வானை அளப்போம்... கடல் மீனை அளப்போம்!

எழுத்தின் அளவு :

இந்தியா உலகின் முன் தலைநிமிர்ந்து நின்றால் தவிர, யாரும் நம்மை மதிக்கப் போவதில்லை. இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை. வல்லமையே வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது.


 


படைபல வல்லமையும் பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும் என்று கூறிவரும் டாக்டர் அப்துல் கலாம், மாணவர்களுக்காக தன் எண்ணங்களை எழுத்து மூலம் பகிர்ந்து கொள்கிறார்.


கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளில் இந்திய வரலாற்றில், உலகம் முழுவதிலும் இருந்து அன்னியர் படை எடுத்து, நம் நாட்டை பறித்துக் கொண்டது ஏன் என்று தெரியுமா?


அலெக்சாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுக்கீசியர், பிரிட்டிஷார், பிரெஞ்சு, டச்சுக்காரர் இந்தியாவுக்குள் புகுந்து, கொள்ளை அடித்து, நமக்கு உரிமையானவற்றை கைப்பற்றினர். நாம் அதுபோல் யார் மீதும் படை எடுக்கவில்லை. எந்த நாட்டையும் கைப்பற்றவில்லை. யாருடைய நாட்டையும், கலாசாரத்தையும் வரலாற்றையும் மாற்றி அமைத்து சீரழிக்கவில்லை.


1857ம் ஆண்டில் சிப்பாய் புரட்சி, அதுதான் இந்திய சுதந்திர புரட்சி. அந்த சுதந்திரத்தை நாம் காத்து கண்காணித்து சீர்படுத்த வேண்டும். சுதந்திரமில்லை என்றால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள்.


“ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்...
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்...
வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்...
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்...”
என்றார் பாரதி.


முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியை செய்து வருவதன் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகின்றனர். இந்த முயற்சியில் ஒரே மனதுடன் நாம் ஈடுபட்டிருக்கிறோம். சமூக மனித பிரச்னைகளைத் தீர்க்க முற்போக்கான அறிவியல் பொறியியல் நுணுக்கங்களை பயன்படுத்துவதில் உலக சமூகத்தின் முன் இரண்டாம் தரத்தில் இருக்கக்கூடாது.


இந்தியாவின் அடுத்த தேவை தொழில்வள உடல்நல வளர்ச்சி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முன்னேறும் நாடாக கருதப்பட்டது. தற்போது நாம் முன்னேறிய நாடாக எண்ணிக் கொள்ளும் தருணம் வந்துவிட்டது.  எல்லா நாடுகளுமே இந்தியா தங்களுக்கு நட்பு நாடாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றன. இந்தியா ஒரு பொறுப்புள்ள நாடு. பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை பரப்பும் நாடாக அது ஒரு போதும் இருக்காது. ஆனால் நம்மை சுற்றி அணு ஆயுத நாடுகள் இருக்கின்றன. எனவே இந்தியாவும் அணு ஆயுத நாடாக மாறியிருக்கிறது.


நம் நாட்டில் வறுமை குறைந்து வருகிறது. நமது உன்னத சாதனைகள் உலகை கவர்ந்துள்ளன. இந்தியா உலகின் முன் தலைநிமிர்ந்து நின்றால் தவிர, யாரும் நம்மை மதிக்கப் போவதில்லை. இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை. வல்லமையே வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைபல வல்லமையும் பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும்.


1963ல் முதன்முதலாக ரஷ்யாவும், அமெரிக்காவும் மனிதர்கள் செல்லக்கூடிய விண்கலங்களில் அமர்ந்து அண்டவெளியில் சுற்றி வந்த போது, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அப்போதுதான் துவக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி இந்தியாவின் முதலாவது இரண்டு அடுக்கு ஏவுகணையான நைக்-அபாச்சி திருவனந்தபுரம் தும்பா ஏவுதளத்திலிருந்து, இடிக்கனலுடன் உறுமிக் கொண்டு, வானைக்கிழித்துக் கொண்டு, புவியீர்ப்பை எதிர்கொண்டு, செங்குத்தாக எழுந்தது.


அது ஏறத்தாழ 25 கிலோ எடையுள்ள சோடியம் ஆவி வீச்சு கலனை சுமந்து கொண்டு, 125 மைல் உயரத்தை எட்டியது. தும்பா ஏவுகணை மையம் ராக்கெட் ஏவ சாதகமான புவியின் மத்திய காந்த ரேகையில் அமைந்துள்ளது. இதுதான் இந்திய விண்வெளி படையெடுப்பில் தனது முதல் அடியை எடுத்து வைத்தது.


இந்தியாவில் இதுவரை எட்டாத உயரங்களை எட்டுவதற்கு இன்றும் இளைஞர்களுக்கு வாய்ப்புள்ளது. முடியாததை முடித்துக்காட்டும் வல்லமை இளம் சமுதாயத்திடம் உள்ளது. தொழில்நுட்பங்களை படைப்பதில் தற்போதுள்ள மாணவர்களுக்கு பங்கு உண்டு.


2020ம் ஆண்டில் வல்லரசான பின்னர் நாம் சொகுசாக ஓய்வு எடுக்கலாம் என்பது அர்த்தம் அல்ல. நம் மக்கள் நலனுக்குரிய முடிவில்லாத பயணம் அது. பல்வேறு திறமைகளும் அறிவாற்றலுடன் நெஞ்சங்களில் கனல் ஏந்திய எண்ணங்களும் கொண்ட மக்களாலேயே இவற்றை செய்து காட்ட முடியும்.


வளர்ந்த நாடாக உருமாற நாம் போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று ஒவ்வொருவரும் பெருமைப் படவேண்டும். அத்தகைய நிலையில்தான் இந்தியா வளர்ந்த நாடு  என்று சொல்லிக் கொள்ளும் நிலையை எட்டும்.


உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...


- டாக்டர் அப்துல் கலாம் -


குறளுக்கு கலாம் தெளிவுரை


குறள்:
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற் கிவ்வைந்து


விளக்கம்:
ஒரு நாடு வளமான நாடாக கருதப்பட வேண்டுமானால் அங்கு நோயின்மை, செல்வச் செழிப்பு, நல்ல விளைச்சல், அமைதியும் சுமுகமான சமுதாய சூழ்நிலையும், வலிமையான பாதுகாப்பும் நிலவ வேண்டும்.


குறள்:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்


விளக்கம்:
நாம் நினைப்பதை நமது கடின உழைப்பாலும் தோல்வி கண்டு துவளாத துணிவாலும் சாதிக்கலாம். நமது சிந்தனை சிறப்பானதாக இருக்கும் போது, நல்ல முயற்சிகளும் கடின உழைப்பும், துணிவும் நமக்கு இயல்பாகும். அந்த முயற்சி நமது வாழ்வை வளமாக்கும்.


குறள்:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதுஒப்பது இல்


விளக்கம்:
மனித வாழ்வில் எந்த ஒரு செயலையும்
துவங்கி முடிக்கும் வரை ஏதாவது ஒரு தடங்கல் அல்லது துன்பம் வருவது இயற்கை. துன்பத்தை கண்டு கலங்கக் கூடாது. உள்ளத்தில் உறுதி வேண்டும். உள்ள உறுதியால் துன்பத்தை விரட்டி அடிக்க முடியும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us