வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம் | Kalvimalar - News

வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்மார்ச் 11,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்(IIST), ஆசியாவிலேயே முதல் வானியல் கல்வி நிறுவனமாகும். மேலும், உலகிலேயே இத்துறை சம்பந்தமாக, முழு அளவிலான இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட நிலையிலான படிப்புகளை வழங்க தொடங்கிய முதல் ஆராய்ச்சி நிறுவனம் இதுதான். பாடத்திட்டங்களை துவக்குவதற்கான அனுமதியை, கடந்த 2007ம் ஆண்டுதான் மத்திய அரசிடமிருந்து இந்நிறுவனம் பெற்றது. பாடத்திட்டங்களைத் தொடங்கி, 1 வருடத்திற்குள்ளாகவே, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுவிட்டது.

இந்தியாவில் உள்ள தகுதிவாய்ந்த மற்றும் விருப்பமுள்ள இளைஞர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து, இஸ்ரோவில் பணிபுரியுமளவிற்கு அவர்களை தகுதிபடுத்துவதே இதன் பிரதான நோக்கம். மத்திய விண்வெளி துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.

நோக்கம்

விண்வெளி ஆராய்ச்சிக்கு சிறப்பான முறையில் பங்களிக்கும் வகையில், ஒரு உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாக இருப்பது.

* விண்வெளி திட்டங்களின் சவால்களை சமாளிக்கும் விதத்தில், ஒரு சிறந்த கல்வித் திட்டத்தை உருவாக்குதல்

* புத்தாக்க மற்றும் படைப்பாக்க சிந்தனைகளை ஊக்குவிப்பது

* குறிப்பிட்ட பகுதிகளில் ஆராய்ச்சி மையங்களை அமைப்பது.

* நெறிமுறை சார்ந்த மற்றும் பயன்மிக்க கல்வியை வழங்குவது.

* சமூகத் தேவைகளை ஈடுசெய்யும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வது.

* புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுதல்.

வளாக வசதிகள்

* டேட்டா சென்டர்

* சிறந்த கம்ப்யூட்டிங் ஆய்வகம்

* ப்ரோகிராமிங் ஆய்வகம்

போன்ற முக்கிய வசதிகள் உள்ளன.

இதைத்தவிர, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும், மருத்துவமனை மற்றும் முறையான விடுதி வசதிகளும் உள்ளன.

நூலகம்

இந்நிறுவனத்திலுள்ள நூலகத்தில், புகழ்பெற்ற பாடப்புத்தகங்கள், துணைப்பாடத் தொகுப்புகள் மற்றும் குறிப்பு புத்தகங்கள் போன்றவை உள்ளன. மேலும், 3000க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் ஜர்னல்களும், நூற்றுக்கணக்கான மாநாட்டு தாள்களும்(Conference paper) உள்ளன. மேலும், VSSC(Vikram Sarabai Space Centre) நூலகத்தின் ஆதரவைப் பெற்ற நூலகமாக இது விளங்குகிறது.

ஆராய்ச்சி

இந்நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர், தங்களது விருப்பமான துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படுகிறார்கள். ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு, இஸ்ரோ மையங்கள் மற்றும் நாட்டின் பிற வான்வெளி கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றின் புகழ்பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆராய்ச்சி வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தேவை மற்றும் இந்திய வான்ஆராய்ச்சி தேவைகளுக்கு ஈடுசெய்ய, முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள் இந்நிறுவனத்தில் வழங்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஜியாலஜி(புவியமைப்பியல்), ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த முனைவர் பட்ட ஆராய்ச்சி வாய்ப்பிற்கான தகுதிநிலைகள் மற்றும் சேர்க்கை விபரங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள http://www.iist.ac.in/ என்ற இணையதளம் செல்லவும்.

படிப்புகள்

இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிலை போன்ற பல நிலைகளில் இங்கே படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அவியோனிக்ஸ் மற்றும் பிசிக்கல் சயின்ஸ் போன்ற துறைகளில் இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், முதுநிலை அளவிலும் பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவைப்பற்றிய முழு விபரங்களையும், சேர்க்கைப் பற்றிய விபரங்களையும் அறிந்துகொள்ள http://www.iist.ac.in/ என்ற இணையதளம் செல்லவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us