மாணவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதில்கள்! (9)

எழுத்தின் அளவு :

தினமலர் கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் இ-மெயில் வழியாக பதில் அனுப்பியுள்ளார்.


மாணவர்களின் கேள்விக்கு டாக்டர் அப்துல் கலாமின் பதில்கள்:


கிராமப்புறங்களை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும்?
- சீனிவாசன், அன்னை தெரசா முதுநிலை மற்றும் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி.
- மிதுன்சிங், காமராஜர் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, விருதுநகர்


கிராமப்புறங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் புரா (PURA). இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், கிராமப்புறங்களிலேயே நகரங்களில் கிடைக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இவ்வசதிகளை செய்து கொடுக்க நான்கு விதமான இணைப்புகள் அவசியம். முதல் இணைப்பு சாலை போக்குவரத்து. இரண்டாவது தகவல் தொடர்பு இணைப்பு. மூன்றாவது அறிவுசார்ந்த இணைப்பு. இந்த மூன்றையும் சேர்த்தால்தான் நான்காவதாக பொருளாதார இணைப்பு உருவாகும்.


அருகில் உள்ள கிராமங்களை இணைத்து புரா குழுமம் அமைய வேண்டும். பிறகு புரா திட்டத்தின் முதல் இணைப்பாக அக்கிராமங்களுக்கு சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்கள், எலக்ட்ரானிக் தொடர்புகள், மின்னணு தொலைபேசி வசதிகள் ஆகியவற்றை செய்து தர வேண்டும். அப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்டு சுற்றிலும் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். புரா அமைந்துள்ள கிராமங்களைச் சுற்றி கல்வி அறிவு இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.


இதன் வழியாக சிறுதொழில்கள் பெருகி குறைந்த விலையில் தரமான பொருட்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்படும். அப்போது இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.


 


இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி கூறுங்களேன்?
- செந்தில் பாலாஜி, சி.பி.டி., கல்லூரி, தரமணி, சென்னை.


தற்போது அணுசக்தி மூலம் நாம் பெறும் மின்சாரம் 3 சதவீதம் மட்டுமே. 2030ம் ஆண்டு வாக்கில் நமக்கு 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அப்போதுதான் நம்முடைய பொருளாதார வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்ள முடியும். இதற்கு 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அணு உலைகளிலிருந்து பெற்றாக வேண்டும். அப்போதுதான் நிலக்கரியை சார்ந்து மின் உற்பத்தி செய்வதை நாம் தவிர்க்க முடியும். தற்போது 55 சதவீத மின் உற்பத்தி நிலக்கரி மூலம் நடைபெறுகிறது. இதை 2030ம் ஆண்டில் 33 சதவீதமாக குறைக்க வேண்டும்.


 


வெற்றியின் ரகசியம் என்ன?
- விமல்ராஜ், பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லூரி, கோவை
- ஆகாஷ் சந்திரன், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, அண்ணாநகர், சென்னை
- ஐஸ்வர்யா, டி.ஏ.வி., பள்ளி, வில்லிவாக்கம்
- புஷ்பம், ஜெயா இன்ஜினியரிங் கல்லூரி, திருநின்றவூர்


எனது வெற்றியின் ரகசியம் எனது பெற்றோர்கள்தான். நான் எப்போதுமே என்னுடைய ஆசிரியர்களை நினைக்கிறேன். அவர்கள்தான் என்னுடைய வாழ்க்கைக்கான லட்சியத்தை அளித்தனர். நீங்கள் கடினமாக உழைக்கும் போது, சில பிரச்னைகள் உங்களை தேடி வரும். பிரச்னைகளை வரவிடாமல் தடுத்து வெற்றி அடையுங்கள். அப்போது நீங்கள் தோல்வியை துவள செய்து
வெற்றியாளராக உருவாவீர்கள்.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us