எனது மகன் வீடியோ எடிட்டிங் துறையில் ஈடுபட விரும்புகிறான். இத்துறை பற்றிய தகவல்களைத் தர முடியுமா? | Kalvimalar - News

எனது மகன் வீடியோ எடிட்டிங் துறையில் ஈடுபட விரும்புகிறான். இத்துறை பற்றிய தகவல்களைத் தர முடியுமா?அக்டோபர் 04,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

பொழுதுபோக்கு மற்றும் மீடியா துறைகளில் பணிபுரியும் ஆர்வம் மிக்க கலைத் திறன் கொண்டவர்களுக்கு வீடியோ எடிட்டிங் துறை வாய்ப்புகளை அள்ளித் தரும் துறையாக திகழ்கிறது.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை மாற்றியமைப்பது மற்றும் மறுசீரமைப்பதன் மூலமாக புதிய வடிவமிக்க வீடியோக்களாக மாற்றுவது தொடர்புடைய பணிகளே வீடியோ எடிட்டிங் துறையின் அடிப்படைப் பணியாகும். கலை நயமிக்க வீடியோ வடிவங்கள் இதனால் தான் உருவாகின்றன. தயாரிப்புப் பணிகளுக்குப் பின் முக்கியப் பணியாக வீடியோ எடிட்டிங் திகழ்கிறது. ஒரு வீடியோ எடிட்டராக இருப்பவர் பின்னணி இசையை எடிட் செய்வது, படம் மற்றும் வீடியோ காட்சிகளை எடிட் செய்து திரையில் கொண்டு வருவது போன்ற முக்கியப் பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.

லீனியர் எடிட்டிங், நான்-லீனியர் எடிட்டிங் மற்றும் டிஜிட்டல் வீடீயோ எடிட்டிங் என்னும் 3 பிரிவுகள் இதில் உள்ளன. டிஜிட்டல் வீடியோ எடிட்டிங் முறையில் கம்ப்யூட்டரின் உதவியுடன் திரைக்காட்சிகள் எடிட்டிங் செய்யப்படுகின்றன. நான்-லீனியர் எடிட்டிங் முறையில் ஆடியோ மற்றும் வீடியோக்கள் கம்ப்யூட்டரின் நினைவடுக்கில் பதியப்பட்டு பின்பு தனி சாப்ட்வேர் உதவியுடன் எடிட் செய்யப்படுகின்றன.

இன்று அதிகரித்துக் கொண்டே வரும் திரைப்பதிவுகள், வீடியோ காட்சிகள் மற்றும் இன்டர்நெட் தளங்களின் விளைவாக வீடியோ எடிட்டிங் துறையில் புதிது புதிதான பல்வேறு வாய்ப்புகள் உருவாகிக்கொண்டே வருகின்றன. கடுமையான போட்டியை இது உள்ளடக்கியிருப்பதால் இத்துறையை தேர்வு செய்பவர்கள் அதற்குத் தேவைப்படும் திறன்களோடு எப்போதும் தயாராக இருப்பது முக்கியம்.

வீடியோ எடிட்டிங் தெரிந்தவருக்கு ‘டிவி’ மற்றும் திரைப்படத் தயாரிப்பு ஸ்டுடியோக்களிலும் விளம்பரம் மற்றும் மல்டிமீடியா நிறுவனங்களிலும் இன்டர்நெட் தளங்களை உருவாக்கும் நிறுவனங்களிலும் கடுமையான தேவை இருக்கிறது. மேலும் தனியார் தயாரிப்பு நிறுவனங்களில் இணைந்து திரைப்படங்களை உருவாக்கும் பணியிலும் தேவை இருக்கிறது. பொதுவாக இத்துறையின் திறனாளர்கள் ‘டிவி’ திரைப்பட நிறுவனங்களில் பணி புரிகிறார்கள்.

இது அனைவருக்கும் பொதுவான துறையாக இருக்கிறது. இதற்கென குறைந்த பட்ச கல்வித் தகுதிகள் தேவையில்லை. எனினும் இதில் சிறப்பாக மேம்பட வீடியோ எடிட்டிங், சவுண்ட் ரெகார்டிங், நான்லீனியர் எடிட்டிங் இவற்றில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு ஒன்றை படித்திருப்பது விரும்பத்தக்கது. இவை அனைத்திலுமே எடிட்டிங் பற்றிய அடிப்படைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளை நாடெங்கும் உள்ள பல கல்வி நிறுவனங்களில் ஒன்றில் படிக்கலாம்.

நொய்டாவில் உள்ள ஏசியன் அகாடமி ஆப் பிலிம் அண்ட் டிவி என்னும் மையத்தில் இந்தப் படிப்புகளைப் படிக்கலாம். டில்லியிலுள்ள பார்ச்சூன் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன், பாட்னாவிலுள்ள பீகார் இன்ஸ்டிடியூட் ஆப் பிலிம் அண்ட் டிவி ஆகியவற்றிலும் இத் துறையில் சிறப்புப் படிப்புகளைப் பெறலாம். இத் துறையின் முக்கிய நவீன பிரிவான மீடியா ஆர்ட்ஸ் அண்ட் அனிமேஷன் பிரிவில் பட்டப் படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பைப் படிக்கலாம்.

இத்துறையில் சிறந்து விளங்க அடிப்படையிலேயே ஒருவர் தானாகவே திறம்பட செயல்படும் உந்து சக்தியையும் கிரியேடிவ் ஆர்வத்தையும் பெற்றிருக்க வேண்டும். எதையும் கூர்ந்து கவனித்து விபரமறியும் சுபாவம், கேமராக்கள் பற்றிய அடிப்படையான பொது அறிவு மற்றும் அர்ப்பணிப்பு குணம் ஆகியவற்றைப் பெற்றிருப்பவர் இதில் மிளிரலாம். படித்திருப்பதால் மட்டுமே ஒருவர் வெற்றி பெற முடியாது என்பதையும் துறையின் நுணுக்கங்களை இயல்பான தனது கிரியேடிவ் திறன்களோடு இணைத்து மட்டுமே ஒருவர் சிறப்பான பணி வாய்ப்பைப் பெற முடியும் என்பதையும் நன்றாக மனதில் கொண்டு துறையில் நுழைவது பற்றிய முடிவை நாம் எடுக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us