ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா? (14) | Kalvimalar - News

ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா? (14)

எழுத்தின் அளவு :

ஒரு போலீஸ் அதிகாரியால் எத்தகைய சாதனையை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக ஒரு கதையை கூறுவதாக சென்ற வாரம் கூறியிருந்தேன்.

18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த சம்பவம் இது. அப்போது ஒரு கொடூரமான கொள்ளைக்கும்பல் நாடு முழுவதும் பரவியிருந்தது. பல நுவற்றாண்டுகளாக கொள்ளை தொழிலையே மேற்கொண்ட அந்த கும்பல் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கவும் காரணமாக இருந்தது. அவர்கள் 50, 100 பேர்களை கொண்ட கும்பலாக பிரிந்து கொள்வார்கள். நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகளுடன் சேர்ந்து கொள்வார்கள். பின்னர் சரியான தருணத்தில் அவர்கள் மீது பாய்ந்து, தங்களிடம் இருக்கும் துணியால் அவர்களின் கழுத்தை நெரித்து கொன்றுவிடுவார்கள். வழியில் இருக்கும் கல்லறைகளில் அவர்களை புதைத்து விட்டு, அவர்களின் பொருட்களை அள்ளிக்கொண்டு சென்று விடுவார்கள்.

தனியாளாக 100 க்கு மேற்பட்ட அப்பாவிகளை கொன்ற கொள்ளையர்களும் இருந்தனர். மேஜர் சர் வில்லியம் ஹாரி ஸ்லீமேன் இதற்கு முடிவு கட்டினார். வெளிநாட்டுக்காரராக இருந்தாலும், இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை பயணிகளுக்கு பாதுகாப்பான பகுதியாக அவர் மாற்றினார். கொள்ளையர்களை ஒழிக்க அவர் கையாண்ட எளிய வழி அவர்களை சுட்டுக்கொல்வது.

தற்போதைய சூழலில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எதிர்கொள்ளும் அபாயகரமான பிரசனைகள், தீர்க்கும் முறைகளை பற்றி கூறுகிறேன். ஐ.பி.எஸ்., பணி வியக்கவைக்கும் சாகசங்கள் செய்ய வாய்ப்புகளை வழங்குகிறது. வடகிழக்கு பகுதியில் நடந்த கலகங்கள், காஷ்மீரில் பயங்கரவாதம், ஆந்திராவின் நக்சல் பிரச்னை, குஜராத்தில் மதக்கலவரம் போன்றவற்றை எதிர்த்து போராடிய போலீஸ் படைக்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகளே தலைமை வகித்தனர்.

 

தமிழகத்தில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., தேவாரம், தனது பதவி காலத்தில், தொடர்ந்து நடத்திய என்கவுன்டரால் நக்சல் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. அவர் போலீஸ்துறைக்கு முன்நின்று வழிகாட்டினார். இந்திய போலீஸ்துறையிலேயே அவருக்கு நிகராக மற்றொருவரை குறிப்பிடுவது கடினம். தனது சாதனைகளுக்காக ஜனாதிபதி பதக்கம் பெற்றவர் டி.ஜி.பி., தேவாரம்.

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி. திகார் சிறையில் கைதிகளின் வாழ்க்கையை முழுமையாக மாற்றிக் காட்டினார். இதற்காக அவருக்கு ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது. அவரது சேவையை பாராட்டி ஐ.நா., சபை தனது பல அமைதிக்குழுக்களில் அவரை நியமித்தது. இந்திய பெண்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இவர் விளங்குகிறார்.

 

பஞ்சாபில் துணிச்சலுடன் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய கே.பி.எஸ். கில் மிகப்பெரிய கதாநாயகனாக போற்றப்படுகிறார். காட்டுக் கொள்ளைக்காரன் வீரப்பன், மேற்கு தொடர்ச்சி மலையின் 16 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அட்டகாசம் செய்துவந்தான். இவன் காட்டிலாகா அதிகாரிகள், போலீஸ்காரர்கள் உள்பட 120க்கும் அதிகமானோரை கொன்று குவித்தவன். இவனை சுட்டு வீழ்த்தியன் மூலமாக போலீஸ்துறையிலேயே திட்டமிட்டு, சிறப்பாக செயல்படக்கூடிய அதிகாரியாக விஜயகுமார் ஐ.பி.எஸ்., கருதப்படுகிறார். வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையில் நானும் இருந்தேன்.

இது பற்றி மேலும் சில விஷயங்களை அடுத்த வாரமும் கூறுகிறேன்.

- சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.,

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us