நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடமியாலஜி | Kalvimalar - News

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடமியாலஜிநவம்பர் 24,2018,13:20 IST

எழுத்தின் அளவு :

கல்வி, ஆராய்ச்சி மற்றும் சோதனைகளின் மூலம் சுகாதார மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு வழிகளைக் கண்டறிய இந்திய மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐ.சி.எம்.ஆர்.,) நடத்தப்பட்டு வரும் அமைப்பே ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடமியாலஜி’ எனப்படும் தேசிய பரவு நோயியல் நிறுவனம்!  

அறிமுகம்
‘சென்ட்ரல் ஜால்மா இன்ஸ்டிடியூட் ஆப் லெப்ரசி’ மற்றும் ‘இன்ஸ்டிடியூட் பார் ரிசர்ச் இன் மெடிக்கல் ஸ்டேடிஸ்டிக்ஸ்’ ஆகிய இரு மத்திய நிறுவனங்களையும் இணைத்து 1999ம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை அம்பத்தூர் அருகே நிறுவப்பட்டதே ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடமியாலஜி’. நோய் தொற்று தடுப்பு மற்றும் உயிரி புள்ளி விவரங்களைக் கணக்கிடுவது ஆகிய நோக்கங்களை முக்கியமாகக் கொண்டே இந்த அமைப்பு முதலில் உருவாக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.எச்.ஓ.,) தொழுநோய் ஆராய்ச்சிக்கான இணை மையமாகச் செயல்பட்டு வருவதோடு, இந்தியாவில் எச்.ஐ.வி., நோய் தாக்கத்திற்கான தொழில்நுட்ப வள குழுவாகவும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சர்வதேச நோய் தொற்று ஆய்வுகள், நோய் மாதிரி ஆக்கல் எனப்படும் ‘டிசிஸ் மாடலிங்’, நோய் கட்டுப்பாட்டு திட்டங்களை மதிப்பிடுவது, புள்ளிவிவரங்களைக் கணக்கிடுவது, தொற்று நோயியல் ஆய்வு மற்றும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகளைச் சோதனை செய்வது ஆகிய ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.

குறிக்கோள்
இத்துறையில், அறிவியல் மாநாட்டுக் கூட்டங்களை நடத்தி மாணவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வைக் கொண்டுவருதல் மற்றும் எபிடமியாலஜி துறைக்கான நிறுவன வசதிகளை மேம்படுத்தி இந்த துறையில் பல ஆராய்ச்சியாளர்களையும், பேராசிரியர்களையும் உருவாக்குதல் ஆகியவை இந்நிறுவனத்தின் முக்கிய குறிக்கொள்கள்.

மேலும், இத்துறை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, பொது மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களை போக்குவது மற்றும் ஆயுஷ் கூட்டுத் திட்டங்களை உருவாக்குவது போன்ற முக்கிய செயல்பாடுகளை குறிக்கோளாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

படிப்புகள்
இந்த நிறுவனம் திருவனந்தபுரத்தில் உள்ள ‘ஸ்ரீ சித்ர திருநாள் இன்ஸ்டிடியூட் பார் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி’கல்வி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, களப்பயிற்சி அடங்கிய, ‘மாஸ்டர் ஆப் அப்லைட் எபிடமியாலஜி’ (எம்.ஏ.இ.,) படிப்பினை வழங்குகிறது.

என்.ஐ.இ., நிறுவனம், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு, ‘பயோ-ஸ்டேடிஸ்டிக்ஸ்’ பயிற்சியையும் வழங்குகிறது. மேலும், இக்கல்வி நிறுவனம், சென்னை பல்கலைக்கழக அங்கீகாரத்துடன், எபிடமியாலஜி மற்றும் பயோ-ஸ்டேடிஸ்டிக்ஸ் துறையில் பிஎச்.டி., படிப்பையும் வழங்குவகிறது.

விபரங்களுக்கு: http://nie.gov.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us