சேவை செய்யும் ஆர்வமுடையவர்களுக்கான படிப்பு! | Kalvimalar - News

சேவை செய்யும் ஆர்வமுடையவர்களுக்கான படிப்பு!

எழுத்தின் அளவு :

படித்து சம்பாதிக்க மட்டுமே நினைக்கும் மாணவர்கள் மத்தியில், சமூக சேவையில் ஆர்வமுள்ளவர்களும் உண்டு. அவர்களுக்கான ஒரு முக்கியப் படிப்பைப் பற்றி இங்கே காணலாம்.

MSW என்றால் என்ன?

சமூகப் பணி என்பது ஒரு தொழில்முறை படிப்பாகும். அதில் பயிற்சியின் மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது. இந்தப் படிப்பானது, பல்வேறுவிதமான சமூக சிக்கல்களைப் பற்றிய புரிதலை மாணவர்களுக்கு வழங்குகிறது மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது. ஒருவகையில் பார்த்தால், MSW என்பது MBA படிப்பை ஒத்தது.. ஒருவருக்கு, அவர் தொழில்முறையாக சமூக சேவையை வழங்கும் பயிற்சியை இந்தப் படிப்பு வழங்குகிறது.

நவீன மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி, சமூகத்தின் சிக்கல்களைத் தீர்க்க மற்றும் சமூகத்தை மேம்படுத்த இந்தப் படிப்பு கற்றுத் தருகிறது.

படிப்பின் பெயர்

இந்தப் படிப்பு பரவலான அளவில் MSW என்று அறியப்படுகிறது. அதேசமயம், பல பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள், MA (Social work) போன்ற வேறுசில பெயர்களிலும் இப்படிப்பை வழங்குகின்றன. ஒரு தோராயமான கணக்கீட்டின்படி, சுமார் 300 கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இப்படிப்பை மேற்கூறிய பெயர்களில் வழங்குகின்றன.

TISS போன்ற சில முக்கிய கல்வி நிறுவனங்கள், இப்படிப்பிற்கான பாடத்திட்டங்களை வடிவமைப்பதில் சிறந்த அக்கறை எடுத்துக்கொள்கின்றன. மேலும், அத்தகைய கல்வி நிறுவனங்கள், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டங்களை புதுப்பிக்கவும் செய்கின்றன.

அதேசமயம், பல மாநில பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் MSW பாடத்திட்டங்கள் நிகழ்காலத்திற்கேற்ப விரைவாக மாறுவதில்லை. இதனால், இத்தகைய கல்வி நிறுவனங்களில் MSW படிக்கும் மாணவர்கள் மேற்கூறிய கல்வி நிறுவனங்களின் மாணவர்களைவிட பின்தங்குகிறார்கள். மேலும், சில கல்வி நிறுவனங்களில், இந்த துறைக்கு, சரியான ஆசிரியர்களோ, தேவையான வசதிகளோ மற்றும் உபகரணங்களோ இருப்பதில்லை.

மேலும், இந்தப் படிப்பை பொறுத்தவரை, அடிப்படை நிலையில் ஸ்பெஷலைசேஷன் என்ற தகுதி, பெரிய ஏற்றத்தை தந்துவிடுவதில்லை.

எது சிறந்த கல்வி நிறுவனம்?

MSW படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில், பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்கள் போன்ற அம்சங்களைப் பொறுத்து பெரிதாக எந்த வித்தியாசங்களும் இருப்பதில்லை. இத்துறையை விரும்பித் தேர்ந்தெடுக்கும் மாணவர்களும், இத்துறை சார்ந்த வேலைவாய்ப்பு நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.

இதில் இன்னொரு முக்கிய சிக்கல் என்னவெனில், சமூக பிரச்சினைகளை களைய வேண்டிய இந்த துறையிலேயே, பல பாகுபாடுகள் உண்டு. MSW படிப்பை, பலவித கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளும் மாணவர்கள், வேலைவாய்ப்பை பெறுகையில் அவர்களிடையே சம்பள வேறுபாடுகள் உண்டு.

வேறு சாதாரண பகுதிகளில் இருக்கும் கல்வி நிறுவனங்களைவிட, பெரிய நகர்ப்பகுதிகளில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் MSW படிக்கும் மாணவர்கள் சிறந்த வேலைவாய்ப்புகளை பெறுகிறார்கள். TISS மற்றும் DSSW போன்ற கல்வி நிறுவனங்களில் இப்படிப்பை வழங்குவதில் புகழ்பெற்று விளங்குகின்றன.

வேலை வாய்ப்புகள்

இத்துறை சார்ந்த பணி வாய்ப்புகள் பல நிலைகளில் உள்ளன. அடிப்படை நிலையிலான பணிகளில் உங்களின் வேலைப்பளு அதிகமாக இருக்குமே தவிர, சம்பளம் குறைவாகவே இருக்கும். இதுபோன்ற பணி நிலைகளில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றாலும்கூட, சம்பளம் சொல்லிக்கொள்ளும் படியாக உயர்ந்துவிடாது. இதற்கு காரணம், நிதியளிக்கும் மற்றும் கொள்கை ஏஜென்சிகள்தான்.

அதேசமயம், நீங்கள், IDRC அல்லது Action Aid போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்தால், நல்ல ஊதியம் பெறலாம். Action Aid போன்ற நிறுவனத்திற்கு ஆலோசகராக பணிபுரியும் ஒருவர் மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். ஆனால், இத்தகைய வாய்ப்புகள் குறைவானவை மற்றும் போட்டிகள் நிறைந்தவை.

இந்தப் படிப்பு யாருக்கானது?

நிறைய சம்பாதிக்க வேண்டும். பணம் மட்டுமே குறிக்கோள். வேலைபார்க்க வேண்டும், அதன்மூலம் அதிகம் சம்பாதிக்க வேண்டும். வேறு எதைப்பற்றியும் கவலையில்லை என்று நினைக்கும் நபர்களுக்கு இந்தப் படிப்பு ஒத்துவராது.

வருமானம் பெரிய விஷயமில்லை. வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்தால் போதும். ஆனால், நான் சார்ந்த, என் சமூகம் சார்ந்த மக்களுக்கு, நான் கற்ற கல்வியின் மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இந்தப் படிப்பு மிகவும் ஏற்றது.

இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் அவை வழங்கும் பட்டம்

* Faculty of Social work - Jamia Millia Islamia - MA degree

* Visva - Bharati - Deemed university - MSW degree

* Tata Institute of Social sciences - Deemed university - MSW degree

* Nirmala Niketan - Autonomous - MSW degree

* Delhi School of Social work - Delhi university - MA degree

இத்துறை சார்ந்த சில Specialisation படிப்புகள்

* Criminology and Justice
* Community Health
* Mental Health
* Urban Development
* Psychiatric Social work
* Community Development
* Correctional Administration

இப்படிப்பில் சேர்வதற்கான பொது தகுதிகள்

* இளநிலைப் பட்டப் படிப்பில் 40% முதல் 55% வரையிலான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.(கல்வி நிறுவனங்களைப் பொறுத்து மதிப்பெண்கள் வேறுபடும்).

* மாணவர்கள் சேர்க்கை செயல்பாட்டில், நுழைவுத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவை இடம்பெறும்.

கல்விக் கட்டணம்

* அந்தந்த கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, ஒரு வருடத்திற்கு ரூ.700 முதல் ரூ.36,940 வரை வேறுபடுகிறது. மேலும், சில தனியார் கல்வி நிறுவனங்களில், கட்டணம் இதையும்விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

* இப்படிப்பிற்கான தனி ப்ரொபஷனல் கவுன்சில் இன்னும் உருவாக்கப்படவில்லை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us