வளர்ச்சிக்கு உரமாகும் அரை மணி நேரம் | Kalvimalar - News

வளர்ச்சிக்கு உரமாகும் அரை மணி நேரம்

எழுத்தின் அளவு :

பொருளாதாரத் தேவைகள் அதிகமாகிவிட்ட நிலையில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்றாகிவிட்டது. பொருளாதாரப் போட்டிகளோடு பயணிக்கும் வாழ்க்கையில், நகரப் பயணம் அதிகமான நேரத்தை விழுங்கிவிடுகிறது. வேலைச் சோர்வும், பயணக் களைப்பும் ஒன்று சேர்ந்துவிடுவதால், வீட்டிற்கு வந்தவுடன் உணவருந்தி தூங்குவதையே உடல் விரும்புகிறது. உணவிற்கும், தூக்கத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் மட்டுமே குழந்தைகளை கவனிக்க முடிகிற்து.

காலை நேர பரபரப்பு அலுவலகத்திற்கும், பள்ளிக்கூடத்திற்கு கிளம்புவதற்கும் மட்டுமே பயன்படுகிறது. இரவு நேரம் ஒரு சில வார்த்தைகளோடு முடிந்துவிடுகிறது. பல பெற்றோர்  தங்கள் குழந்தைகள் தாமாகவே படிக்கும் அறிவு பெற்றவர் என்று எண்ணிவிடுகிறார்கள். ஒரு சிலர் தங்கள் பிள்ளைகள் பயிற்சி வகுப்புகளில் சிறப்பாக  பாடம் படித்துவிடுவார்கள் என்று நிம்மதி அடைந்துவிடுகின்றனர். பெற்றோர்கள் பலரது நிலையும் என்னவென்றால் பிள்ளைகளுக்கு படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே பிரச்சனைகள் இருக்கும், அந்த பிரச்சனைகளை பள்ளிக்கூடங்களும், பயிற்சி நிலையங்களும் தீர்த்து விடும் என்று நினைப்பதுதான்.

தொலைக்காட்சி பார்ப்பதன் மூலமும், தவறான நண்பர்கள் நட்பின் மூலமும் வீணாக பொழுதை கழிக்கும் மாணவர்களுடைய எண்ணங்கள் எப்படி இருக்கிறது என்றால், பெற்றோர் தங்கள் செலவுக்கு பணம் கொடுத்தால் மட்டும் போதும் வேறு எதை பற்றியும் கேள்வி கேட்கக்கூடாது என்றே நினைக்கின்றனர். தொழில்நுட்ப அறிவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தாக்கமும், பிள்ளைகளின் மனதில் தங்கள் பெற்றோருக்கு தற்போதைய சூழ்நிலைகள் பற்றிய புரிந்துணர்வு இருப்பதில்லை, அவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை, அந்த காலத்திலேயே இருக்கிறார்கள் என்ற  மனநிலையை ஏற்படுத்தி கோபத்தை உருவாக்கி விடுகிறது.
 
இதற்கான தீர்வு என்ன? நேரமில்லை என்பதைவிட அரை மணிநேரம் கிடைத்தால் கூட குழந்தைகளோடு அவர்கள் படிப்பினை கடந்து, அவர்கள் நட்பு வட்டம், விருப்பம், இலட்சியம், திட்டம், பள்ளிக்கூடத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகள், பயிற்சி நிலையங்கள் குறித்த குறைகள், பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிள்ளைகளின் வளர்ச்சிகள் குறித்த தங்களின் பெருமை, சந்தோசம் போன்றவறை நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டாலே போதும். அந்த அரை மணி நேரம் பிள்ளைக்ளின் 24 மணி நேர உற்சாகத்திற்கு நிச்சயமாக உரமாக அமையக்கூடும்.

பெற்றோர் இரு பக்கங்களிலும் உள்ள குறைகள், நிறைகளை ஆராய்ந்து தீர்வை கண்டுகொள்வதில் ஆர்வம் செலுத்தினால்தான் இன்றைய இளைய சமுதாயம் எதிர்காலத்தில் பன்முக வளர்ச்சி கொண்ட கட்டமைப்பான குடும்ப அமைப்பில் சிறந்து விளங்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us