ரப்பர் வாரியம் - ஓர் அறிமுகம் | Kalvimalar - News

ரப்பர் வாரியம் - ஓர் அறிமுகம்அக்டோபர் 29,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில், ரப்பர் தொழிலை ஒட்டுமொத்த அளவில் வளர்ச்சியடைய செய்யும் நோக்கத்தில், 1947ம் ஆண்டு ரப்பர் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு  உச்சபட்ச அமைப்புதான் ரப்பர் வாரியம்.

இயற்கை ரப்பரை வணிக ரீதியில் உற்பத்தி செய்வதை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்.

ரப்பர் வாரியத்தின் பணிகள்

* ரப்பர்துறை தொடர்பான அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்துவது மற்றும் அவற்றுக்கு உதவுவது.

* ரப்பர் பயிரிடுதல், உரமிடுதல் மற்றும் உரங்களைத் தூவுதல் போன்ற நடவடிக்கைகளின் மேம்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்தல்.

* ரப்பர் வளர்ப்பவர்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல்

* ரப்பர் சந்தை நடவடிக்கையை மேம்படுத்தல்

* ரப்பர் எஸ்டேட் உரிமையாளர்கள், டீலர்கள் மற்றும் உற்பத்தியாளர் ஆகியோரிடமிருந்து புள்ளி விபரங்களை சேகரித்தல்

* ரப்பர் உற்பத்தியில் பங்குபெறும் தொழிலாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான ஊக்கத் தொகைகளை அதிகரித்தல்

* ரப்பர் ஏற்றுமதி-இறக்குமதி உள்பட, ரப்பர் தொழில்துறை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல்

* ரப்பர் சட்டம் மற்றும் ரப்பர் வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்தல்

உள்ளிட்ட பலவகைப் பணிகளை ரப்பர் வாரியம் மேற்கொள்கிறது.

உலகளாவியத் தொடர்புகள்

ரப்பர் தொடர்புடைய பலவித உலகளாவிய அமைப்புகளுடன் இந்தியா நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. IRSG, ANRPC மற்றும் IRRDB போன்றவை அவற்றுள் சில.

ரப்பர் பயிற்சி நிறுவனம்

ரப்பர் பயிற்சி நிறுவனமானது, இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், ரப்பர் வாரியம் மற்றும் பயிற்சித் துறையின்கீழ் செயல்படுகிறது. பயிற்சி என்பது ஒரு அத்தியாவசியமான அம்சம் என்று ரப்பர் சட்டம் கூறுவதால், கடந்த 1994ம் ஆண்டு பயிற்சித் துறை துவங்கப்பட்டது. ரப்பர் பயிற்சி நிறுவனமானது, கோட்டயத்திலுள்ள பயிற்சித் துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி நிறுவனமானது, 50க்கும் மேற்பட்ட, குறுகியகால பயிற்சித் திட்டங்களை நடத்துகிறது. மேலும், ரப்பர் வேளாண்மை, பயிரிடுதல் மேலாண்மை, ரப்பர் செயல்பாடு, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆகிய துறைகளில் சர்வதேச அளவிலான பயிற்சிகளை வழங்குகிறது.

ரப்பர் பயிற்சி நிறுவனமானது, கேரளாவின் கோட்டயத்திலுள்ள ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அருகில் அமைந்துள்ளது. இதைப்பற்றி மேலும் பல விரிவான விபரங்களை அறிந்துகொள்ள http://rubberboard.org.in/training.asp என்ற இணையதளம் செல்லவும்.

ரப்பர் தொழில்துறைப் பயிற்சி

ரப்பர் வேளாண்மை மற்றும் தொழில்துறையில் பலவித நிலைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ரப்பர் தொடர்பான எந்தவிதமான படிப்பில் சேர்வதற்கும் குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு. இந்த படிப்புகளின் கற்பித்தல் மொழி ஆங்கிலம்.

அவற்றின் விரிவான விபரங்கள்,

மாணவர்களுக்கான பயிற்சி திட்டங்கள்

ரப்பர் உற்பத்தி மற்றும் சோதனையில் குறுகிய கால பயிற்சி, B.Tech மாணவர்களுக்கான ரப்பர் தொழில்நுட்ப பயிற்சி, M.Tech மாணவர்களுக்கான ரப்பர் தொழில்நுட்ப பயிற்சி, ரப்பர் பயிரிடுதல் தொடர்பான குறுகிய கால பயிற்சி, முதுநிலை டிப்ளமோ மாணவர்களுக்கான ரப்பர் தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சி போன்றவை இத்திட்டத்தில் அடங்கும்.

பொதுவான பயிற்சி திட்டங்கள்

ரப்பர் பயிரிடுதலில் தேனி வளர்ப்புப் பயிற்சி, காளான் வளர்ப்பில் பயிற்சி, விதைத் தூவுதல் மற்றும் தூவுபவர்களை நிர்வகித்தல் தொடர்பான பயிற்சி, கழிவுநீர் மற்றும் பொருட்களிலிருந்து உயிர் வாயு(Bio Gas) உற்பத்தி செய்யும் பயிற்சி, செடி வளர்ப்பு மேலாண்மையில் பயிற்சி, நுண்ணுயிரிகள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டில் பயிற்சி உள்ளிட்ட பலவகை பயிற்சிகள் இதில் அடங்கியுள்ளன.

வெளிப்புற பயிற்சிப் திட்டங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் பயிற்சி, பொதுப்பிரிவு, SC மற்றும் பழங்குடியினப்(ST) பெண்களுக்குப் பயிற்சி, ரப்பர் தொடர்பான தொழிற்சாலையில் தொழில்முறைப் பயிற்சி மற்றும் தரக்கட்டுப்பாட்டில் பயிற்சி போன்றவை இதில் அடங்கும்.

ரப்பர் ரோலர்கள் தொடர்பாக ஒருநாள் பயிற்சி

இந்த ஒருநாள் பயிற்சியானது, ரப்பர் பயிற்சி நிறுவனம் மற்றும் இந்திய ரப்பர் நிறுவனம் ஆகியவை இணைந்து ரப்பர் ரோலர்கள் தொடர்பாக ஒருநாள் பயிற்சி திட்டத்தை நடத்துகின்றன.

இவைத்தவிர,

சர்வதேச பயிற்சிப் திட்டங்கள்

ரப்பர் வாரியத்தின் பணியாளர்களுக்கானப் பயிற்சி

சந்தை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுப் திட்டங்கள்

தலைமைத்துவ மேம்பாட்டுப் திட்டங்கள்

ரப்பர் பயிரிடுதல் மேம்பாட்டுப் திட்டங்கள்

ரப்பர் செயல்பாடு மற்றும் தர மேம்பாட்டுப் திட்டங்கள்

ரப்பர் தொழிற்சாலை மேம்பாட்டுப் திட்டங்கள்

போன்ற பலநிலைகளிலான பயிற்சித் திட்டங்களும் உள்ளன.

இதைப்பற்றி மேலும் பல விரிவான விபரங்களை அறிந்துகொள்ள http://rubberboard.org.in/training.asp என்ற இணையதளம் செல்லவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us