அரிதான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யுங்கள் - ரமேஷ்பிரபா | Kalvimalar - News

அரிதான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யுங்கள் - ரமேஷ்பிரபா

எழுத்தின் அளவு :

பெற்றோர், தங்கள் ஆசை மற்றும் கருத்துக்களை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது. மாணவர்கள் அரிதான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து படித்தால் வேலை வாய்ப்பு பெறலாம் என, கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார்.

புதுச்சேரியில் தினமலர் மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் இணைந்து நடத்திய பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில், 60 முதல் 80 சதவீதம் வரை மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஆலோசனை வழங்கி, கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசியதாவது: பொதுவாக, படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கியவர்களைவிட, 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள்தான் வாழ்க்கையில் பெரிய அளவுக்கு முன்னேறி உள்ளனர்.

காரணம், அவர்களுக்குப் படிப்பைத் தவிர மற்ற திறமைகளில் ஆர்வம் இருக்கும். பெற்றோர், தங்கள் கருத்துக்களை, ஆசையை தெரியப்படுத்துவதில் தவறில்லை. அவற்றை பிள்ளைகள் மீது திணிப்பதுதான் தவறு.

மாணவர்கள் தங்களுக்கு எது நன்றாக வரும் என்பதை அறிந்து, அதற்கேற்ப பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும். படிப்பில் சேரும்போது உள்ள வேலை வாய்ப்பு நிலவரமும், படித்து முடிக்கும்போது உள்ள நிலவரமும் வேறாக இருக்கும். எனவே அரிதான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

புதுச்சேரி, தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சீட்கள் உள்ளன. விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் கொடுத்தும், 40 ஆயிரம் சீட்கள் காலியாக உள்ளன. காரணம், கட் ஆப் மதிப்பெண் மற்றும் கவுன்சிலிங் முறை. பொறியியல் படிப்பிற்கு பிளஸ் 2ல் கணிதம், வேதியியல், இயற்பியலில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு ரேங்க் பட்டியல் தயாரித்து, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. ரேங்க் அடிப்படையில் விரும்பிய கல்லூரியைத் தேர்வு செய்யலாம்.

கவுன்சிலிங் செல்வதற்குமுன், கல்லூரி முக்கியமா, பாடப் பிரிவு முக்கியமா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை, கல்லூரிகள் குறைவு. ஆனால் அதில் சேர விரும்புவோர் அதிகம். அதனால், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு குறைவு, என்று ரமேஷ்பிரபா பேசினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us