விருந்தோம்பல் மேலாண்மைத் துறை | Kalvimalar - News

விருந்தோம்பல் மேலாண்மைத் துறை

எழுத்தின் அளவு :

நல்ல ஆளுமையுடன், சிறப்பான தகவல் தொடர்பு திறன் பெற்றிருந்து, அதேசமயம், அதிக வாய்ப்புகளும், சவாலும் நிறைந்த தொழில்துறையை ஒரு நபர் விரும்பினால், அவருக்கு விருந்தோம்பல்(ஹாஸ்பிடாலிடி) துறை ஒரு சிறந்த களம்.

விருந்தோம்பல் துறை என்பது, தங்குவது, உணவு சேவைகள், பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு விளையாட்டு அம்சங்கள் கலந்த ஒரு கலவை அம்சமாகும். அடிப்படையாக, இத்துறையில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை, ஹோட்டல்கள், பயணம் மற்றும் சுற்றுலா, ரெஸ்டாரண்டுகள் மற்றும் கிளப்புகள்(உணவு மற்றும் பானங்கள்).

விருந்தோம்பல் தொழில்துறை தன்னுள் பல்வேறான பணி வாய்ப்புகளை உள்ளடக்கியதாகும். ஈவென்ட்ஸ்(விளையாட்டு, இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் போன்றவை), மாநாடுகள், உபசார விருந்து நிகழ்வுகள், தீம் பார்க்குகள், ரெஸ்டாரண்டுகள், கேட்டரிங், ரிசார்ட்டுகள், ஏர்லைன்ஸ் மற்றும் மக்கள் சேவை தொடர்பான அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

இத்துறை உங்களுக்கானதா?

விருந்தோம்பல் துறையில் தமது பணியை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவோர், நல்ல உடலாற்றல், வலுவான தகவல் தொடர்பு திறன்கள், காரணகாரிய திறன்கள், எண் கணித திறன்கள் மற்றும் கவர்ந்திழுக்கும் ஆளுமை ஆகிய அம்சங்களை பெற்றிருப்பது அவசியம். இதன்மூலம்தான், இத்துறையில் வெற்றிகாண முடியும்.

விருந்தோம்பல் துறை என்பது, வாடிக்கையாளர் சேவை தொடர்பானது. இதன் பிரதான அம்சம், நல்லெண்ணம் என்பதாகும். எனவே, இத்துறையில் இருப்பவர்கள், சவாலான சூழல்களில், பதட்டப்படாமல் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

ஹாஸ்பிடாலிடி துறை என்பது வானத்தை மட்டுமே எல்லையாகக் கொண்ட ஒரு பரந்துபட்ட வாய்ப்புகளைக் கொண்ட துறை. இத்துறையில் பணிபுரிவோர் கடின சூழலில் நீண்டநேரம் பணியாற்ற வேண்டியிருக்கும். விருந்தினர்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவு செய்வதுடன், அதையும் தாண்டி அக்கறை எடுக்க வேண்டும்.

நட்பு ரீதியான, பணிவான, கவர்ந்திழுக்கும் மற்றும் உபசரிப்பு தன்மையுள்ள ஆளுமையை இத்துறை சார்ந்த ஒருவர் கொண்டிருப்பது கட்டாயம். இரட்டை மொழி தெரிந்தவர்களுக்கு, இத்துறையில் பணி வாய்ப்புகள் அதிகம்.

படிப்புகள் - என்ன? எங்கே?

இத்துறையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஹோட்டல் அன்ட் டூரிஸம் மேனேஜ்மென்ட் அல்லது ஹோட்டல் நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் பட்டப் படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளில், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், சுற்றுலா கப்பல்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மார்க்கெடிங் அமைப்புகள், மாநாட்டு மையங்கள், கிளப்புகள் மற்றும் தொடர்புடையவற்றை நிர்வாகம் செய்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

மேலும், விருந்தோம்பல் வணிகம் தொடர்பான பல்வேறு துறைகளில், அக்கவுன்டிங், நிர்வாகம், நிதி, தகவல் அமைப்பு, மார்க்கெடிங், மனிதவள நிர்வாகம், பொதுமக்கள் தொடர்பு, வியூகம், மதிப்பீட்டு முறைகள், பகுதிவாரியான படிப்புகள் ஆகியவை உள்ளடங்கிய ஒட்டுமொத்த பாடங்களும் அடக்கம்.

விருந்தோம்பல் மேலாண்மை படிப்பில் சேர்வதற்கு ஒரு சிறந்த வழி என்னவெனில், ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டப் படிப்பை மேற்கொள்வதுதான். விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா மேலாண்மையில், முதுநிலைப் படிப்புகளை இந்தியாவின் பல கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

அத்தகையப் படிப்புகளில் முக்கியமானது, ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட் அல்லது ஹோட்டல் மேனேஜ்மென்ட் அல்லது ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிஸம் மேனேஜ்மென்ட் ஆகிய ஏதேனும் ஒரு பெயரில் வழங்கப்படும் எம்.பி.ஏ., படிப்பு. இப்படிப்பைத் தவிர, ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிஸம் மேலாண்மையில், முதுநிலை டிப்ளமோ படிப்பையும் மேற்கொள்ளலாம். இத்தகையப் படிப்புகளின் மூலமாக, விருந்தோம்பல் தொழில்துறையில், ஒருவர் சிறப்பான நிபுணத்துவம் பெற முடியும்.

இப்படிப்புகளின் மூலமாக, உணவு மற்றும் பானங்கள் மேலாண்மை, வரவேற்பு அறை, வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாட்டு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நுட்பங்களை தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட படிப்புகளை மேற்கொள்கையில், ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களில், மேலாண்மை பயிற்சி திட்டங்கள் மற்றும் இன்டர்ன்ஷிப்புகள் ஆகிய வாய்ப்புகளை பெறும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர்கள், நடைமுறை திறன் மற்றும் அனுபவ அறிவைப் பெற முடியும்.

விருந்தோம்பல் துறையில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை வழங்கும் அகில இந்திய அளவிலான சில பெயர்பெற்ற கல்வி நிறுவனங்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை,

* Institute of Hotel management (various locations)
* Dr.Ambedhkar Inistitute of Hotel management - Chandighar
* Amity School of Hospitality - Noida
* Welingkar Institute of Management - Mumbai
* S P More Foundation - Mumbai
* Academy of Maritime Education & Training - Chennai
* Delhi Business School, Delhi/NCR
* Hierank Group of Institutions - Noida
* FHRAI - Institute of Hospitality management - Noida
* Punjab Technical University - Jalandhar
* Tilak Maharashtra University - Pune
* Kohinoor College of Hotel & Tourism management studies - Mumbai

வாய்ப்புகள்

பொருளாதாரத் துறையின் வேறு எந்த பிரிவையும்விட, விருந்தோம்பல் துறையானது, அதிகளவிலான பணி வாய்ப்புகளை வாரி வழங்கக்கூடியதாகும். அந்தப் பணிகள், சிறப்புத் திறன்கள் தேவைப்படாத என்ற நிலை மற்றும் ஸ்பெஷலைஸ்டு பணிநிலை என்ற பல வகைகளில் அடங்கும். அடுத்த 10 ஆண்டுகளில், இத்துறையில் நல்ல பயிற்சிபெற்ற 2 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், விருந்தோம்பல் துறையானது, சுற்றுலா மற்றும் பயணத் துறையுடன் சேர்ந்து வளர்ச்சியடைகின்ற ஒன்றாகும்.

இத்துறையில் உலகத்தரம் மற்றும் சிறப்பான சேவை ஆகியவற்றுக்கான தேவைகள், நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஒருவரின் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து, பல்வேறான பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. விருந்தோம்பல் துறையில் அதிகம் கிடைக்கக்கூடிய சில முக்கிய பணி நிலைகளைப் பற்றி விரிவாக காண்போம்.

லாட்ஜிங்

ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் ஆகியவற்றின் பெருக்கம், லாட்ஜிங் துறையில் அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. இவற்றில், விருந்தினர் தொடர்பு, ஹவுஸ் கீப்பிங், பொது தொடர்பு, மனிதவளம் மற்றும் விற்பனை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன.

அழகு நிலையங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள்

ஆபரேஷன்ஸ் மேலாளர், அழகு நிலைய பொது மேலாளர் மற்றும் முன்னணி அழகுநிலைய தொழில் நிபுணர் உள்ளிட்ட பல்வேறான பணி வாய்ப்புகள் இப்பிரிவில் உள்ளன.

உணவு மற்றும் பானங்கள்

ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் இதர கேட்டரிங் சேவை மையங்களில் பல்வேறான பணி வாய்ப்புகளை இத்துறை வழங்குகிறது. சமையலறை மேலாளர், ரெஸ்டாரண்ட் மேலாளர், முன்னணி சமையல்காரர், பார் மேலாளர், கேட்டரிங் மேற்பார்வையாளர் மற்றும் உணவு மற்றும் பானங்கள் இயக்குநர் உள்ளிட்ட நிலைகளில் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பயணம்

விருந்தோம்பல் துறையில் ஆர்வமுடைய நபர்களுக்கு பணிகளை அள்ளி வழங்கும் பிரிவுகளுள் முக்கியமானது பயணத்துறை. சிறுபடகு இயக்குநர், டிராவல் ஏஜென்ட், சுற்றுலா மேலாளர் மற்றும் பொழுதுபோக்கு மேலாளர் உள்ளிட்ட பணி வாய்ப்புகள் உண்டு.

விருந்தோம்பல் துறை பட்டதாரிகளுக்கு, கேட்டரிங், மாநாடுகள், ஈவென்ட் மேலாண்மை, பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுநேர அம்சங்கள் துறை, வசதிகள் மேலாண்மை மற்றும் உணவு சேவைகள் மேலாண்மை ஆகிய பிரிவுகள் பணி வாய்ப்புகளை வழங்குகின்றன.

சர்வதேச அளவிலான பணிகள்

உலக பொருளாதாரத்தில், விருந்தோம்பல் தொழில்துறையின் பங்கு 33 டிரில்லியன் டாலர்கள். மேலும், இத்துறை வேகமாக வளர்ந்துவரும் துறையுமாகும். இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான புதிய பணி வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. எனவே, இத்துறையில் பட்டப் படிப்பை முடித்த ஒருவருக்கு, தனது நாட்டின் எல்லையைத் தாண்டி, வெளிநாடுகளிலும் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

The Hilton, The Marriott, Hyatt Regency முதலிய சர்வதேச அளவிலான ஹோட்டல்கள், உலகளாவிய பணி வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. ஏனெனில், மேற்கண்டவை, உலகின் பல பகுதிகளில் இயங்குகின்றன. மேலும், பல ஏர்லைன்ஸ் கம்பெனிகள் மற்றும் கப்பல் நிறுவனங்கள் ஆகியவை, உலகளாவிய பணி வாய்ப்புகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகின்றன.

உலகளாவிய பணி வாய்ப்புகளில் ஒருவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமெனில், அதற்கேற்ற வகையில் தன்னை அர்ப்பணிப்புடன் தகவமைத்துக் கொள்ள வேண்டும். மொழி உள்ளிட்ட பல்வேறான திறன்கள் முக்கியமானவை.

உலகளாவிய தொழில்துறையில் உங்களுக்கு சிறப்பான அனுபவம் இருக்க வேண்டும் அல்லது மிகவும் புகழ்பெற்ற சிறப்பு வாய்நத ஒரு கல்வி நிறுவனத்தில், ஹாஸ்பிடாலிடி பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், இந்தப் படிப்பை வெளிநாட்டில் படிப்பவர்களுக்கு, பரந்த மற்றும் விரிவான அனுபவம் கிடைக்கும். இதன்மூலம் புதிய அம்சங்களை ஒருவர் கற்றுக்கொள்ள முடியும்.

நிறைகள் மற்றும் குறைகள்

விருந்தோம்பல் துறையை தேர்வு செய்யும் முன்னதாக, அத்துறையில் தனக்கிருக்கும் எதிர்கால வளர்ச்சி, அத்துறையில் உள்ள நிறை - குறைகள் மற்றும் தனது தனிப்பட்ட திறமைகள் மற்றும் ஆளுமைகள் அத்துறைக்கு ஒத்துவருமா என்பன போன்ற பலவிதமான அம்சங்களை ஒருவர் நன்கு ஆராய்ந்து தெளிந்துகொள்ள வேண்டும்.

நிறைகள்

* தொடர்ச்சியான வளர்ச்சியுடன், கூடிய ஆர்வமூட்டத்தக்க பணி வாய்ப்புகள்.

* லாபகரமான பணி நிலைகள்

* சிறப்பான போனஸ் மற்றும் இதர நிதி பரிசுகளுடன் நல்ல சம்பளங்கள்.

* மிகப்பெரிய சர்வதேச ஓட்டல்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள்.

* பல்வேறான மக்களுடன் பணிபுரியும் மற்றும் பழகும் வாய்ப்புகளைப் பெறுதல்.

* இப்பணி, முதுகு ஒடியக்கூடிய அளவிற்கு கடினமான பணி அல்ல. விருந்தினர்களின் மனநிலையைப் புரிந்து அதற்கேற்ப செயல்படும் ஒரு சவாலானப் பணி இதுவாகும்.

* விருந்தோம்பல் துறையில் பணிபுரிவோர், பெரிய சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் பெரிய நட்சத்திர ஓட்டல்கள், பெரிய ரெஸ்டாரண்டுகள் மற்றும் ரிசார்ட்டுகள் ஆகியவற்றில் பணிபுரியும்போது, அவர் பல்வேறான சொகுசு சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். சலுகை விருந்து, இலவச சுற்றுலா, இலவச தங்குமிடம் உள்ளிட்ட பல சலுகைகளைப் பெறலாம்.

* விருந்தோம்பல் துறையின் வளர்ச்சிக்கேற்ற அளவில், அத்துறைக்கு பயிற்சிபெற்ற நிபுணர்கள் கிடைப்பதில்லை. எனவே, புதிதாக படித்து வெளிவரும் பட்டதாரிகளுக்கு, இத்துறையில் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதை மறந்துவிடக்கூடாது.

* மகப்பேறு கால விடுமறை, விடுமுறை சம்பளம், டியூஷன் கட்டணம் திரும்ப ஒப்படைப்பு மற்றும் ஓய்வுத் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உண்டு.

குறைகள்

* பல்வேறான பணி நிலைகளில் வேலைசெய்ய வேண்டியிருக்கும். நமக்கு பிடிக்காத பணி நிலைகள் உட்பட.

* நாட்டின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாறும் துறைகளில், விருந்தோம்பல் துறை முதன்மையானது. எனவே, பொருளாதார மந்தநிலை காலங்களில், நிலைமை சரியாக இருக்காது.

* நெருக்கடியான மற்றும் இக்கட்டான தருணங்களில் கோபத்தையும், எரிச்சலையும் வெளிக்காட்டாமல் பணியாற்ற வேண்டியது முக்கியம்.

* நீண்ட மற்றும் முறையற்ற பணி நேரம், சில வாடிக்கையாளர்களின் கடுமையான நடத்தை, நெருக்கடியான நேரங்கள் போன்றவை இத்துறையின் முக்கியமான சவால்கள்.


மேற்கூறிய நிறை - குறை அம்சங்களைத் தாண்டி பார்த்தோமானால், பொதுவில், இத்துறை ஒரு சிறப்பான துறையேயாகும். உலகில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் இது முக்கியத் துறை என்பதும் அதற்கு காரணம். அந்நிய செலவாணியை கொண்டுவரும் துறைகளில், இது மூன்றாவது பெரிய துறையாகும்.

1991ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசுகள், முதலாளித்துவ நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், இத்துறையின் பணி வாய்ப்புகளுக்கு எதிர்காலத்தில் எந்த பங்கமும் வராது என்று நம்பலாம். இத்துறையில் பணிபுரிவோருக்கு, பொதுவாக, சலுகைகளும், சந்தோஷங்களும், பொழுதுபோக்குகளும் அதிகம்.

இத்துறையில் முதுநிலைப் படிப்பை முடிக்கும் ஒருவர், இத்துறையின் செயலாக்க(operational) மற்றும் செயலாக்கமற்ற பிரிவுகளில் நேரடி பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் படித்துவிட்டு, இத்துறை நிச்சயம் உங்களுக்கு ஒத்துவரும் என்று நீங்கள் முடிவு செய்தால், தயங்காமல் விருந்தோம்பல் மேலாண்மைப் படிப்பில்(Hospital Management) சேரலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us