சிவில் இன்ஜினியரிங் துறையின் சிறப்புப் படிப்புகள் எவை? | Kalvimalar - News

சிவில் இன்ஜினியரிங் துறையின் சிறப்புப் படிப்புகள் எவை? மே 07,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங்: குறிப்பிட்ட வடிவங்களை உருவாக்குவதே இத் துறையின் அடிப்படை அம்சமாகும். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியர் திட்டமிடுதலில் தொடங்கி, வடிவமைத்தல், பட்ஜெட் கன்ட்ரோல், குவாலிடி கன்ட்ரோல், மெட்டீரியல் டெஸ்டிங் என்பதிலிருந்து மேற்பார்வை செய்வது போன்ற அன்றாட கட்டுமானப் பணி தொடர்புடைய வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங்: கட்டுமானத்தில் உபயோகிக்கப்படும் பல் வேறு பொருட்களின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புகள் குறித்த படிப்பாகும் இது. அழுத்தத்தைத் தாங்கும் உறுதித் தன்மை பற்றி கட்டுமான உபயோகப் பொருட்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். அது போலவே அணைகள், சாலைகள், எண்ணெய் கிணறுகள், பாலங்களில் வேறு விதமான கட்டுமானப் பொருட்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டியிருப்பதால் ஒவ்வொரு கட்டுமானப் பணிக்கும் எப்படிப்பட்ட பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்பதை இவர்களே முடிவு செய்கிறார்கள்.

டிரான்ஸ்போர்டேஷன் இன்ஜினியரிங்: போக்குவரத்திற்காக உபயோகப்படுத்தப்படும் சாலைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள், ரயில்வே தண்டவாளங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை வடிவமைப்பது குறித்த படிப்பாக இது விளங்குகிறது.

நகர்ப்புற திட்டமிடல்: இது அர்பன் பிளானிங் அல்லது சிட்டி பிளானிங் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சண்டிகார், புனே போன்ற நகரங்கள் மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட நகரங்களாகும். அதாவது இங்கு வசிக்கும் மக்கள் சீரிய சாலைகள், பாலங்கள், வீட்டு வசதிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு வசதி போன்ற வசதிகளைப் பெறுவதற்கு உதவுவது இந்தத் துறை தான்.

மக்கள் தொகை நெருக்கடி அதிகமாகவும், காற்றோட்ட வசதியில்லாதாகவும், குறுகிய சாலைகளையும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்ததாகவும் கழிவு நீர் வசதிகள் அற்றதாகவும் சிறிய மழையினால் கூட மழை நீர் தேங்கி நிற்கும் சாலைகளைக் கொண்ட நகரங்களுடன் ஒப்பிடுகையில் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள இது போன்ற நகரங்களின் சிறப்பை அறியலாம். நகர்ப்புற திட்டமிடல் படிப்புகளின் நோக்கம் என்பது நவீன, வசதியான, பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நகர் அல்லது ஊரை வடிவமைப்பதாகும்.

ஜியோமெக்கானிக்கல் இன்ஜினியரிங்: எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும் சரி, அதன் அடித்தளம் என்பது அது அமைந்துள்ள பூமியின் பரப்பைச் சார்ந்துள்ளது. எனவே மண்ணின் தன்மையே எந்தக் கட்டடத்திற்கும் ஆதாரமாக உள்ளது. இவற்றைப் பற்றிப் படிப்பது தான் ஜியோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங். இதைப் படிப்பவர்களில் பெரும்பாலானோர் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் தாதுக்களை கண்டறியும் தொழிற்சாலைகளில் பணியில் இருக்கிறார்கள். தண்ணீர் மற்றும் மரைன் இன்ஜினியரிங்: தண்ணீர் தொடர்புடைய வேலைகளுக்காக நகரங்களில் கட்டப்படும் மாதிரிகளிலும்,
விவசாயம், கால்வாய்கள், அணைகள், வேஸ்ட் வாட்டர் டிரீட்மென்ட் ஆலைகள், துறைமுகம், எண்ணெய் கிணறுகள், ஹைட்ரோ எலக்ட்ரிக் மின்சார வசதிகள் தொடர்புடைய படிப்புகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவையே.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us