மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பதில்கள்!

எழுத்தின் அளவு :

கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் இ-மெயில் வழியாக பதில் அனுப்பியுள்ளார்.

மாணவர்களின் கேள்விகளுக்கு கலாமின் பதில்கள் இதோ...


1. இந்தியாவை சிகரத்தின் உச்சிக்கு கொண்டு செல்ல இளைய சமுதாயத்துக்கு தங்களுடைய அறிவுரை என்ன? (ஆர்.சரண்யா, வயது: 17, சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)
டாக்டர் அப்துல் கலாம்: நாம் கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையின் படி, எதிர்வரும் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக கீழ்க்கண்ட ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
அவை:

1. பெண் கல்வி மற்றும் உடல்நலம்
2. விவசாயம் மற்றும் உணவு பதனிடல்
3.தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பம்
4.உள்கட்டமைப்பு வளர்ச்சி
5.முக்கிய தொழில்நுட்பங்களில் சுயசார்பு ஆகியன.>

இவ்விஷயங்களை மனதில் கொண்டு இளைஞர்கள் தங்கள் படிப்பில் மிகச்சிறந்து விளங்குவதன் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக்க உதவலாம். நீங்கள் ஒவ்வொருவரும், வாரவிடுமுறை நாட்களில் உங்களை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு சென்று அங்கு 5 பேருக்கு படிக்க எழுத உதவலாம். உங்கள் வீட்டை சுற்றியும் பள்ளியை சுற்றியும் ஐந்து மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்கலாம். எதை செய்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும். இதன் மூலம் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறுவதற்கு நீங்கள் உதவுகிறீர்கள்.

2.பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பலரும் கண்டிப்புடன் கடைபிடிப்பதில்லை. ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக நடந்து கொள்ள உங்கள் ஆலோசனையைக் கூறுங்களேன்? (பசுவலிங்கப்பா, வயது 25, கோகுலம் காலனி, கோவை-41)

டாக்டர் அப்துல் கலாம்: புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடானது என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். நல்ல உடல்நலம் நல்ல மனநலம் ஆகியனதான் நல்ல வாழ்க்கைக்கான, நல்ல குடும்பத்துக்கான, நல்ல நாட்டுக்கான அடித்தளம். முடிவு எடுக்க வேண்டியது தனிநபர்கள்தான். ஆனால் அது அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நாட்டுக்கும் நல்லதாக இருக்க வேண்டும்.

3.இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதில் தகவல் தொழில்நுட்பம் என்ன பங்கு வகிக்கும்? (வி.கண்ணன், வயது 18, வி.எச்.என்.எஸ்.என்., கல்லூரி, விருதுநகர்.)
டாக்டர் அப்துல் கலாம்:சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்க முடியும். குறிப்பாக கிராமப்புற வளர்ச்சியிலும் அதிக பங்கு வகிக்க முடியும். தொலை தொடர்பு கல்வி, மின்னணு நிர்வாகம், தொலை மருத்துவம், மின்னணு நுõலக வசதி மற்றும் அறிவு மையங்கள் ஆகியவற்றை அமைக்க அவை உதவும். இது அறிவு மற்றும் திறன் அளிக்கும். மக்களிடம் விழிப்புணர்வு, கல்வி, சுகாதாரம் மற்றும் மின்னணு நிர்வாக சேவையை மக்களுக்கு அளித்து அவர்களை சக்தி மிக்கவர்களாக்கி தரமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது. பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயம், சேவை மற்றும் உற்பத்தி துறைகளின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. தொழில் சிறப்பாக நடத்துவதற்கான களம்தான் தகவல் தொழில்நுட்பத்துறை.
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us