இந்தியாவில் ஓராண்டு எல்.எல்.எம் படிப்பு | Kalvimalar - News

இந்தியாவில் ஓராண்டு எல்.எல்.எம் படிப்பு

எழுத்தின் அளவு :

ஒரு வருட எல்.எல்.எம்., படிப்பிற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அப்படிப்பை வழங்குவதில் இந்திய கல்வி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இப்படிப்பால் மாணவர்களுக்கு பல நன்மைகள் உண்டு.

ஒரு மாணவர், இந்த ஒரு வருட படிப்பால், காலத்தை மிச்சப்படுத்துவதோடு, உடனடியாக, தேவைப்படும் வேறு படிப்பையும் மேற்கொள்ள முடிகிறது. எனவே, பலர் இளநிலை சட்டப் படிப்பை மேற்கொள்வதை விட, ஒரு வருட எல்.எல்.எம்.,  படிப்பை மேற்கொள்வதை விரும்புகின்றனர்.

வேறுபட்ட கருத்துகள்

அதேசமயம், ஒரு வருட எல்.எல்.எம்., படிப்புகளைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்களும் நிலவுகின்றன. அதாவது, இளநிலை சட்டப் படிப்புகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் போதுமான அளவில் கிடைக்காத காரணத்தாலேயே, ஒரு வருட எல்.எல்.எம்., படிப்பை வழங்குவதில் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்று ஒரு தரப்பார் கூறுகின்றனர். மேலும், சட்ட படிப்பை தரமுள்ள வகையில் மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள், இந்த LLM படிப்பை விரும்புவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம், இந்த ஒரு வருட LLM படிப்பின் மூலமாக, தேவையான குறைந்தளவு ஆசிரியர்களை ஒரு கல்வி நிறுவனத்தால் பெற முடிகிறது என்பது சாதகமான ஒரு அம்சம். இரண்டு வருட LLM படிப்பு, சட்டத் துறையில் ஆசிரியப் பணியை மேற்கொள்ள விரும்புவோருக்கு பாதகமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில், சட்டத் துறையில் ஆசிரியப் பணியை மேற்கொள்ள, 20 ஆண்டுகள் படிப்புத் தகுதி இருக்க வேண்டும்.

அதேசமயம், பொறியியலைப் பொறுத்தவரை 16 ஆண்டுகளாகவும், இதர துறைகளுக்கு குறைந்தபட்சம் 17 ஆண்டுகளாகவும் உள்ளது. எனவே, சட்டத் துறையில் இருக்கும் அதிகபட்ச ஆண்டு விதிமுறையால் அத்துறை மாணவர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

உலகளாவிய ஏற்பு

உலகின் பல நாடுகளில் ஒரு வருட LLM படிப்பு நடைமுறையில் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைத் தவிர, உலகின் பல்வேறான நாடுகளில் இப்படிப்பு தற்போது கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல இந்திய மாணவர்கள், இப்படிப்பை மேற்கொள்ள வெளிநாடுகள் செல்வது வாடிக்கையாக உள்ளது.

எனவே, இந்தியாவில் இந்த படிப்பை அறிமுகப்படுத்துவதின் மூலம், இதற்காக மாணவர்கள் வெளிநாடு செல்வது தவிர்க்கப்படும் மற்றும் நேரமும், பணமும் மிச்சமாகும் என்று இப்படிப்பிற்கு ஆதரவான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆராய்ச்சி ஆர்வம்

ஒரு குறிப்பிட்ட பிரிவில் படிப்பு அல்லது ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புவோருக்கு, LLM படிப்பு பொருத்தமான ஒன்று. இந்த ஒரு வருட படிப்பு, அதிக ஆராய்ச்சித் தன்மை கொண்டது. எனவே, முதல் செமஸ்டரிலிருந்து உங்களுக்கான ஆராய்ச்சி பகுதியை நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும்.

ஆராய்ச்சிக்கு ஏற்ற வகையில்...

பாடத்திட்டம் முழு அளவில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. LLB படிப்பில் கற்பிக்கப்படும் பல அம்சங்கள், LLM படிப்பிலும் கற்பிக்கப்படுகின்றன. Constitutional Law and Law of Contract போன்றவை அவற்றுள் முக்கியமானவை. எனவே, ஒரு வருட LLM படிப்பில் பல ஆராய்ச்சி தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இது ஒரு நேரம் சேமிக்கும் படிப்பாகும். மேலும், ஒரு பொது அம்ச படிப்பை மேற்கொள்வதைவிட, ஸ்பெஷலைஸ்டு படிப்பை மேற்கொள்வது சிறப்பானது என்று ஒரு தரப்பார் கூறுகின்றனர்.

கடின உழைப்பு

ஒரு வருட LLM படிப்பு குறுகிய காலகட்டம் கொண்டதால், 10 மாதங்களுக்குள் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டியதிருக்கும். எனவே, கடின உழைப்பு கட்டாயமாகிறது. ஆனால், பல புதிய விஷயங்களை இப்படிப்பில் கற்றுக்கொள்ள முடியும்.

காலை முதல் மாலை வரை, வகுப்புகள், பிராக்டிகல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் அடுத்தடுத்து இருக்கும். எனவே, இப்படிப்பு இடைவெளியில்லாமல் நெருக்கமாக இருக்கும். ஒரு வருட காலத்தில் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ஆர்வத்துடன் உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு இது ஒரு பொருட்டே அல்ல. அதுபோன்ற மாணவர்களுக்கு, இப்படிப்பு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய அனுபவமாக இருக்கும்.

2 வருட LLM படிப்புக்கு எதிர்ப்பு

ஒரு வருட LLM படிப்புடன் சேர்த்து, 2 வருட LLM படிப்பையும் வழங்குவதற்கு, இந்திய பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் மட்டுமே ஒரு வருட LLM படிப்பை வழங்குவதற்கு UGC அனுமதியளித்துள்ளது. மேலும், சீரானத் தன்மை(uniformity) கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இரண்டு வருட படிப்பை வழங்கிவரும் கல்வி நிறுவனங்கள், தரமான முறையில் ஒரு வருட படிப்பை வழங்குவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்று, தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில், அதிக கல்லூரிகள், பணத்திற்காக ஒரு வருட LLM படிப்பை வழங்க தொடங்குகையில், தரம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதன்மூலம், கற்பித்தலும், ஆராய்ச்சியும் பாதிக்கப்படும்.

எனவே, இந்த விஷயத்தில் நல்ல கண்காணிப்பும், வழிகாட்டுதலும் தேவை. இந்தியாவில் வழங்கப்படும் 1 வருட LLM படிப்பில் இத்தகைய குறைகள் இருந்தாலும், இப்படிப்பை மேற்கொள்வதற்காக மெனக்கெட்டு வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு, உள்நாட்டிலேயே அது கிடைப்பது ஒரு நல்ல செய்திதான்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us