அரசு பொதுத்தேர்வில் அமோக வெற்றிபெற முக்கிய டிப்ஸ்... | Kalvimalar - News

அரசு பொதுத்தேர்வில் அமோக வெற்றிபெற முக்கிய டிப்ஸ்...

எழுத்தின் அளவு :

சவால்களை எதிர் கொள்ளாவிட்டால் வாய்ப்புகளை இழக்க நேரிடும். எனவே, சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைவதே மாணவரின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அரசுப் பொதுத்தேர்வு நடந்துகொண்டிருக்கின்ற இத்தருணத்தில் சில குறிப்புகளைத் தற்போது பயன்படுத்தினால் மாணவர்கள் அனைவரும் ஒரு மாபெரும் வெற்றியைப் பெறலாம்.

ஒரு வேளை இதற்கு முன் உள்ள தேர்வுகளில் நன்றாகத் தேர்வு எழுதாவிட்டாலும் கூட பரவாயில்லை. வருகின்ற தேர்வுகளில் மாபெரும் வெற்றி பெறுவதற்கு, முயற்சியுடன் முன்னேறுங்கள், முழு வெற்றி கிட்டும்.

உடல்நலம்: தற்போதுள்ள காலகட்டத்திலே நம் அனைவரையும் தாக்கும் நோய்களான மஞ்சள் காமாலை, டைபாய்டு, அம்மை, பெரியம்மை, டெங்குஜூரம், புதிதாக வந்துள்ள சிக்குன் குனியா போன்ற நோய்களை பெற்றோர்களும், மாணவர்களும் நன்கறிவர்! இந்நோய்களிலிருந்து விடுபட கொசுவின் தொல்லை இல்லாத ஒரு சுகாதாரமான சூழல் உருவாக்கப்பட வேண்டும். சுகாதாரம் இல்லாத உணவகங்களில் இருந்து உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தூய்மையுடன் கூடிய நல்ல குடிநீரையே பருகுதல் அவசியம்.

உணவுப்பொருள்: அரசுப் பொதுத்தேர்வு நாட்களில் சைவ உணவை உட்கொண்டால் மிக மிக நல்லது. ஏனெனில் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. காலை வேளைகளில் உட்கொள்கின்ற உணவுதான் ஒரு மனிதனுக்கு நாள் முழுவதும் தெம்பையும், தைரியத்தையும் கொடுக்கக் கூடியது. ஆகவே, காலை வேளைகளில் நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவைக் குறைவு படாமல் அதிக அளவில் உட்கொண்டால் உடலின் வலிமையும் , மூளையின் சக்தியும் இணைந்து நல்ல திறனோடு செயலாற்ற முடியும்.

உடற்பயிற்சியும் ஓய்வும்: தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தால் உடலும், மனமும் சோர்வின்றி இயங்கும். அரைமணி நேரம் ஓய்வு என்ற அடிப்படையில் நல்ல இசையினைக் கேட்டல், தியானப் பயிற்சி செய்தல், யோகா இவை போன்ற செயல்களைச் செய்தால் மனச்சோர்வு குறையும். அது மட்டுமின்றி மூளைச் செயல்பாடும் அதிகரிக்கும்.

தேர்விற்குத் தயார் செய்யும் கால அட்டவணை

ஒவ்வொரு மாணவரும் தன் திறமையையும், பலவீனத்தையும் மனதில் கொண்டு ஆசிரியர்களின் ஆலோசனையோடு ஒரு நல்ல கால அட்டவணையை உருவாக்க வேண்டும். எளிதில் சதம் கிட்டும் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிப்பொறியியல் இவைகளுக்கு அதிக நேர கால ஒதுக்கீடு அவசியம். எல்லா பாடங்களுக்கும் குறிப்பாக மொழிப்பாடங்களுக்கு உரிய அளவில் நேரத்தை ஒதுக்கிப்படித்தல் அவசியம்.

அரசுப் பொதுத் தேர்விற்குத் தன்னைத் தயார் செய்யும் முறை:
வீட்டிலும், பள்ளியிலும் படிப்பதற்குரிய நல்ல சூழல் உருவாக்கப்பட வேண்டும். பாடத்தில் இதுவரையிலும் எந்த ஒரு பகுதியையும் படிக்காமல் விட்டு வைத்திருந்தால் அப்பகுதியைத் தற்போது புதிதாகப் படித்தல் கூடாது. தேர்வு இயக்குநரகம் தயாரித்து அளித்துள்ள வினா-விடை மதிப்பீடு அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திலும் ஒரு பாடப்பகுதிக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்ற மதிப்பீட்டின் அடிப்படையிலே மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகப் பகுதிகளைத் தெளிவுற ஆழமாகக் கற்றிருத்தல் அவசியம்.

படிக்கும் போது சில நுணுக்கமான குறிப்புகளைப் பாடவாரியாக, பகுதிவாரியாகக் குறிப்பேட்டில் குறிப்பு எடுத்து வைத்துக் கொண்டால் தேர்வு தருணத்தில் இக்குறிப்பேடு மிகமிக உதவியாக இருக்கும். ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் 7 மணி நேரம் தூங்குதல் அவசியம். 4 மணி நேரம் தேர்விற்கான தயாரிப்பு, 3 மணி நேரம் தன் மதிப்பீடு தேர்விற்கும் ஒதுக்கப்பட வேண்டும். எல்லா விதமான பாடங்களுக்கும் வினாத்தாள்களைச் சேகரித்துப் பின் தேர்வுகளை வீட்டில் அமர்ந்து எழுதினால் நல்ல மதிப்பெண் கிட்ட வாய்ப்புண்டு. எழுதிய தேர்வினை தானே சுயமதிப்பீடு செய்யும் போது சரியான விடையை தெரிந்து கொண்டு தெளிவு பெற வாய்ப்பு கிட்டும் என்பது உறுதி.

ஒவ்வொரு பாடத்திலும் உள்ள ஒரு வரி வினாக்களில் சரியான விடையை தெரிவு செய்து கொள்ளுதல் வேண்டும். எக்காலக் கட்டத்திலும் தனிப்பயிற்சிக்கு (Tuition) செல்லுதல் கூடாது. மாணவர்கள் தன்னுடைய ஆசிரியர்களை அணுகி பாடம் சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக் கொண்டால் அதிக மதிப்பெண்களை ஈட்டுவதற்கு ஒரு பாலமாக அமையும்.

மேலும் மாணவர்கள் தொடர்ச்சியாக 1 1/2 மணி நேரத்திற்கு மேல் படித்தல் கூடாது. இடையிடையே குறைந்தது 15 நிமிடமாவது நண்பர்களுடன், உறவினர்களுடன் பேசுவதிலோ, அல்லது இசைக் கேட்பதிலோ, தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், அதன் பிறகு கற்கும் பாடங்களை மிக எளிதில் புரிந்து கொள்ளலாம். மீண்டும் சோர்வில்லாமல் கற்கும் சக்தி பெறலாம்.

தேர்வு நாட்களில் தினமும் காலை ஒன்பதரை மணிக்கு முன்னால் தேர்வு மையத்திற்கு வந்து அரசு வெளியிட்டு இருக்கும் தேர்வு இருக்கை அட்டவணையைக் கண்டறிந்து தன்னுடைய இருக்கை அறையை உறுதி செய்ய வேண்டும். குறைந்தது மூன்று எழுதுகோல்கள் அவசியம். அதில் இரண்டு நீல மை உடைய எழுதுகோலாகவும், ஒன்று கூரிய முனையுடன் கூடிய கறுப்பு மை எழுதுகோலும் வைத்திருத்தல் அவசியம். மேற்கோள், உட்தலைப்புகளை தெளிவுபடுத்தவும், முக்கியமான விடை மிகுத்து காட்டலுக்கும் இக்கறுப்பு மை உதவும்.

இரண்டு பென்சில்கள், அழிப்பான்கள் போன்ற தேவையான உபகரணங்களை எளிதில் உற்று நோக்கக்கூடிய அளவில் உடைய சிறிய உறையில் வைத்திருத்தல் வேண்டும். அரசினால் கொடுக்கப்பட்டுள்ள பொன்னான நேரமான 15 மணித்துளிகளை மிகவும் கவனத்துடன் வினாத்தாளைப் படிக்கப் பயன்படுத்த வேண்டும்.

வினாத்தாள் கையில் கிடைத்தவுடன் மறக்காமல் வினாத்தாளின் வலப்புறத்தின் மேல் பக்கத்தில் தேர்வெண்ணை எழுதுதல் அவசியம் மற்ற எந்த இடத்திலும் வினாத்தாளில் எதுவும் எழுதக்கூடாது. அடுத்ததாக விடைத்தாளில், வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை மிகவும் கவனமாகப் படித்தல் அவசியம்.

365 நாட்களுடைய அந்த உழைப்பை மூன்று மணி நேரத்தில் நாம் வெளிகாட்ட வேண்டும். அதில் ஒவ்வொரு வினாவையும் 10 நிமிடத்தில் மன ஒருமையுடன் தெள்ளத் தெளிவாக நல்ல படைப்பாற்றலுடன் விடைகளை எழுதவேண்டும். சரியான, நன்கு தெரிந்த  வினாக்களைத் தெரிவு செய்து எழுதுதல் மிகமிக அவசியம் நூறு சதவீதம் நாம் நன்கு அறிந்திருக்கின்ற வினாக்களைத் தெரிவு செய்து கவனமாக எழுதுதல் அவசியம்.

ஒரு வினாவினைத் தெரிவு செய்யும் போது அவ்வினா எழுத எடுத்துக் கொள்ளும் நேர அளவு, அவ்வினாவின் உபயோகம், நன்மை தீமைகள் அறிந்து வினாக்களை ஒன்றன்பின் ஒன்றாக வரிநடை அடிப்படையில் எழுதினால் நல்ல மதிப்பெண் பெற ஏதுவாக இருக்கும். நன்கு தெரிந்த விடைகளை எழுதுதல் வேண்டும். வினா எண்ணைச் சரியாகக் குறிப்பிடுதல் மிகமிக அவசியம். தெள்ளத்தெளிவான வரைபடங்களோடு வார்த்தைக்கு வார்த்தை இடைவெளிவிட்டு, வரிக்கு வரி தகுந்த இடைவெளி விட்டு எழுதினால் அதிக மதிப்பெண் ஈட்ட வாய்ப்புகள் அமையும். விரைவு, அழகு தெளிவுடன் கூடிய நல்ல கையெழுத்துடன் எழுதுதல் வேண்டும்.

தேர்வறையில் வினாவிற்கு வினா கால ஒதுக்கீடு செய்து தேர்வு எழுதுதல் அவசியம். 10 மதிப்பெண் உடைய வினாக்கள் முதலிலும், ஆறு வரிவினாக்கள் அடுத்தும், பின் ஒரு மதிப்பெண் வினாக்கள் என்ற அடிப்படையில் எழுதினால் சாலச்சிறந்தது. இம்முறை மாணவர்கள் புத்திக்கூர்மையோடு அந்தந்த பாடத்திற்கேற்ப மாறுபடும்.

இறுதியில் 15 நிமிடத்தில் அனைத்து விடைகளைத் திருப்புதல் செய்ய செலவு செய்தல் வேண்டும். விடைத்தாளில் பயன்படுத்தபடாத, எழுதப்படாத பகுதிகளை அடித்தல் அவசியம். எழுதியிருக்கும் விடைகளை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அடித்திருந்தால், தேர்வறை கண்காணிப்பாளரிடம் எழுத்து மூலமாக சான்று கொடுக்கப்பட வேண்டும். கூடுதல் விடைத்தாள்களை வரிசையாக அடுக்கி, திருத்துவதற்கு ஏதுவாக அதனைக் கட்டி, அதன் பின் கூடுதல் விடைத்தாள்களை எண்ணி முதன்மை விடைத்தாளில் முதல் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் பகுதியில் எழுதுதல் அவசியம்.

தேவைக்கு அதிகமான வினா விடைகளை ஒரு போதும் மிகையாக எழுதுதல் கூடாது. தேர்வு முடிந்தவுடன் தேர்வு பற்றிய வினா விடைகளை நண்பர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் பாதுகாப்போடு வீட்டிற்கு செல்லுதல் அவசியம். குறைந்தது ஒரு மணி நேரம் உறங்கிய பின் அடுத்த நாள் தேர்விற்குரிய பாடங்களைப் படிக்க வேண்டும். பாடங்களைப் படிப்பதற்கு ஏற்ற ஏதுவான மனநிலை அப்போது தான் தோன்றும்.

அடுத்தநாள் தேர்வாக இருப்பின் இரவு 9.30 மணிக்கு மேல் படிக்கக்கூடாது. படிப்பதற்கு ஏதுவான நேரம் காலை நேரமே! ஆதலின் காலை 4 மணிக்கு பாடத்திருப்புதலைத் தொடங்குதல் வேண்டும்.  மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்! முயற்சி செய்வோம்! வெற்றி பெறுவோம்!

டாக்டர்.என்.விஜயன்
பொதுச்செயலாளர், தமிழக மெட்ரிக் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us