சர்வதேச விவகாரங்களுக்கான படிப்பு | Kalvimalar - News

சர்வதேச விவகாரங்களுக்கான படிப்பு

எழுத்தின் அளவு :

சர்வதேச உறவுகள், பாதுகாப்பு மற்றும் வியூகங்கள் தொடர்பாக, உலகளாவிய அளவில் பல அம்சங்கள் உங்களை ஈர்க்கக்கூடியதாய் இருக்கும். அரசியலாகட்டும், சமூகமாகட்டும், வரலாறாகட்டும், புவியியலாகட்டும், அறிவியலாகட்டும் மற்றும் தொழில்நுட்பமாகட்டும், இத்தகைய துறைகளில், ஏதாவதொன்றின் மீது உங்களுக்கு உளகளாவிய ஆர்வம் இருக்கும்.

சர்வதேச விவகாரங்கள் தொடர்பான படிப்பு, நமது உலகளாவிய அறிவை பரந்து விரியச் செய்கிறது. உதாரணமாக, ஒன்றை எடுத்துக்கொள்வோம். எதற்காக சீன வெளியுறவுத்துறை அமைச்சர், தனது முதல் பயணத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றை தவிர்த்து, இந்தியாவுக்கு ஏற்படுத்திக் கொண்டார் என்றவொரு கேள்வி எழும்? மேலும், சீனா ஏன் இந்தியாவின் ஒவ்வொரு அசைவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது? என்றும் பலர் யோசிப்பார்கள்? அவர்களுக்கு இதற்கான கேள்விகள் இருந்தாலும், அதற்கான சரியான பதிலை பெற முடியாது. அறிந்துகொள்ளும் ஆர்வம் மட்டும் இருக்கும்.

இத்தகைய சூழலில்தான், சர்வதேச விவகாரங்கள் தொடர்பான படிப்பு, நம் உலக அறிவை விரியச் செய்கிறது. இதன்மூலம், உலகளாவிய சிக்கல்களுக்கு தீர்வுகாணும் திறன்களைப் பெறுவதுடன், நாடுகளுக்கிடையிலான கூட்டுறவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் யோசிக்கும் திறனை நாம் பெறுவோம்.

பாதுகாப்பு படிப்புகள் - சர்வதேச உறவுகள்

சர்வதேச உறவுகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் வியூகப் படிப்புகள் ஆகிய இரண்டும், ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை. அதாவது, சர்வதேச உறவுகள் துறையின் ஒரு பிரிவாகத்தான் பாதுகாப்பு மற்றும் வியூகப் படிப்பு கருதப்படுகிறது. பாதுகாப்பு படிப்புகள் என்பது, உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழல்களில் தேசிய பாதுகாப்பு தொடர்பாக படிப்பதாகும். நக்சலிசம் மற்றும் இனக் கலவரம் போன்றவை உள்நாட்டு சிக்கலுடன் தொடர்புடையவை.

இப்பிரச்சினைகள், சர்வதேச அளவில், அனைத்து நாடுகளின் பாதுகாப்பு கொள்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, ஒரு மாணவர், சர்வதேச அரசியல் சூழலின் ஊடே, இந்தியாவின் பாதுகாப்பை பற்றி படிக்கிறார். அமைதி மற்றும் பிரச்சினைகள் குறித்தும் அவர் படிக்கிறார். இப்படிப்பில், சர்வதேச உறவுகள், பூகோள அரசியல், ராணுவ புவியியல், பாதுகாப்பு பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச பாதுகாப்பில் அதன் தாக்கம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

சர்வதேச உறவுகள்

அரசியல் அறிவியல் பாடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது சர்வதேச உறவுகள் பாடம். வெறுமனே ராணுவ விஷயங்கள் என்பதைத் தாண்டி, இப்பாடம் பெரியதாகும். இப்படிப்பின் மூலம் நாடுகளின் எல்லைக் கோடுகளுடன் கூடிய சர்வதேச உறவுகளைப் பற்றி ஒரு மாணவர் அறிந்துகொள்ளலாம். ஆப்ரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட பல்வேறான உலக அரசியல் சூழல் பற்றி ஒரு மாணவர் நன்கு அறிந்துகொள்ள முடியும்.

இப்படிப்பில் சேருதல்

M.A in Defence & Strategic studies மற்றும் M.A. in International Relations ஆகிய இரண்டு படிப்புகளும், பல்வேறு பின்னணிகளை சேர்ந்தவர்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன. பல்கலைக்கு பல்கலை, இப்படிப்புகளின் பெயரில் சிறிது மாற்றம் இருக்கலாம். M.A in Politics(with specialisation in international studies), M.A Diplomacy, Law & Business, M.A in International relations போன்ற பல பெயர்களில் அந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பெயரில் மாற்றம் இருந்தாலும், உலக விவகாரங்களின் மீது பேரார்வம் கொண்டவர்களுக்கு, இப்படிப்பு ஒரு அருமையான அம்சம்.

இன்டர்ன்ஷிப்

சில பல்கலைகள், இப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு, அரசு அமைப்புகள், ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் வேறுசில வணிகம்சாரா அமைப்புகளில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குகின்றன.

M.Phil படிப்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் 2013ம் ஆண்டு மாணவர் சேர்க்கை விபரங்களின்படி, இத்துறையில் எம்.ஏ., படித்த 30% மாணவர்கள் மட்டுமே எம்.பில் படிப்பை நோக்கி செல்கிறார்கள். மற்ற 70% மாணவர்கள், உடனடியாக பணி வாய்ப்புகளை நோக்கி செல்கிறார்கள்.

பணத் தேவைகள் மற்றும் மேலும் பல விஷயங்களை ஆழ்ந்து படிப்பதில் ஆர்வமின்மை போன்ற விஷயங்கள், முதுநிலைப் படிப்புடன் மாணவர்களை, பணியை நோக்கி உந்தக்கூடிய அம்சங்களாய் உள்ளன.

மொழி ஆற்றலை வளர்த்தல்

ஆராய்ச்சி பேப்பர் எழுதுவதாய் இருந்தாலும், பல சர்வதேச ஜர்னல்களைப் படிப்பதாக இருந்தாலும் சரி அல்லது பல அரசியல் நிபுணர்களுடன் உரையாடுவதாக இருந்தாலும் சரி, மொழித்திறன் என்பது ஒரு அடிப்படையான தகுதியாக உள்ளது.

ஒருவர் ஏதேனும் ஒரு நாடு அல்லது பிராந்தியத்தைப் பற்றி ஸ்பெஷலைசேஷன் செய்ய வேண்டுமெனில், அதன் மொழியை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். தற்போது மிகப்பெரும் ராணுவ மற்றும் பொருளாதார சக்தியாக சீனா வளர்ந்து வருவதால், மாண்டரின் மொழியைப் படிப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

சரியான பணி வாய்ப்பு

இத்துறையில் எம்.ஏ., படிப்பை முடித்தவுடன், பாதுகாப்பு நிறுவனங்கள், பாதுகாப்பு தொடர்பான மீடியா துறைகள், தனியார் அல்லது பொது சிந்தனை மையங்கள், என்.ஜி.ஓ.,க்கள், ஐ.நா சபை மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகள், வெளிநாட்டு சேவைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பல்வேறான பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் சிக்கலான அரசியல் பிரச்சினைகளை விவாதிக்கும் திறமையைப் பெற்றிருந்தால், பணி தொடர்பான சிறப்பான மேம்பாட்டை எதிர்பார்க்கலாம். அதேசமயம், இது அதிக வருமானத்தை எதிர்பார்க்கக்கூடிய பணி அல்ல. ஒருவர் தனது தீராத ஆர்வத்தின் மூலமே இப்பணியில் சாதிக்க முடியும்.

ஆராய்ச்சியாளர் அல்லது அரசியல் பகுப்பாய்வாளர் ஆகிய நிலைகளில் புதிதாக பணிக்கு சேர்பவர், மாதம் ரூ.20,000 பெறுகிறார். அதேசமயம், பிஎச்.டி., தகுதியுடன் சீனியர் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் ஒருவர், மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை பெறுவார். நீங்கள் அரசியலில் சேர்கிறீர்களா அல்லது ராஜதந்திர பணிகள் அல்லது தூதரகப் பணிகளில் சேர்கிறீர்களா என்பதைப் பொறுத்து உங்களின் வருமானம் மாறுபடும்.

ஒரு ராஜதந்திரியாக பணிபுரிவதென்பது பொறுப்புகள் அதிகம் கொண்ட பணியாகும். உள்நாட்டு மற்றும் சர்வதேச நிகழ்வுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும் இப்பணி. இத்துறை தொடர்பாக, ஒருவர் வெளிநாட்டில் ஒரு உயர்ந்த பணியில் அதிக சம்பளத்தில் இருந்தாலும், அவருக்கு வேறு வகையில் சிக்கல்கள் உண்டு.

ஏனெனில், ஒரு நாட்டில் பணிபுரியும் ஒருவர், திடீரென வேறுநாட்டிற்கு மாற்றப்படுவார். மேலும், அவர் இருக்கும் நாட்டில் திடீரென உள்நாட்டு கலவரங்கள் அல்லது போர் ஏற்படலாம் அல்லது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். அதுபோன்ற சூழல்களில் அவரும், அவரது குடும்பமும் பெரியளவில் பாதிக்கப்படும் அபாயமும் நேரலாம்.

இப்பணியில், தொழில்சார்ந்த திருப்தி என்பது உங்களின் ஆலோசனைகளுக்கு அரசு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து அமையலாம். அதேசமயம், ராஜதந்திர வியூகரீதியான பகுப்பாய்வு பணி என்பது, தொழில்ரீதியில் பலருக்கு திருப்தி அளிப்பதாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியான வகையில் அமைச்சர்கள், அரசின் உயர்மட்ட அதிகாரிகள், தூதர்கள் மற்றும் உயர்மட்ட ஆய்வாளர்கள் ஆகியோரிடம், சர்வதேச மற்றும் உள்நாட்டு ராஜதந்திர அம்சங்களைப் பற்றி விவாதிப்பதானது, ஒருவரை எப்போதும் தனது துறை சார்ந்த விஷயங்களில் up to date என்ற நிலையில் வைத்திருக்கும் மற்றும் ஒரு ஆர்வத்தையும் உண்டாக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us