ரீடெயில் மேனேஜ்மென்ட் துறை படிப்புகள் பற்றிக் கூறலாமா? | Kalvimalar - News

ரீடெயில் மேனேஜ்மென்ட் துறை படிப்புகள் பற்றிக் கூறலாமா? டிசம்பர் 15,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய வியாபார உலகில் பல்வேறு விதமான வணிக முயற்சிகளும் வணிகத்திற்கான பொருட்களின் எண்ணிக்கையும் மாறுபட்ட தன்மைகளும் அதிகரித்து வருகிறது. இவற்றையெல்லாம் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து உருவாக்குவதும் அதன் பின் அவற்றை விற்பனை செய்வதும் மிக முக்கியமான வாணிப முடிவுகளாக இருக்கின்றன. சந்தை வணிகம் என்பதை எப்படி நிர்வகிப்பது என்பதற்காக மார்க்கெட்டிங் பிரிவில் நிர்வாகவியல் சிறப்புப் படிப்புகள் தான் முன்பு இருந்தன. இதிலிருந்து இதன் உள்ளடங்கிய சிறு பிரிவுகளுக்கும் கூட தற்போது சிறப்புப் படிப்புகள் தரப்படுகின்றன. அவற்றுள் ஒன்று தான் ரீடெயில் மேனேஜ்மென்ட் எனப்படும் சில்லரை வாணிபத்திற்கான நிர்வாகவியல் படிப்புகள்.

மார்க்கெட்டிங்
முன்பெல்லாம் வியாபாரம் என்பது விற்பனை என்பதிலேயே அடங்கி இருந்தது. பொருட்களை தயாரிப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்றவாறு தயாரித்து அதனை நுகர்வோருக்கு வழங்கி வந்தனர். இதில் வாடிக்கையாளரின் தேவை முழுமையாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. பின்னர்தான் விற்பனையிலிருந்து முன்னேறி மார்க்கெட்டிங் என்ற அளவில் மாற்றம் ஏற்பட்டது. மார்க்கெட்டிங் என்ற முறையில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பொருட்களை தயாரிப்பது, விளம்பரம் செய்வது, விற்பனை செய்வது என்ற பல்வேறு பணிகளும் இதில் அடக்கம்.

இது தவிர தாங்கள் தயாரிப்பவற்றை வாடிக்கையாளரின் தேவையாக உணரச் செய்யும் நோக்கமும் உண்டு. தயாரிப்பாளரால் உருவாக்கப்படும் பொருட்கள் தகுந்த திட்டமிடல் மூலமாகவும் மார்க்கெட் ரிசர்ச் முறைகளாலும் மொத்த வியாபாரிகளை சென்றடைகிறது. மொத்த வியாபாரிகளிடமிருந்து இவை சில்லரை வியாபாரிகளுக்குச் செல்லும். சில்லரை வியாபாரிகள் பொருட்களை வாடிக்கையாளர் களுக்கு விற்பது தான் இதன் இறுதி நிலையாக இருக்கிறது.

ரீடெயில் மார்க்கெட்டிங்
வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குமிடம் தான் ரீடெயிலிங் இடமாக இருக்கிறது. பொதுவாக இவை கடைகளாகவோ பெரிய சூப்பர் ஸ்டோர்களாகவோ இருக்கின்றன. ஒரு பொருளை தயாரிப்பது, விளம்பரம் செய்வது, மொத்த வியாபாரிகளிடம் விற்பது போன்ற நடவடிக்கைகள் மார்க்கெட்டிங்கிற்கு எவ்வளவு முக்கியமோ அதே போல ரீடெயில் மேனேஜ்மென்டும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியமாக இருக்கிறது. எனவே திறம்பட ரீடெயிலிங் மேனேஜ்மென்டை கையாளுவதன் மூலமாக மட்டுமே நிறுவனங்கள் வெற்றி பெற முடியும் என்ற உண்மை உணரப்பட்டதன் வெளிப் பாடே ரீடெயில் மேனேஜ்மென்ட் படிப்புகளின் தோற்றமாகும்.

ரீடெயில் மார்க்கெட்டிங் மூலமாகத் தான் வாடிக்கையாளர்கள் சந்தையில் வரும் பொருட்களைப் பற்றி அறிய முடிகிறது. தவிர விற்பனையாளர்களுக்கு உரிய ஊக்கத் தொகை வழங்கவும், வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவும் ரீடெயில் மார்க்கெட்டிங்கே காரணமாக அமைகிறது. ரீடெயில் மார்க்கெட்டிங்கில் விற்பனையாளர் களை நிர்வகிப்பது, தேவைப்படும் ஸ்டாக்குகளை நிர்வகிப்பது, அவற்றை பாதுகாப்பது, பொருட் களின் கணக்கு வழக்குகளை சரிபார்ப்பது என்ற பல்வேறு வகையான பணிகள் இருக்கின்றன. ரீடெயில் மார்க்கெட்டிங் துறையில் வெற்ற பெற நல்ல உந்துதல் உணர்வும், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுடன் நன்றாக பழகும் தன்மையும் தேவை. தற்போது சந்தையில் புகழ் பெற்றுவரும் Direct Response Marketing மூலமாக பொருட்களை தயாரிப்பவர்களே நேரடியாக வாடிக்கை யாளர்களிடம் விற்பது என்ற முறையிலும் ரீடெயில் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

ரீடெயில் மேனேஜ்மென்ட் படிப்புகள்
அடிப்படையில் ரீடெயில் மேனேஜ்மென்ட் படிப்புகள் சந்தைகளை நிர்வகிக்கும் வகையில் தொழில் ரீதியான மேலாளர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டிருக்கின்றன. இந்தப் படிப்புகளில் பொதுவாக 2 வகைகள் உள்ளன. தயாரிப்பாளர்களிடமிருந்து பொருட்களை வாங்குவது தொடர்பானது முதல் வகையாகவும், வாங்கிய பொருட்களை வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பது 2வது வகையாகவும் உள்ளன. ரீடெயில் மேனேஜ்மெண்ட் படிப்புகள் தற்போது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் படிப்புகளாக மாறிவருகின்றன. நல்ல சேவை மனப்பான்மையும் வியாபார உந்துணர்வும் கொண்டவர்களுக்கு ரீடெயில் மேனேஜ்மென்ட் படிப்புகள் மிகச் சிறந்த பணி வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

ரீடெயில் மேனேஜ்மென்ட் படித்தவர்கள் ஸ்டோர் மேனேஜ்மென்ட், மெர்க்கண்டைசிங், சென்ட்ரல் மேனேஜ்மென்ட், ஈ-ரீடெயிலிங் (ஆன்லைன் ரீடெயில்) போன்ற பல துறைகளில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன. சூப்பர் ஸ்டோர்கள், ஹைப்பர் ஸ்டோர்கள் என்பதாக மாறிவரும் இந்திய சந்தையில், இப்படிப்புகளை முடித்தவர்களுக்கு அதீதமான தேவை ஏற்படும். வியாபார உலகில் வெற்றி பெறத் தேவையான தகுந்த அறிவையும், செறிவையும் ரீடெயில் மேனேஜ்மென்ட் படிப்புகளைத் தருகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us