யாருக்கு எந்த வேலை பொருத்தம்... | Kalvimalar - News

யாருக்கு எந்த வேலை பொருத்தம்...

எழுத்தின் அளவு :

புத்திசாலிக் குழந்தையான தீபாவின் அம்மா, தனது மகள் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். குழந்தையின் நான்கு வயது முதலே இந்த ஆசையை அவர் அவ்வப்போது சொல்லிக் கொண்டேயிருந்தார். இதனால் சில ஆண்டுகளில், தீபாவும், தான் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படத் துவங்கினாள். அவள் 9ம் வகுப்புப் படிக்கும் போது, திறனறிவு பரிசோதனையில், உயிரியலை விட அவளுக்கு சமூகவியலில் கூடுதல் திறன் இருப்பது தெரிய வந்தது. என்றாலும் டாக்டராக வேண்டும் என்ற ஆசையை அவள் விட்டுக் கொடுக்கவில்லை. பதினொன்றாம் வகுப்பில் அவள் அறிவியல் பிரிவை எடுத்தாள். ஆனால் அதில் அவள் சரியாக படிக்கவில்லை. இதனால் அவளுடைய பெற்றோர்கள் பள்ளியை மாற்றினார்கள். வணிகவியல் பிரிவுக்கு மாறிய போது அவள் 94 சதவீத மதிபெண்களை எடுத்தாள். உளவியல் மற்றும் கல்வி ஆலோசகரிடம் அவள் முறையான ஆலோசனை பெற்ற பின்பு தற்போது ஒரு பொருளாதார பத்திரிகையாளராக பணிபுரிகிறார்.

..டி.,யில் எம்.டெக்., முடித்தவன் ரவி. ஒரு மாபெரும் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 24 வயதில் இவ்வளவு பெரிய நிறுவனத்தில் பெரிய பதவி கிடைத்ததில் அவனுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கே பொறாமை. நிறுவனம், சம்பளம், உயர் அதிகாரிகள், உடன் பணிபுரிவோர் என்று யாரும் அவனுக்கு அங்கு பிரச்னை இல்லை. ஆனால் அந்த வேலையில் ரவிக்கு பிடித்தம் இல்லை. நண்பர்கள், குடும்பத்தினர், ஆசிரியர்கள் என்று எல்லோரிடமும் அவனது பிரச்னையை சொல்ல முயன்றும் யாரும் அதை புரிந்து கொள்ளவில்லை. பார்க்கும் வேலையை வெறுக்கவில்லை. ஆனால் அவனது மனம் என்னவோ அந்த வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒவ்வொரு நாள் வேலை முடிந்தவுடன், ஏதோ இழந்தைப் போன்ற உணர்வு இருந்து கொண்டிருந்தது. இதுபோன்ற வேலையைப் பெறத்தான் அவன் கல்லுõரி நாட்களில் கடினமாக படித்தான். ஆனால், வேலை கிடைத்தபின் அதெல்லாம் மாயை என்பது போன்ற உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது.

கேட்டரிங் பட்டதாரியான பிரதீப், அவனது அப்பா இத்துறையில் 25 ஆண்டு அனுபவம் மிக்கவர் என்பதால் அத்துறையில் சேர்ந்து படித்தான். அவனது அப்பா பெரிய ஓட்டலில் பெரிய வேலையில் இருப்பவர். கேட்டரிங் படிக்கும் போது, அவனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் வேலை பார்க்கத் துவங்கியவுடன்தான் பிரச்னை ஆரம்பித்தது. பொருந்தாத ஒரு வேலையை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. கனவாக நினைத்திருந்த விஷயம் கசப்பாக மாறிவிட்டதை உணர்ந்தான். இதனால் அவன் வேலைக்குப் போவதை தவிர்த்தான். அவனுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. சரியான ஒரு ஆள்... பொருத்தம் இல்லாத ஓர் இடத்தில் வேலை செய்வதற்கு இன்னொரு உதாரணம் ஆகிவிட்டான்.

ராஜகோபாலின் கதை இன்னும் மோசமாகவே இருக்கிறது. அவருக்கு 35 வயதாகிறது. பி.., கூட்டறவு மேலாண்மையியல் படித்துள்ளார். திருமணம் ஆகிவிட்டது. அவர்தான் அவர் குடும்பத்தின் முதல் பட்டதாரி. ஆகவே அவருக்கு கல்வி தொடர்பான விஷயங்களைப் பற்றி எடுத்துக்கூற ஆள் இல்லை. ஏதோ தூரத்து உறவுக்காரர் இந்த படிப்பை எடுத்துப் படி என்று போனால் போகிறது என்று அட்வைஸ் கூறியிருந்திருக்கிறார். அதை வேத வாக்காக கருதி, அவர்கள் வீட்டிலிருந்த சொத்துகளை விற்று கல்லுõரிப் படிப்பை முடித்துவிட்டார். அவர் அந்த படிப்பில் சேர்ந்த போதே, அரசின் கொள்கைகள் அனைத்தும் மாறிவிட்டன என்பது அவருக்குத் தெரியவில்லை. இதனால் இத்துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதையும் அவர் அறியவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் கிடைத்த வேலையை பார்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டதுஅவருக்கு ஆங்கிலத் திறன் குறைவு என்பதால் நல்ல வேலை குதிரைக் கொம்பாகவே இருந்தது. வழக்கறிஞர் அலுவலகத்தில் எழுத்தர் வேலை மட்டுமே அவருக்கு கிடைத்தது. அதில் கிடைக்கும் வருவாய் அவரது குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை.

மேலே கண்ட எல்லோரையுமே ஏதோ ஒரு விஷயத்தில் தவறியிருப்பதைப் பார்க்கிறோம். எல்லோரும் நல்ல படிப்பாளிகள். எந்த துறையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து அவர்கள் படித்திருக்கிறார்கள். எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதையும் அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஆனால் ஏதோ ஒரு விஷயம் மட்டும் இடிக்கிறது. அவர்கள் கொஞ்சம் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். தங்களையே சந்தேகப்பட்டுக் கொள்கிறார்கள். தங்கள் மீதே வெறுப்பு. ஏன் இந்த நிலை... எங்கே இந்த தவறு நடந்தது?

இதற்காக ஒரு சர்வே நடத்திய போது, அதில் ஓர் உண்மை தெரியவந்தது. அதன் படி, 80 சதவீதம் பேர், தங்கள் பட்டப்படிப்பு முடித்தபின் 5 ஆண்டுவரை கூட தங்கள் படித்த துறையில் வேலை பார்க்கவில்லை என்பது தெரியவந்தது.

படித்து தகுதி பெற்ற துறையில் வேலை பார்க்கவில்லை எதை குறிப்பிடுகிறது. 40 மற்றும் 50 வயதுகளில் உள்ள பத்துப் பேரிடம் பேசிய போது ஏராளமான அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.

ஆசைப்பட்ட துறையில் கால்பதிக்க முடியவில்லையே... படித்த துறையில் வேலை கிடைக்க வில்லையே... இந்த பிரச்னை ஏன்... எப்படி தீர்ப்பது...? இதைத் தவிர்க்க முடியுமா? யார் இதற்கு பொறுப்பு... பெற் றோர்களா... மாணவர்களா... பள்ளியா... சமூகமா... யாரை குறை சொல்ல... இதற்கு என்ன செய்ய...?

இதையெல்லாம் ஒரு நிமிடம் ஆராய்ந்து பார்க்கும் போது ஒரே ஒரு விஷயம் மட்டும் நமக்கு தோன்றுகிறது... "வேலையை தேர்வு செய்ததில் தவறு நடந்திருக்கிறது". நடந்த சம்பவத்தை திரும்பிப் பார்க்கலாம். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியுமா?

ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நம்மை சுற்றியுள்ளவர்கள் நமக்குத் தரும் அறிவுரைகள் அனைத்தும் அந்த குறிப்பிட்ட நேரத்துக்கு சரியெனத் தோன்றலாம். போகிற போக்கில் சொல்லக்கூடிய இந்த அறிவுரைகளை அப்படியே ஏற்றுக் கொள்வது அறியாத விதையைப் பார்த்து இன்ன மரம்தான் முளைக்கப் போகிறது என்று ஆருடம் கூறுவதுபோல் ஆகிவிடும்.

ஓஷோ கூறியது போல், விதை என்பது என்ன... மரத்தின் ஒரு சுருக்கப்பட்ட வடிவம்தான். நீங்கள் அந்த மரத்தைப் பார்க்க முடியாத அளவுக்கு அந்த மரம் அழுத்தப்பட்டு அதற்குள் அடங்கிக் கிடக்கிறது. ஆனால் வளமான மண், சூழ்நிலை மற்றும் வாய்ப்பளித்தால் அது முளைவிட துவங்கி மரமாக உருமாறும்.

விதைதான் அந்த மரத்தின் அச்சு. உங்களால் விதையை அறிந்து கொள்ள முடியும் என்றால் மரத்தைப் பற்றி அழகாக எடுத்துக்கூற முடியும் அது கனி தரும் காலத்தைப் பற்றியும் கூற முடியும்.

ஒவ்வொரு தனிநபரும் வெவ்வேறானவர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கிறது. ஒவ்வொருவரின் திறனை அறிந்து அதற்கேற்றாற் போல் அவருடைய வேலை வாய்ப்பை அறிந்து கொள்வதுதான் வேலைவாய்ப்பு திட்டமிடல். இது சரியாக நடக்கும் போது, சக்தி பிறக்கிறது. பெரிய முயற்சி இல்லாமலேயே திறமை அதிகரிக்கிறது. ஒரு முறை கன்பூசியஸ் சொன்னார்... உங்கள் வேலையை நீங்கள் மிகவும் ரசித்து செய்தீர்களேயானால்... அது வேலையாகவே இருக்காது... என்றார். இயல்பாகவே இந்த குணம் வெளிப்படும் போது வெற்றி தானாகவே வருகிறது. வேலைக்கான தேவை மற்றும் தனிநபரின் விருப்பம் பூர்த்தியாகிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதையே தங்கள் வாழ்நாள் ஆசையாக கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் உதவ வேண்டும் என்று நினைக்கும் போது, போதுமான தகவல் இல்லாமல் அவர்களே தடுமாறுகிறார்கள்.

குழந்தையின் திறமையைப் பற்றியும் வேலை வாய்ப்புகளைப் பற்றியும் முழுமையாக அறியாத அவர்கள் இந்த இரண்டையும் சரியாக பொருத்த முடியாமல் தவிக்கிறார்கள்.

நல்ல வேலையில் அமர்வதற்கு ஏராளமான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளும் அறிய வேண்டும். இதற்கு தேவை ஒவ்வொருவரும் தங்களது திறனைப் பற்றியும் வேலையின் தன்மையைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

கலாவதி, போதி, சென்னை

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us