வளமான நாட்டை உருவாக்குவதே கல்வியின் லட்சியம்!

எழுத்தின் அளவு :

இந்தியா 2020 அல்லது அதற்கு முன்பாக ஒரு வளர்ந்த நாடாக வேண்டும் என்ற தீவிர வேட்கையில் உள்ளார் டாக்டர் அப்துல் கலாம்.


வளர்ந்த இந்தியா உருவாவது வெறும் கனவு அல்ல. அது இந்தியர்களின் உள்ளங்களில் உள்ள தொலைநோக்கும் கூட அல்ல. அது ஒரு பணி இலக்கு. இதனை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து செயல்படுவோம் என்று உறுதிபட கூறி வருகிறார். கனவு மெய்ப்பட தனது கருத்துக்களை இங்கு மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் கலாம்.


நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சார பெருமையை மீட்டெடுக்க, அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பயன்படுத்தி, அறிவார்ந்த, செயல்திறம் மிக்க, வளமான நாட்டை உருவாக்குவதே நமது கல்வித் திட்டத்தின் நோக்கமாக அமைய வேண்டும்.


இந்தியாவில் 35 கோடிப்பேருக்கு எழுத்தறிவும் வேலைவாய்ப்புக்கு தகுதிப்படுத்தும் திறன்களும் தேவைப்படுகின்றன. ஏழ்மைக் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் சத்தான உணவின்றி உள்ளனர். இவர்களில் சிலரே 8 ஆண்டு கல்வி பயில்கின்றனர். குழந்தையின் அடிப்படை உரிமை கல்வி. ஏழை குழந்தைகள் அனைத்தும் வாழ்நாள் முழுக்க ஏழ்மையிலேயே வாழ நாம் அனுமதிக்கலாமா? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும். அவர்கள் படிப்பதைப் பார்த்து திருப்தி அடைய வேண்டும்.


கல்விக்கான தகவல் வளம் எல்லோருக்கும் சமமாக கிடைப்பதில்லை. கிராமத்தில் இருப்பவர்களில் நல்ல பொருளாதார நிலைமையில் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பதை புரிந்திருக்கிறார்கள். சிலர் கல்வியின் வாய்ப்புகளை அறிந்திருந்தும் அதை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்வதில்லை. இன்னும் பலர் ஏழ்மை நிலையில் இருப்பதோடு, கல்வியின் முக்கியத்துவத்தை உணராமல் தொடர்ந்து ஏழ்மையில் உழன்று வருகிறார்கள்.


எல்லாத் தரப்பு மக்களும் கல்வியின் அவசியத்தைப் பற்றி உணர வேண்டும். தொழில்நுட்பத்தின் உதவியால் எல்லோருக்கும் அறிவு வளம் சென்று சேர உதவ வேண்டும். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் மட்டுமே கல்விக்காக செலவழிக்கிறோம். நம்நாட்டில் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்களாகிவிட்டோம் என்றால், 6 முதல் 7 சதவீதம் செலவழிக்க தயாராக வேண்டும். மத்திய அரசின் எல்லாத் துறைகளும் கல்வித் துறையான மனித வள மேம்பாட்டுத் துறையுடன் பங்கேற்கும் ஒரு நிலை உருவாகவேண்டும்.


எல்லா பள்ளிகளிலும் கற்பித்தலின் தரம் உயர வேண்டும். கிராமப்புறங்களில் படித்த மாணவர்களும் பிற பள்ளிகளில் படித்தவர்களுக்கு இணையாக இருக்க வேண்டும். இதற்காக அரசு சாரா அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உதவ வேண்டும். பாடத்திட்டம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். சிறப்பாக பாடம் நடத்த ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாடத்துடன் நல்ல பழக்கவழக்கங்களையும் நேர்மையையும் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.


தேர்வு முறைகள் எளிதாக வேண்டும். நான் 1950களில் தேர்வு எழுதிய போது, ‘ஓபன் புக்’ தேர்வு திட்டம் இருந்தது. தேர்வின் போது புத்தகங்களை புரட்டிக் கொள்ளலாம். ஆனால் அது கடினமானதுதான். நமது கற்பனைத் திறனை வளர்க்கும் படியாக கேள்விகள் அமைக்க வேண்டும். இதுபோன்ற தேர்வுமுறையை தற்போது, தேர்வு நடத்துபவர்கள் பரிசீலிக்கலாம்.


எதிர்காலத்தில் ‘விர்ச்சுவல் கிளாஸ்ரூம்’ கொண்டு வர வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர்கள் எங்கிருந்தாலும் சிறந்த முறையில் கல்வி கற்க அது உதவும். டிஜிட்டல் நூலகங்கள்தான் எதிர்காலத்தில் அறிவை எல்லா இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும். தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி முறைதான் சிக்கனமானதாகவும் இருக்கும்.


காற்றோட்ட வசதி, வெளிச்சம், வகுப்பறைகளில் விசாலமான இடம், நூலகம், ஆய்வுக்கூட வசதி, தகவல் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பான குடிநீர் வசதி, தூய்மையான கழிப்பிடம், விளையாட்டு வசதி ஆகியவற்றை நம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2-3 சதவீதம் கல்விக்கு கூடுதலாக ஒதுக்கினாலே இவையெல்லாம் சாத்தியமாகும்.


பெற்றோர்கள் தங்கள் ஒட்டுமொத்த நடவடிக்கையிலும் பழக்க வழக்கங்களிலும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். படித்து வெளியேறும் மாணவர்களுக்கு ஏற்ப, வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. வேலை வாய்ப்பு அதிகம் பெறுவதற்காக மூன்று அம்ச உத்திகளைப் பயன்படுத்தலாம்.  முதலாவதாக, நமது கல்வித் திட்டத்தில் தொழில்முனையும் விஷயங்கள் இடம்பெற்று அது மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழில் துவங்குவதற்கான தகுதியை வளர்க்க வேண்டும். பல்வேறு விஷயங்களில் நிபுணத்துவம், விடாமுயற்சி ஆகியன நல்ல தொழில்முனைவோரை உருவாக்குகிறது.



கலை, அறிவியல் மற்றும் வணிக பாடங்களை படிக்கும் மாணவர்களுக்கு கூட, தொழில்முனையும் வகையிலான பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் அளிக்க வேண்டும். இரண்டாவதாக, கிராம அளவில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் அளவில் வங்கிகள் வர்த்தக மூலதனத்துக்கு கடன் அளிக்க வேண்டும். இளம் தொழில்முனைவோரின் புதியவகை தயாரிப்புகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.


மூன்றாவதாக, சந்தைப்படுத்த தகுதியான பொருட்களின் உற்பத்தி மற்றும் மக்கள் வாங்கும் திறனை அதிகப்படுத்துவதற்கான பொருளாதார சாதக நிலையை உருவாக்க வேண்டும். கிராமப்புற போக்குவரத்து, தகவல் தொடர்பு இணைப்புகள், மாநில அளவிலான நதிநீர் இணைப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள், மின் திட்டங்கள் மற்றும் சுற்றுலா ஆகிய மிகப்பெரிய திட்டங்களை இணைத்து மேற்கூறிய பொருளாதார சாதக நிலையை உருவாக்கலாம்.


நமது கல்வித்திட்டம், வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். 40 கோடி வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களில் 3 கோடியே 60 லட்சம் பேர் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் நம்மால் வேலை வாய்ப்பு வழங்க முடியும். தரிசு நிலங்களில் காட்டாமணக்கு வளர்த்தல், மூலிகை செடி வளர்ப்பு உள்ளிட்ட வாய்ப்புகளை வழங்கினால் இவர்களில் பெரும்பாலானோருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.


உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...



 

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us