அறிவியல் பட்டதாரிகளை மட்டுமே உருவாக்குகிறோம்; விஞ்ஞானிகளை அல்ல | Kalvimalar - News

அறிவியல் பட்டதாரிகளை மட்டுமே உருவாக்குகிறோம்; விஞ்ஞானிகளை அல்ல

எழுத்தின் அளவு :

"இந்தியாவில் தற்போதுள்ள கல்வி முறையால், அறிவியல் பட்டதாரிகளை மட்டுமே உருவாக்க முடிகிறது. விஞ்ஞானிகளை அல்ல என்று இந்தியாவின் முதுபெரும் கல்வியாளர் பி.எஸ். மணிசுந்தரம் (83) தினமலர் கல்விமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

காரைக்குடி ஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி மண்டல பொறியியல் கல்லூரி (தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்) ஆகிய நிறுவனங்களின் முதல் முதல்வர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் என்ற பெருமைகளைப் பெற்றவர் மணிசுந்தரம்.

பர்மாவில் உள்ள மாண்டலேயில் பிறந்த இவரது முழுப்பெயர் பின்னப்பாக்கம் சுப்பிரமணி சுந்தரம். சென்னை லயோலாக் கல்லூரி, கிண்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் நிறுவனங்கள் மற்றும் கனடாவில் உயர்கல்வியை முடித்தார். துவக்கத்தில் தமிழக பொதுப்பணித் துறையில் பொறியாளராகச் சேர்ந்த அவர், பின்னாளில் கல்வித் துறையில் சாதனைகளைத் தொடர்ந்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பொறுப்பில் இருந்த போதுதான், பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தை மணிசுந்தரம் நிறுவினார். பெல் நிறுவனத்தின் ஒத்துழைப்பைப் பெற்று வெற்றிகரமாக இந்நிறுவனத்தை நிறுவியவர் என்ற
பெருமையையும் அவரை சேரும். துவக்கத்தில் பிம் கல்வி நிறுவனத்துக்குத் தேவையான அடிப்படை இட வசதிகளை பெல் நிறுவனம் வழங்கியது. கல்வி நிறுவனத்தை நடத்துவதற்கான ஆசிரியர் மற்றும் அலுவலர்களை பல்கலைக்கழகம் வழங்கியது.

இந்திய உயர்கல்வி தொடர்பாக அவர் அளித்த பேட்டி: தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா வளர்ந்து வந்த போதிலும் கூட, தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தேவையான உற்பத்தி தொழில்நுட்பத்தில் இந்தியா பின் தங்கியிருக்கிறது. இந்நிலை நீடித்தால் அது இந்தியப் பொருளாதாரத்துக்கு பின்னடைவாக இருக்கும். ஆகவே பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அடிப்படை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் நாட்டம் காட்ட வேண்டும்.

இன்ஜினியரிங் கல்லூரிகள் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் கெமிக்கல் துறைகளையே இளங்கலை பொறியியல் படிப்பில் வழங்க வேண்டும். பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங் போன்ற துறைகள் முதுகலைப் படிப்பிலேயே இடம்பெறச் செய்ய வேண்டும். அல்லது முதுகலை டிப்ளமோ அளவிலேயே இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்குப் பள்ளிப் படிப்பை தரமானதாக வழங்கினால் மட்டுமே, அவர்கள் கல்லூரியில் உள்ள பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மனப்பக்குவமும் அறிவுத் திறனும் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி கல்விக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். பள்ளி முடித்துச் செல்லும் குழந்தைகள் கல்லூரிக்குச் செல்வது இயல்பான மாற்றத்தில் இருக்க வேண்டும். கிராமப்பகுதியில் நல்ல தரமான பள்ளிக் கூடங்கள் இருந்தால்தான், நாம் தரமான உயர்கல்வியை எதிர்பார்க்க முடியும். கிராமப்புறங்களில்
பள்ளி மாணவர்கள் பல கி.மீ., தூரம் சென்று படித்து வருகிறார்கள். பொருளாதார நெருக்கடி இருக்கிறது. நல்ல தண்ணீர் கூட அவர்களுக்கு இல்லை.

கல்விக் கட்டணம் உயர்ந்து வருவது பற்றி மாநில அரசுகள் அல்லது மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. பொருளாதாரத்தில் பிற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் இதனால் பிரச்னை உள்ளது. பொருளாதார சிக்கனமான, அதே நேரத்தில் உயர்தர கல்வி வழங்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி வழங்க வருகின்றன. ஆனால் அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்., சார்பில் ஏறத்தாழ 30 ஆய்வுக்கூடங்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால், அவற்றின் வசதியை நாம் முறையாக பயன்படுத்தவில்லை. இந்த ஆய்வுக்கூடங்களை ஏராளமான பொருட்செலவில் உருவாக்கியிருக்கிறோம். பராமரித்து வருகிறோம். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்த ஆய்வுக்கூடங்கள் அருகில் அமைந்து கூட்டாக கல்வியை வழங்கலாம்.

எல்லா வகையான இளநிலைப் படிப்புகளின் உள்ளடக்கத்தையும் நாம் மாற்ற வேண்டியிருக்கிறது. மாணவர்களின் தகவல்
தொடர்புத் திறனை வளர்க்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். செமஸ்டர் முறையிலான படிப்புகளையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளை இணைத்துக் கொண்டு செயல்படுவது லைசென்ஸ் முறை போன்றதே. அறிவுசார்ந்த துறைசார்ந்த விஷயங்களில் கல்லூரிகளின் வளர்ச்சிக்கு பல்கலைக்கழகங்கள் என்ன செய்கின்றன. கல்லூரிகளை தேர்வு மையங்களாகவே பல்கலைக்கழகங்கள் நடத்துகின்றன. கல்லூரிகளே தங்கள் பட்டங்களை வழங்கிக் கொள்வதற்கு நாம் வகைசெய்ய வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் மணிசுந்தரம் தெரிவித்தார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us