நீர் பொறியியல் மற்றும் மேலாண்மைத் துறை படிப்புகள் | Kalvimalar - News

நீர் பொறியியல் மற்றும் மேலாண்மைத் துறை படிப்புகள்

எழுத்தின் அளவு :

நீர் பொறியாளர்கள் மற்றும் நீர்வள பயன்பாட்டு மேலாளர்களுக்கு, இன்றைய நிலையில் கண்முன் நிற்கும் பெரிய பணி, மக்களின் பயன்பாட்டிற்கும், உணவு உற்பத்திக்கும், நீரை பாதுகாத்து வைப்பதும், அடிப்படையான சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாப்பதும், நீராதார பிரச்சினைகளை சமாளிப்பதும்தான்.

தண்ணீரைப் பயன்படுத்துதல் மற்றும் நீர்வள ஆதார மேலாண்மையில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் இடர்பாடுகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கான கல்வி மற்றும் பயிற்சியை வழங்குவதே, நீர் பொறியியல் மற்றும் மேலாண்மை துறையாகும். இப்படிப்பானது, நீர் பொறியியல் மற்றும் நீர்வள மேலாண்மை திறன் ஆகிய இரண்டு அம்சங்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. நீர்வள மேலாண்மையில் ஆழ்ந்த அறிவு மற்றும் சிறப்பான மற்றும் தேர்ந்த பயிற்சியைப் பெறும் வகையில் மாணவர்கள் கற்பிக்கப்படுகிறார்கள்.

முக்கிய அம்சங்கள்

நீர் பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்பு என்பது, 5 முக்கியப் பகுதிகளைக் கொண்டதாக இருக்கிறது. வேளாண்மை நீர், கடற்கரை நீர், நகர்ப்புற நீர், நீர் வளம் மற்றும் நெருக்கடி மற்றும் ஆபத்து நிலை மேலாண்மை உள்ளிட்டவையே அவை.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பிரிவுகளில் ஸ்பெஷலைஸ் செய்யும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. Watershed hydrology, hydrodynamics, water resources systems, concepts in water modelling ஆகிய படிப்புகள், இத்துறையில் அட்வான்ஸ்டு நிலையிலான படிப்புகளை மேற்கொள்ள துணைபுரிபவை. நீர் வளத்தை திட்டமிடுதல் மற்றும் மேலாண்மை செய்தலில், ஆய்வகம் மற்றும் களப் பயிற்சி ஆகியவற்றோடு சேர்த்து, கருவிகள் மற்றும் நுட்பங்களுக்கும் இத்துறை முக்கியத்துவம் கொடுக்கிறது.

வேளாண் நீர் படிப்புகள்

வேளாண் நீர் படிப்புகள், வேளாண்மைக்குத் தேவையான நீர் ஆதாரத்தை, மேலாண்மை செய்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த அவசியமான திறன்கள் மற்றும் அறிவை வழங்குகின்றன. திட்டமிடல், வடிவமைத்தல், நடைமுறைப்படுத்தல், நீர்ப்பாசனத்தை பராமரித்தல் மற்றும் இயக்குதல், கழிவுநீர் திட்டங்கள் மற்றும் நீர், நில பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பற்றி அப்படிப்புகள் விவாதிக்கின்றன.

நீர்ப்பாசன மற்றும் கழிவுநீர் அமைப்பு மேலாண்மை, பயிரிடுதல் அமைப்புகள், மண் அரிப்பு மற்றும் தண்ணீர் தர பிரச்சினைகள், மண் பாதுகாப்பு மற்றும் நில பயன்பாடு மற்றும் நிலப்படுகை மேலாண்மை உள்ளிட்ட பல விஷயங்களில் தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

கடற்கரைப் பிராந்தியம்

கடற்கரைப் பிராந்தியத்தை சிறப்பான வகையில் பயன்படுத்தி கட்டுப்படுத்துவதற்கான sound engineering பணிகளின் மேலாண்மை மற்றும் வடிவமைப்பு பணிகளுக்கு, hydrodynamics மற்றும்  கடற்கரைப் பிராந்திய அம்சங்கள் ஆகியவைப் பற்றிய ஆழமான அறிவு இருப்பது தேவையாகிறது.

கடற்கரை தண்ணீர் ஆராய்ச்சி குறித்த படிப்பானது, அலைகளின் தன்மைகள் மற்றும் கடற்கரைகளில் அவற்றின் தாக்கம், கடற்கரை படிவு, estuarine hydraulics, கடற்கரைப் பிராந்திய பொறியியல் மற்றும் மேலாண்மையின் பயன்பாட்டு அம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

நகர்ப்புற நீர்வள படிப்புகள்

நகர்ப்புற நீர்வள படிப்புகள், தண்ணீர் பகிர்ந்தளிப்பு மற்றும் சுகாதார பராமரிப்பு, புயல் நீர், நகர்ப்புற பகுதிகளின் பசுமை மேலாண்மைக்கான வீட்டு உபயோக நீர்க்கழிவு மற்றும் நகர்ப்புற சாக்கடை உள்ளிட்டவை தொடர்பானது.

நகர்ப்புற நீர் ஆதாரம் தொடர்பான ஆராய்ச்சி, தண்ணீர் பற்றாக்குறையைப் பற்றிய எதிர்கால மதிப்பீடு மற்றும் மேலாண்மையில் தரநிலை கருத்தாக்கத்தின் பயன்பாடு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கான தண்ணீர் பகிர்ந்தளிப்பின் வடிவமைப்பு மற்றும் மேலாண்மை, நகர்ப்புற வெள்ளம் மற்றும் சாக்கடை ஆகியவற்றுக்கான real-time hydrological தகவல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது நகர்ப்புற நீர் ஆதாரம் தொடர்பான ஆராய்ச்சி.

தண்ணீரின் தரத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருப்பதால், ஒருங்கிணைந்த நீர் கொள்ளளவு - தரம் அடிப்படையிலான அணுகல் என்ற அம்சம், அவசியமான ஒன்றாகிறது. தண்ணீர் வளம் தொடர்பான படிப்புகள், நிலம் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றின் தயார்நிலை மற்றும் நிகழ்வுத்தன்மையை அளவிடுவதற்கான நுட்பங்கள் பற்றி கவனம் செலுத்துகிறது.

ஆறு

மேலும், இப்படிப்புகளின் மூலமாக, ஆற்றுப் பொறியியல் மற்றும் மாடலிங், தண்ணீர் வள திட்டமிடுதல், நிலம் மற்றும் நிலத்தடி நீரை இணைந்து பயன்படுத்துதல், ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை மற்றும் தண்ணீர் வளத் திட்டங்களின் ஒருங்கிணைந்த நீர் வள மேலாண்மை மற்றும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை அளவிடுதல் ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். நீர்வள அமைப்புகளின் கணித மாடலிங் தொடர்பான ஆழமான அறிவும், நல்ல பயிற்சியும் இப்படிப்பில் வழங்கப்படும்.

இயற்கைப் பேரிடர் அம்சங்கள்

வெள்ளம் என்பது ஒரு தவிர்க்க முடியான இயற்கைப் பேரழிவு. இதுபோன்ற பேரழிவுகளால், மனித சமூகத்திற்கு ஏராளமான பொருளாதார இன்னல்கள் ஏற்படுகின்றன. ஆறுகளின் தன்மையைப் பற்றி அறிந்து, அவற்றை சரியான முறையில் மேலாண்மை செய்வதற்கான பொருத்தமான கட்டமைப்பான மற்றும் கட்டமைப்பற்ற மாற்று வழிகளை ஏற்படுத்தவும் மாணவர்களுக்கு தேவையான அறிவு வழங்கப்படுகிறது.

எதிர்பராத சம்பவங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த ஆய்வுகள், ஆற்று நீர்போக்கு பகுப்பாய்வு, வெள்ளத் தடுப்பு மற்றும் இடர் தணித்தல், வெள்ள மாடலிங் மற்றும் முன்திட்டமிடல் போன்ற அம்சங்களை உள்ளடக்கியிருக்கும்.

இத்துறை தொடர்பான படிப்புகள்

முதுநிலைப் படிப்பு

இத்துறை தொடர்பான முதுநிலைப் படிப்பில் சேர, வேளாண் அல்லது சிவில் இன்ஜினியரிங் ஆகிய ஏதேனும் ஒன்றில் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், இதர தொடர்புடைய பொறியியல் படிப்புகள் மற்றும் பயன்பாட்டு அறிவியல் படிப்புகளும் கணக்கில் கொள்ளப்படும்.

டாக்டோரல் படிப்பு

நீர் பொறியியல் மற்றும் மேலாண்மை தொடர்புடைய துறைகளில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

குறிப்பு

நீர் பொறியியல் மற்றும் மேலாண்மை தொடர்பான படிப்புகள் இந்தியாவில் போதிய அளவிற்கு பிரபலமாகவில்லை. வெளிநாடுகளில் இப்படிப்புகள் பரவலாக வழங்கப்படுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us