மத்திய எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம் | Kalvimalar - News

மத்திய எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம்ஜூலை 21,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

வரலாறு:

தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனமான 'சிக்ரி' என சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம், புகழ்பெற்ற நகரமான காரைக்குடியில் எழில் கொஞ்சும் ஒரு சூழலில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தை காரைக்குடியில் அமைப்பதற்காக 1948 -இல் தனது 300 ஏக்கர் நிலத்தை வழங்கியதோடு, அந்த காலகட்டத்திலேயே ரூ.15 லட்சத்தை பணமாக வழங்கி முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் மண்ணின் மைந்தர் திரு. அழகப்பா செட்டியார். இவரை தவிர்த்து இந்த பெருமையில் பங்கு கொள்பவர்கள், அன்றைய பிரதமர் நேருவும், டாக்டர். சாந்தி ஸ்வரூப் பட்நாகரும். 1953 -ஆம் ஆண்டு ஜனவரி 14 -ஆம் நாள் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை அப்போதைய துணை குடியரசு தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிறுவனத்தின் கிளை மையங்கள் சென்னை, தூத்துக்குடி மற்றும் மண்டபம்(ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய தமிழ்நாட்டின் பிற 3 இடங்களில் உள்ளன. இந்த நிறுவனம் துவக்கப்பட்ட காலகட்டமானது, எலெக்ட்ரோ-கெமிக்கல் துறை இந்தியாவில் சொல்லத்தக்க அளவில் கவனத்தை கவராத, பல்கலைக்கழகங்களில் முக்கியத்துவம் பெறாத ஒரு துறையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம், முழுமையான ஆராய்ச்சிப் பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகும்.

இதன் பணிகள்:

எலெக்ட்ரோ-கெமிக்கல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளை இந்த நிறுவனம் மேற்கொள்கிறது. கொரோஷன் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங், எலெக்ட்ரோ-கெமிக்கல் மெடீரியல் சயின்ஸ், பங்க்ஷனல் மெடீரியல்ஸ் மற்றும் நேனோஸ்கேல் எலெக்ட்ரோகெமிஸ்ட்ரி, எலெக்ட்ரோகெமிக்கல் பவர் சோர்செஸ், எலெக்ட்ரோகெமிக்கல் பொல்யூஷன் கண்ட்ரோல், எலெக்ட்ரோகெமிக்கல்ஸ், எலெக்ட்ரோடிக்ஸ் மற்றும் எலெக்ட்ரோகேடலிசிஸ், எலெக்ட்ரோமெடலர்ஜி, இண்டஸ்ட்ரியல் மெடல் பினிஷிங் மற்றும் கம்ப்யூட்டர் நெட்வொர்கிங் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற பரவலான துறைகளில் இந்நிறுவனம் ஆராய்ச்சி செய்கிறது. மேலும் பல ஆராய்ச்சி திட்டங்களை இந்தியாவிலுள்ள ஆய்வகங்களோடும்,   வெளிநாட்டு ஆய்வகங்களோடும் இணைந்து செயல்படுத்துகிறது.

கடந்த 2004ம் ஆண்டு, ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் சம்பந்தமாக ஒருங்கிணைந்த ஆய்வை மேற்கொள்ளும்   இந்தியாவிலுள்ள ஆய்வகங்களுள் ஒன்றாக 'சிக்ரி' தேர்ந்தெடுக்கப்பட்டது. ஹைட்ரஜன்தான் எதிர்கால எரிபொருள் என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகான காலகட்டத்தில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. சர்வேக்களை நடத்துதல் மற்றும் ஆலோசனை திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் இந்திய தொழில்துறைக்கு 'சிக்ரி' பேருதவி புரிகிறது. இந்த கல்வி நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறையின் நன்மைக்காக குறுகியகால ரெப்ரஷர் பாடத்திட்டங்களை நடத்துகிறது.

சிக்ரி -இல் பி.டெக் படிப்பு:

சிக்ரி நடத்தும் இந்த படிப்பானது, உலகிலேயே கெமிக்கல் மற்றும் எலெக்ட்ரோகெமிக்கல் இன்ஜினீயரிங் துறையில் தொடங்கப்பட்ட முழு தொழில்நுட்ப படிப்பு என்பதோடு, ஆசியாவின் சிறந்த பொறியியல் படிப்புகளில் ஒன்று என்ற பெருமையையும் பெறுகிறது. இந்த படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் முழு ஆராய்ச்சி சூழலில், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலான ஒரு சூழ்நிலையில் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைக்கிறது. இதுதவிர உலகளவில் சிறப்பான ஆய்வக வசதியும் இருக்கிறது. 

வருட பி.டெக் படிப்பில் (8  செமஸ்டர்கள்) உள்ள கூறுகள்:

முதல் வருடம் - கெமிக்கல் மற்றும் எலெக்ட்ரோகெமிக்கல் இன்ஜினீயரிங் சம்பந்தப்பட்ட பாடங்களின் அறிமுகம் (கணிதம், அடிப்படை அறிவியல்கள், இன்ஜினீயரிங் சம்பந்தமான அறிவியல்கள், மானுடவியல் மற்றும் இன்ஜினீயரிங் கலைகள்). 

இரண்டாம் வருடம் மற்றும் மூன்றாம்  வருடம் - கெமிக்கல் இன்ஜினீயரிங் துறையின் அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. மூன்றாம் வருட முடிவில், படிப்போடு சேர்ந்த பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்  

நான்காம் இறுதி வருடம் - எலெக்ட்ரோகெமிக்கல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் ஆராய்ச்சி மற்றும் டிசைன் ப்ராஜெக்டுகளிலும் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். 

இப்படிப்பில் வருடாந்திர தொழில்முறை சுற்றுலாவும் உண்டு (ஆய்வக பயிற்சி, கணினி பயிற்சி, இன்ஜினீயரிங் வரைபடங்கள், ஆய்வகப் பணி, தொழிற்சாலை பயிற்சி, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், முகாம்கள்)  

இவைதவிர NSS, NCC, YRC  மட்டும் NSO போன்ற மாணவர் திறன் வளர்ப்பு திட்டங்களும் உண்டு.

மாணவர் சேர்க்கை:

மாநில அளவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகத்தால் பின்பற்றப்படும் ஒற்றை சாளர முறைதான் 'சிக்ரி' நிறுவனத்திற்கும் பொருந்தும். AICTE  அனுமதி பெற்ற மொத்த இடங்கள் 40. அதில் வெளிமாநில மாணவர்களுக்கு 5  இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டிற்கு முன்புவரை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் மற்றும் எம்.டெக் சேர்பவர்களுக்கான பயிற்சி மற்றும் படிப்பு மையமாகத்தான் இருந்தது. ஆனால் 2008 -09  ஆண்டு முதல் திருச்சி அண்ணா பல்கலைக்கழக கிளையுடன் இணைக்கப்பட்ட ஒரு தனித்த கல்லூரியாக, 012  என்ற பதிவு எண் வழங்கப்பட்டு, மத்திய எலெக்ட்ரோகெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம் - காரைக்குடி  என்ற தனி அந்தஸ்தில் இயங்குகிறது.        

அண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல், எலெக்ட்ரோ கெமிக்கல் படிப்புகளில் சேர்பவர்களும் சிக்ரி -இல் பயிற்சியளிக்கப்படுகிறார்கள்.

சிறப்பு வசதிகள்:

இந்த நிறுவனத்தில் இத்தகைய துறைகள் சம்பந்தமான ஏராளமான புத்தகங்களைக் கொண்ட அற்புதமான நூலகம் மற்றும் மிக விரிவான ஆய்வு வசதிகளும் இருக்கின்றன. இதனால் இந்த வசதிகளை இந்த துறைகளில் பணியாற்றும் நாடு முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உபயோகப்படுத்தி பயன்பெற முடிகிறது. மேலும் அறிவியல் அறிவை வளர்த்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின்பொருட்டு, தேசியளவிலான மற்றும் சர்வதேசியளவிலான அறிவியல் மாநாடுகளையும் நடத்துகிறது.

கல்வி உதவித்தொகை:

குடும்ப பொருளாதார நிலை மற்றும் சமூகப் பின்னணி போன்ற அம்சங்களின் அடிப்படையில் தமிழக அரசிடமிருந்து கிடைக்கும் கல்வி உதவித் தொகையை மாணவர்கள் பெறலாம்.

ஆராய்ச்சி வாய்ப்புகள்:

முழுமையான ஆராய்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இத்தகைய ஒரு கல்வி நிறுவனத்தில் பயிலும் ஒரு மாணவர் மிக இளம் வயதிலேயே விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி, ஆய்வு முயற்சிகளை கண்டுணர்ந்து, ஆராய்ச்சி சூழலை அனுபவிக்கும் வாய்ப்புகளை பெறுகிறார். ஆராய்ச்சியாளர்களின் பயன்மிகுந்த ஆலோசனைகளை பெற முடிகிறது. இதன்மூலம் பல ஆய்வுக்கட்டுரைகளை அவர்கள் சமர்ப்பிப்பதோடு, தங்களின் ஆய்வுகள் புகழ்பெற்ற ஜர்னல்களிலும் வெளியாகும் வாய்ப்பினையும் பெற முடிகிறது. ஒரு மாணவரின் ஆய்வு விவரங்கள் ஜர்னல்களில் வெளியானால், அதன்மூலம் அவர் வெளிநாடுகளின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பை எளிதாக பெறுவதுடன், நல்ல வேலை வாய்ப்பையும் சுலபமாக பெறுகிறார். 

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு வாய்ப்புகள்:

குறைந்தது 2  ஆய்வு வெளியீடுகள் மற்றும் தேர்ந்தெடுத்த துறையில் கொண்ட ஆழ்ந்த அறிவு மற்றும் சமீபத்திய மாற்றங்களை பற்றிய புதுப்பிக்கப்பட்ட அறிவு போன்ற தகுதிகளைக் கொண்ட 'சிக்ரி' மாணவர்கள், வெளிநாடுகளின் சிறந்த பல்கலைக்கழகங்களில் மிக எளிதாக மேற்படிப்பு வாய்ப்புகளை பெறுகிறார்கள். பொதுவாக 'சிக்ரி' மாணவர்கள் வெளிநாடுகளில் எம்.எஸ்./பி.எச்டி. படிப்புகளையே படிக்க விரும்புகின்றனர். மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சவுத்கரோலினா பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம், கார்னகி மெலன் பல்கலைக்கழகம், கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம், டொராண்டோ பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் தவிர வேறு பல வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் 'சிக்ரி' மாணவர்கள் மேற்படிப்பு படிக்கிறார்கள். பழைய மாணவர்களின் மூலமும் இதற்கான ஆலோசனைகளை பெறலாம்.

மாணவர் மண்டலம்:

இந்த அமைப்பின் மூலமாக அனைத்து பேட்ச்கள், சாதனைகள், அவசியமான மின்னணு பாட உபகரணங்கள், தொழில் ஆலோசனை மற்றும் பல விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us