முக்கியத்துவம் பெறும் ஆங்கிலத் தேர்வு | Kalvimalar - News

முக்கியத்துவம் பெறும் ஆங்கிலத் தேர்வுமார்ச் 16,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்டர்நேஷனல் இங்கிலீஷ் லேங்குவேஜ் டெஸ்டிங் சிஸ்டம் எனப்படும் ஆங்கில அறிவை சோதிக்கும் தேர்வைப் பற்றி வெளிநாட்டிற்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பணியாற்ற விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

2 மணி நேரம் 44 நிமிடங்கள் கொண்ட  ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வு, யு.கே., ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர் கல்வி பெறுவதற்கு செல்லும் மாணவர்கள் எழுத வேண்டிய முக்கியமானத் தேர்வாகும்.

இந்த தேர்வின் மூலம் ஒரு மாணவரால் ஆங்கிலத்தில் பேச, எழுத, கேட்க, படிக்க இயலும் என்பது உறுதி செய்யப்படுகிறது. 

பிரிட்டிஷ் கவுன்சில், ஆஸ்ட்ரேலியாவின் ஐ.இ.எல்.டி.எஸ்., கேம்பிரிட்ஜ் இ.எஸ்.ஓ.எல் ஆகியவை இணைந்து இந்த தேர்வினை நடத்துகின்றன.

அமெரிக்காவில் உள்ள 6,000 கல்வி நிலையங்களும், 2,000 பல்கலைக்கழகங்களும் இந்த தேர்வினை அங்கீகரிக்கின்றன. இது மட்டுமல்லாமல், கனடா, ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து என வெளிநாட்டில் உள்ள பல நிறுவனங்கள், இந்த தேர்வின் முடிவை அடிப்படையாகக் கொண்டே தங்களது விசாவை வழங்குகின்றன.

விசா நடைமுறைகளின் போது இந்த தேர்வு முக்கியமானதாகக் கருதப்படும்.

ஆங்கிலத்தைக் கேட்பது (30 நிமிடம்), பாடத்தை படித்தல் (60 நிமிடம்), பொதுவாக படித்தல் (60 நிமிடம்), பாடங்களை எழுதுதல் (60 நிமிடம்) பொது எழுத்து  தேர்வு (60 நிமிடங்கள்) பேசுதல் (10-15 நிமிடம்) என 6 பிரிவுகளைக் கொண்டுள்ள இந்த தேர்வு இரண்டு வகைப்படும்.

1. கல்வி - வெளிநாட்டில் இளநிலை மற்றும் முதுநிலைக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கானது. 2. பொதுப் பயிற்சி - பள்ளியில் சேரும் மாணவர்கள் அல்லது விசா பெறுவதற்காக எழுதும் தேர்வு.

கேட்கும் தேர்வு - டேப்பில் பதிவு செய்யப்பட்ட கலந்துரையாடல் அல்லது விவாதம் மாணவருக்கு போடப்படும். அதன் முடிவில், டேப்பில் வெளியான விவாதத்தை அடிப்படையாகக் கொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். பதிலும் பதிவு செய்து கொள்ளப்படும்.

படித்தல் - மாணவர் மூன்று விதமான கட்டுரைகளைப் படிக்க வேண்டும். மூன்றும், நாட்டு நடப்பாகவோ, செய்தி தொடர்பானதாகவோ இருக்கலாம். முடிவில் அது சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படும்.

எழுதுதல் - கொடுக்கப்படும் வரைபடம், சார்ட், கிராப் போன்றவற்றில் தொடர்புடைய 150 முதல் 170 வார்த்தைகளை எழுத வேண்டும். பிறகு கொடுக்கப்படும் தலைப்பு அல்லது சம்பவம் குறித்து கட்டுரை எழுத வேண்டும்.

பொது எழுத்துத் தேர்வு - இது சற்று மாறுபடுகிறது. அதாவது ஒரு சூழ்நிலையையோ அல்லது பார்த்த விஷயத்தை தகவலாக அளிப்பதாகவோ கடிதம் எழுதுதல் மற்றும் ஒரு சம்பவம் குறித்து சிறிய கட்டுரை எழுத வேண்டும்.

பேசுதல் - இதில் தேர்வு எழுதுபவரும், தேர்வாளரும் இருப்பார்கள். நேருக்கு நேராக நடக்கும் இந்த தேர்வில் முதலில் அறிமுகம், ஒரு தலைப்பைப் பற்றி விவரித்துப் பேசுதல், அதே தலைப்பில் விவாதித்தல் என 3 பிரிவுகள் வரும்.

தேர்வுக்கான குறிப்புகள்
பதிலை உச்சரிக்கும் முறையும், பதிலை எழுதும் போது எழுத்துப் பிழை இன்றி எழுதுவதும் மிகவும் முக்கியமாகும். கேள்வித்தாளில் கொடுக்கப்படும் குறிப்புகளை கவனமாக படிக்கவும். இத்தனை வார்த்தைகளுக்குள் கட்டுரை எழுத வேண்டும் என்று சொன்னால், அதற்கு மேல் இருக்கக் கூடாது.

தேர்வு தேதி மாற்றம்
தேர்வினை எழுதுவதற்கான நாள் குறிக்கப்பட்ட பிறகு, அதில் மாற்றம் செய்ய வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்றால் 5 வாரங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டால்தான் தேர்வு வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படும் அல்லது தேர்வுக் கட்டணம் திருப்பி வழங்கப்படும்.

தேர்வுக்கு எவ்வாறு தயாராவது
ஐ.இ.எல்.டி.எஸ். தேர்விற்கு பயிற்சி அளிக்கும் பல புத்தகங்களும், சிடிக்களும் விற்பனையில் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வு மையங்களிலும் கிடைக்கும். அவற்றை வாங்கி படிப்பது நல்லது.

தேர்வு மையங்கள்
சுமார் 100 நாடுகளில் 300 மையங்கள் உள்ளன. www.ielts.org என்ற இணைய முகவரியில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து தேர்வு மையங்களின் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது
உங்கள் இடத்திற்கு அருகில் உள்ள தேர்வு மையத்தைக் கண்டறிந்து அங்கு விண்ணப்பப்படிவத்தை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தையும், தேர்வுக் கட்டணத்தையும் தேர்வு மையத்தில் செலுத்தவும். தேர்வன்று உங்கள் பாஸ்போர்ட் அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

தேர்வு எப்பொழுது நடைபெறும் 
தேர்வு நடைபெறுவதற்கு என்று அட்டவணை ஏதும் இல்லை. ஒரு மாதத்தில் 4 முறை தேர்வு நடத்தப்படுகிறது. உங்கள் உள்ளூர் தேர்வு மையத்தை தொடர்பு கொண்டு தேர்வு தேதியை அறிந்து கொள்ளுங்கள்.

தேர்வு முடிவு
தேர்வு எழுதிய இரண்டு வாரத்தில் தேர்வு முடிவுகள் நீங்கள் விண்ணப்பித்த கல்வி மையத்தின் மூலம் உங்களுக்கு வந்து சேரும்.

எத்தனை முறை எழுதலாம்
ஒரு மாணவர் தேர்வு எழுதி தோல்வி அடைந்திருந்தால், அதன்பிறகு 3 மாதங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படாது. அதன் பிறகு எழுதலாம்.

பயிற்சி வகுப்புகள்
பிரிட்டிஷ் கவுன்சில் குறுகிய கால பயிற்சி வகுப்பினை நடத்துகிறது. ஒரு நாளைக்கு 7 மணி நேரம் என 3 நாட்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு
www.britishcouncil.org/india என்ற பிரிட்டிஷ் கவுன்சிலின் இணையதளத்தை பார்க்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us