) படிப்பு சொல்லித் தருகிறது. அதிகரித்து வரும் கோழிப்பண்ணைத் தொழில், செல்லப் பிராணிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் போன்றவை, கால்நடை பராமரிப்பு பட்டதாரிகளுக்கான தேவையை அதிகரிக்கிறது.

விலங்கினங்கள், சுற்றுச்சூழலை காத்து, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிபவையாக இருக்கின்றன. எனவே, அவற்றை முறையாக பராமரித்து பாதுகாக்கும் பணி முக்கியத்துவம் பெறுகிறது. விலங்குகளால் கிடைக்கும் தேசிய வருமானம், ஆண்டிற்கு சுமார் 1,83,000 கோடிகள் என்று ஒரு சாதாரண முறையிலான மதிப்பீடு தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு என்று கணக்கிட்டால், ரூ.500.21 கோடி என்று வருகிறது.

இந்தியாவில், 67% விவசாயிகள், 70% விலங்கினச் செல்வங்களை வைத்து பராமரிக்கிறார்கள். இதன்மூலம், 3,000 கோடி முட்டைகள் மற்றும் 6 லட்சம் டன்கள் பால் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, ஆடு, மாடுகள் மற்றும் கோழிகள் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விலங்கின பராமரிப்பு துறைகளுக்கு, கால்நடை வளர்ப்பு தொழில்துறை நிபுணர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். இந்த நிபுணர்கள், விலங்குகளின் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதோடு, அவற்றுக்கு தேவைப்படும் அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்கிறார்கள்.

மனித மற்றும் விலங்கின மருத்துவப் படிப்பு

மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுக்கான மருத்துவப் படிப்புகளின் நோக்கம் ஒன்றுதான் என்றாலும், சில அம்சங்களின் பெரிய வேறுபாடுகள் உள்ளன. மனித உடலின் கூறுகளை மட்டுமே ஒரு மனித மருத்துவர் படிக்கிறார், அதேசமயம், விலங்கினங்களின் உடல் கூறுகள் உள்ளிட்ட பல்வேறு உடலியல் அம்சங்களைப் பற்றி கால்நடை மருத்துவர் படிக்கிறார்.

ஒரு பறவையின் உடல்கூறு அம்சம் மற்றும் அதற்கு சிகிச்சையளிக்கும் முறைக்கும், விலங்கின உடல்கூறு மற்றும் அதற்கு சிகிச்சையளிக்கும் முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதுபோன்ற அம்சங்களினால், மனித மருத்துவருக்கும், விலங்கின மருத்துவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

கால்நடை மருத்துவ கல்லூரியில் சேர்வது எப்படி?

ஒருவர் கால்நடை மருத்துவராக பணிபுரிய வேண்டுமெனில், குறைந்தபட்சம், Bachelor of Veterinary science & Animal husbandary (BVSc & AH)  என்ற பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும். பள்ளிப் படிப்பை முடித்த ஒரு மாணவர், இந்தியாவிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஏதேனுமொன்றில் சேர, All India Pre - veterinary Test என்ற நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இந்த 5 ஆண்டு படிப்பில், 6 மாத கட்டாய இன்டர்ன்ஷிப் உண்டு.

முதல் 4 வருட படிப்பில், அனாடமி, பிசியாலஜி, பயோகெமிஸ்ட்ரி, நியூட்ரிஷன், லைவ்ஸ்டாக் மேனேஜ்மென்ட் அன்ட் ப்ரொடக்ஷன் டெக்னாலஜி, பேதோலஜி, மைக்ரோபயாலஜி, பார்மகாலஜி மற்றும் ஜெனடிக்ஸ் போன்ற அடிப்படை அறிவியல் விஷயங்களை கற்றுக்கொள்கிறார்.

கிளினிக்கல் பயிற்சிகள் சம்பந்தமான படிப்புகள், நோய் பரிசோதனை, அறுவை சிகிச்சை மற்றும் விலங்கு பராமரிப்பு போன்றவை கற்பிக்கப்பட்ட பிறகு தொடங்குகின்றன. மேலும், படிப்பின்போது, கால்நடை மருத்துவமனைகள், கோழிப் பண்ணைகள் மற்றும் மாட்டுப் பண்ணைகள் ஆகியவற்றில் கிடைக்கும் நடைமுறை பயிற்சி அனுபவங்கள், மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றன.

வருடாந்திர கட்டணம், ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை, அந்தந்த கல்வி நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடுகின்றன.

பரந்து விரிந்த பணி வாய்ப்புகள்

நாய்கள் மற்றும் பூனைகளுக்கு மருத்துவம் பார்க்கும் திறனுள்ளவர்களுக்காக பணி வாய்ப்புகள் நல்ல வருமானம் கொண்டவை. இதுதொடர்பாக, நல்ல அறிமுகம் ஏற்பட, 3 முதல் 4 வருடங்கள் வரை ஆகலாம். ஆனால், மாதம் ரூ.50,000 மற்றும் சில சமயங்களில் 5 முதல் 7 லட்சம் வரையிலும் மாத வருமானமாக சம்பாதிக்கலாம்.

கால்நடை மருத்துவம் படித்தவர்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், கோழிப்பண்ணைகள், கால்நடை பண்ணைகள், ஆடு மற்றும் முயல்கள் தொடர்பான பண்ணைகள் ஆகியவற்றிலும் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

அரசுத் துறைகளைப் பொறுத்தவரை, நிலை II லைவ்ஸ்டாக் மேம்பாட்டு அதிகாரிகளாக, முனிசிபல் கார்பரேஷன் கிளினிக்குகளிலும், வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய வங்கிகளிலும் பணியாற்றலாம். இதுபோன்ற வங்கிகளில், விவசாயிகள், தங்களுடைய பண்ணைகளைத் துவக்குவதற்கான செயல்முறைகளைப் பெறுகிறார்கள்.

மேலும், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் ஆகியவற்றில், பொது சுகாதார அதிகாரியாக பணியாற்றலாம். இவைதவிர, கார்பரேட் நிறுவனங்கள், உணவுத் துறைகள், கே.பி.ஓ., காப்பீட்டு ஏஜென்சிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளில், பார்மசூடிகல் மற்றும் பயாலஜிகல் தொழில்துறைகள் ஆகியவற்றில் ஏராளமான பணி வாய்ப்புகள், கால்நடை மருத்துவ பட்டதாரி மாணவர்களுக்கு காத்திருக்கின்றன.

இவைதவிர, செயற்கை சூழலில் முட்டைகளை அடைகாக்கும் மையங்கள், இரை உற்பத்தி யூனிட்டுகள், வணிகரீதியான பறவை வளர்ப்பு மற்றும் லைவ்ஸ்டாக் தயாரிப்புகளுக்கான மொத்த விற்பனை மைங்கள் ஆகியவற்றையும் அமைத்து வருமானம் ஈட்டலாம்.

சிறப்பு தகுதிகள்...

ஒரு நல்ல கால்நடை மருத்துவர் என்பவர், எந்த இடத்தில் வேண்டுமானாலும், அறுவை சிகிச்சை செய்யும் தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், சில இடங்களில், குறிப்பாக பல கிராமப்புறங்களில், விரிவான சிகிச்சை ஏற்பாடுகளை மேற்கொள்ளும் அளவிற்கு கருவிகள் இல்லாமல் இருக்கலாம்.

தன் உணர்வுகளை பேச்சு மூலமாக வெளிப்படுத்த முடியாத விலங்குகளின் மன உணர்வுகளைப் புரிந்து அதற்கேற்ப செயல்பட்டு,  அவற்றின் பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்க்கும் சவால், கால்நடை மருத்துவர்களுக்கு உண்டு. விலங்குகளும் பறவைகளும், எதையும் சொல்ல முடியாத நிலையிலும் இருந்தாலும், அவற்றினுடைய உடலின் பல பாகங்களின் செயல்பாடுகள் மற்றும் நிலைப்பாடுகளை வைத்து, அவைகளின் உடல்நிலையைப் புரிந்துகொள்ளலாம். முகம், வால், கண்கள், காலின் நீண்ட நகங்கள், கால்கள் போன்ற பல அம்சங்களை தீவிரமாக ஆராய்ந்து, தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

* மும்பை கால்நடை மருத்துவக் கல்லூரி
* சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி
* லாலா லஜ்பத் ராய் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், ஹிசார்
* கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி, பர்பானி

தகுதிகள்

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுடன், பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us