பி.பி.ஏ., படிப்பு | Kalvimalar - News

பி.பி.ஏ., படிப்பு

எழுத்தின் அளவு :

வழக்கமான வணிகப் படிப்புகளை போலன்றி, பி.பி.ஏ., பாடத்திட்டம், வெறும் புத்தக அறிவை தாண்டி, உண்மையான மேலாண்மை அறிவையும், திறனையும் பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

வணிகம் மற்றும் வணிக மேலாண்மையைப் படிப்போருக்கு BBA பட்டம் வழங்கப்படுகிறது. வணிகத் துறையில் ஈடுபட விரும்பும் மாணவர்கள், இப்படிப்பை அதிகம் விரும்புகிறார்கள். பல மாணவர்களுக்கு, வெற்றிகரமான எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு வலுவான அடிப்படை படிக்கல்லாக இப்படிப்பு திகழ்கிறது.

வணிக மேலாண்மை தொடர்பான மேற்படிப்பில் சிறந்த விளங்க நினைப்பவர்களுக்கு, ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான அறிவு அடித்தளத்தை BBA படிப்பு வழங்குகிறது. மேலும், எதிர்காலத்தில் தொழில் முனைவோர்களாக ஆக நினைப்பவர்கள் அல்லது கார்பரேட் உலகில் ஒரு நல்ல பொறுப்பிற்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் என்ற இருபாலருக்கும் இப்படிப்பு ஒரு ஆதாரமாக விளங்குகிறது.

சேர்க்கை நடைமுறைகள்

பல பல்கலைகள், நுழைவுத்தேர்வுகளின் மூலமாகவே, BBA படிப்பிற்கு, மாணவர்களை தேர்வு செய்கின்றன. தங்களின் சொந்த நுழைவுத் தேர்வுகளை நடத்திக்கொள்ளும் பல பல்கலைகள், அதன்மூலமாக, மாணவர்களின் அடிப்படை திறன்களை சோதித்து அவர்களின் மேலாண்மை ஆற்றலையும் அளவிடுகின்றன.

சில கல்வி நிறுவனங்கள், பள்ளி மேல்நிலைப் படிப்பில் எடுத்த மதிப்பெண்களையும் முக்கிய அம்சமாக எடுத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு கல்வி நிறுவனமும், BBA படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை கொண்டுள்ளன. 50% என்பது பொதுவான அளவில் பின்பற்றப்படும் தகுதி மதிப்பெண்கள்.

ரெகுலர் படிப்பைத் தவிர்த்து, பல பல்கலைகள், தொலைநிலையிலும் இப்படிப்பை வழங்குகின்றன. ஆனால், இதன்மூலம் ஒரு மாணவருக்கு வகுப்பறை கற்றல் அனுபவம் வாய்க்காது என்பது தொலைநிலை படிப்பின் ஒரு குறையே. எதிர்காலத்தில் பணிக்கான போட்டியின்போது, ரெகுலர் மாணவரா அல்லது தொலைநிலையில் படித்த மாணவரா என்ற நிலை வருகையில், ரெகுலர் மாணவரே போட்டியில் வெல்லும் வாய்ப்புகள் அதிகம்.

நாம் கற்பது என்ன?

வெறும் புத்தக அறிவைத் தாண்டிய, நடைமுறை மேலாண்மை அறிவை தரும் வகையில் இப்படிப்பின் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்கு சென்று பார்ப்பது, கேஸ் ஸ்டடீஸ், பிசினஸ் பிரசன்டேஷன், ப்ராஜெக்ட் ஒர்க், இன்டர்ன்ஷிப் மற்றும் டிரெய்னிங் ப்ரோகிராம்கள் போன்றவை இப்படிப்பின் மிக முக்கிய அம்சங்கள்.

இவற்றின் மூலம், தொழில்துறையில் அடியெடுத்து வைக்கும் ஒரு மாணவருக்கு, நல்ல பின்புலம் அமைகிறது. பைனான்ஸ், மார்க்கெடிங், அக்கவுன்டிங், பொது நிர்வாகம் மற்றும் மனிதவள மேம்பாடு போன்ற திறன்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதே நேரத்தில், ஸ்பெஷலைசேஷன் பாடத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஸ்பெஷலைசேஷன்கள்

மார்க்கெடிங், பைனான்ஸ், பேங்கிங், இன்சூரன்ஸ், சுற்றுலா மற்றும் டிராவல் மேனேஜ்மென்ட், மனிதவள மேலாண்மை ஆகிய பிரிவுகளில் ஸ்பெஷலைசேஷன் வழங்கப்படுகின்றன. எனவே, இவற்றில் உங்களுக்குப் பொருத்தமானதை தேர்ந்தெடுப்பது முக்கியம். சரியான முடிவை எடுக்க, சந்தை தேவை மற்றும் மதிப்பை அளவிடும் அதேநேரத்தில், உங்களின் ஆர்வம் குறித்தும் சிந்திப்பது மிகவும் முக்கியம்.

நீங்கள் எதிர்காலத்தில் முதுநிலை படிப்பை மேற்கொள்ள விரும்பினால், உங்களின் ஸ்பெஷலைசேஷன் தேர்வு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிடும். உங்களின் எதிர்கால திட்டத்திற்கு ஏற்ப உங்களின் ஸ்பெஷலைசேஷன் தேர்வு அமைந்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதேசமயம், ஸ்பெஷலைசேஷன் தொடர்பாக உங்களுக்கு தெளிவான ஐடியா எதுவும் இல்லையெனில், BBA - General படிப்பதே நல்லது. பல மாணவர்கள் இதைத்தான் தேர்வு செய்கிறார்கள். இதன்மூலம், வணிக மேலாண்மையின் பல்வேறு விதமான அம்சங்களைக் கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் அவர்களின் படிப்பு முடியும் தருவாயில், அவர்களுக்கு, எதை தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் ஏற்படுகிறது.

அதிகரிக்கும் போட்டி

வணிகவியல் பின்புலம் மட்டுமின்றி, பள்ளிகளில் கலை மற்றும் அறிவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், பி.பி.ஏ படிப்பை தேர்வு செய்கிறார்கள். முன்பெல்லாம், வணிகவியல் பின்னணி கொண்ட மாணவர்கள், பி.காம்., படிப்பைதான் அதிகம் தேர்வு செய்வார்கள். ஆனால் இப்போது, பி.பி.ஏ படிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.

தொழில்துறை நிபுணர்கள் கூறுவதைப்போல், நிதித்துறை சேவைகள், சில்லறை வணிகம், டெலிகாம், இன்சூரன்ஸ், வங்கியியல், ஐ.டி., விற்பனை மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளுக்கு, மேலாண்மை நிபுணர்களின் தேவை அதிகளவில் இருக்கிறது. கார்பரேட் போட்டி உலகில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் விரும்பும் படிப்பாக பி.பி.ஏ திகழ்கிறது.

இப்படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு, கார்பரேட் உலகில் நல்ல மரியாதை கிடைக்கிறது. பி.பி.ஏ., பட்டதாரிகள் அதிகரிப்பதை போல், பணிகளும் அதிகரிக்கின்றன. பல புதிய புதிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்துகொண்டே இருப்பதால், அவர்கள் நல்ல பயிற்சிபெற்ற வணிக நிபுணர்களையே எதிர்பார்க்கிறார்கள். எனவே, பி.பி.ஏ மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

BBA படிப்பு மட்டும் போதுமானதா?

கட்டாயம் போதாது. நீங்கள் கார்பரேட் உலகில் உயர் பதவிகளை நோக்கி செல்ல வேண்டுமெனில், இப்படிப்பு நிச்சயம் போதாது. எனவே, MBA படிப்பையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆனால், BBA படித்து முடித்த ஒருவர், முதலில் சில ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி அனுபவம் பெற்று, அதன்பிறகு MBA படிப்பை மேற்கொள்ளும்போது, அவரின் வணிக அறிவு சிறப்பாக மேம்பாடு அடைவதுடன், சிறப்பான பணி வாய்ப்புகளையும் எதிர்பார்க்க முடியும்.

ஏனெனில், BBA முடித்து எம்.பி.ஏ படிக்கும் மாணவர்களால், வகுப்பறை பாடங்களை எளிதாக புரிந்துகொள்வார்கள் என்பதுடன், அவர்கள் தங்களின் ஆரம்ப காலங்களில் பெற்ற பணி அனுபவங்களும் சேர்ந்து, அவர்களுக்கு நல்ல பயனையும், மதிப்பையும் அளிக்கிறது. எனவே, அவர்களால் நடைமுறை வணிக சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களையும் பெற முடிகிறது மற்றும் அவர்கள் நல்ல வணிக மேலாளர்களாக பரிணமிக்கிறார்கள்.

BBA படிப்பை, கண்ணில் தெரியும் கல்லூரியில் சேர்ந்து படிப்பதில் பெரிதாக பிரயோஜனமில்லை. மாறாக, பிரபலமான கல்லூரியில், கல்விக்கு நல்ல பெயர்பெற்ற ஒரு கல்லூரியில் சேர்ந்து படிப்பது நல்ல பயனை அளிக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us