வேலைக்கான காரணி மட்டுமல்ல கல்வி | Kalvimalar - News

வேலைக்கான காரணி மட்டுமல்ல கல்விமே 30,2019,09:44 IST

எழுத்தின் அளவு :

கல்வி என்பது, ஒட்டுமொத்த வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள உதவும் வாய்ப்பாக பார்க்கவேண்டுமே தவிர, வேலை பெறுவதற்கான காரணியாக மட்டும் பார்க்கக்கூடாது. சிந்தனைத்திறனை துாண்டி, வாழ்வின் சாராம்சத்தை உணரச்செய்து, சுயமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவ வேண்டும்.



இந்த உண்மையை மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டியதும் கல்வி நிறுவனங்கள் தான். இதை, கடந்த, 11 ஆண்டுகளாக எங்கள் பள்ளி சிறப்பாகவே செய்து வருகிறது. இங்கிருந்து வெளியே செல்லும் மாணவர்கள் எப்படியான சூழ்நிலையையும் சமாளிக்கும் பக்குவம், ஒழுக்கம், மன உறுதி, நம்பிக்கையுடனே செல்கின்றனர். அவிநாசி பகுதியை சுற்றியுள்ள பெரும்பலானோர் நெசவு தொழிலாளர்களே. 


’தங்கள் பிள்ளைகளை எப்படியும் நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும்’ என்ற எண்ணத்தோடே எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளனர். அவர்களை திருப்திபடுத்துவது எங்கள் கடமை. பாடம் கற்பித்தல் மற்றும் இதர திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதோடு, மனித நேயத்தையும் ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. இதைப் போதிப்பதன்மூலம், சமுதாயத்திற்கு தேவையான நற்பண்புகள் கொண்ட மனிதர்களாக மாற்ற முடியும். எனவேதான் மதிப்பெண் சார்ந்து மட்டுமே இல்லாமல், ஒழுக்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் தருகிறோம். இவையே பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற உதவியாகவும் அமைகிறது.



இம்முறை ’புளூ பிரிண்ட்’ இல்லாததால், மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வது சிரமமாகத்தான் இருந்தது. தொடர்ந்து திருப்புதல், காலை, மாலை, சிறப்பு வகுப்புகள் நடத்தினோம். பள்ளிக்கு தொடர் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று, அவர்களது பிரச்சனைகளை களைந்து மீண்டும் பள்ளிக்கு வர ஊக்குவித்தோம். 'பொருளாதாரம் ஓர் தடைக்கல்லாக இருக்கக்கூடாது’ என்பதற்காக, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இலவசக் கல்வியும் வழங்கப்படுகிறது. அறிவு சார்ந்து மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் சார்ந்த விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. செயல்முறை அறிவுடன் மாணவர் வெளியேற வேண்டும் என்பதே எங்கள் பள்ளியின் நோக்கம்.



இன்று மொபைல்போன் மூலம் கற்பதற்கு ஏராளமான வாய்ப்புகள், மாணவர்களுக்கு உள்ளன. அதேநேரம், அவற்றை எதிர்மறையாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றை முறையாக பயன்படுத்தி, வாய்ப்புகளை வசமாக்கினால் மாணவர்களால், வாழ்க்கையில் சிறகடித்து பறக்க முடியும் என்ற விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம்! 



-ஜெயந்தி, தாளாளார், வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, அவிநாசி.


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us