கம்ப்யூட்டர் படித்தால் 14 துறைகளில் வேலை | Kalvimalar - News

கம்ப்யூட்டர் படித்தால் 14 துறைகளில் வேலை

எழுத்தின் அளவு :

கம்ப்யூட்டர் துறை மற்ற துறைகளை விட முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது என்று தினமலர் நாளிதழ் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக பேராசிரியர் கோவிந்தராஜன் பேசினார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சுபலஷ்மி மகாலில் நேற்று காலை தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு உதவும் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் எஸ்.ஆர்.எம்.,பல்கலைக்கழக பேராசிரியர் கோவிந்தராஜன்
கம்ப்யூட்டர் சயின்ஸின் எதிர்காலம் குறித்து பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தினமலர் வழிகாட்டி இல்லையே என்று நான்
வருத்தப்படுகிறேன். அந்தக் காலத்தில் மேற்படிப்பு என்பதெல்லாம் நண்பர்கள், பெற்றோர் என்ன சொல்கின்றனரோ அதைப் பின்பற்றி படித்து வந்தனர்.

ஆனால் இன்று தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் கல்வி நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு மாணவர்கள் தகுந்த பாடப்பிரிவைத் தேர்வு செய்து வருகின்றனர். பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொள்வது போல், எந்தப் பாடப்பிரிவைத் தேர்வு செய்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும், வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு படிக்கும் நிலைமை உள்ளது. பெற்றோர்கள் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய வைக்கக்கூடாது.

கம்ப்யூட்டர் துறை இந்த காலக்கட்டத்தில் மற்ற துறைகளை விட முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. ஐ.டி., துறையில் பல்வேறு வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. அந்தக் காலத்தில் தனிமனித திறமை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தற்போது அறிவுதான்
முக்கியமாக கருதப்படுகிறது. கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கில் பலர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.

பிளஸ் 2 முடித்த பிறகு மாணவர்கள் தங்கள் திறமைக்கேற்ப ஆராய்ந்து துறைகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஐ.டி., துறை வரும் 2020ம் ஆண்டு வரை சிறப்பாக இருக்கும். இந்தத் துறை பலருக்குத் தொடர்ந்து வேலை வாய்ப்புகளை வழங்கி கொண்டே இருக்கும். இந்தத் துறை ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சிதான் பெற்று வருகிறது. ஆரம்பத்தில் 4 லட்சம் பேர்களுக்கு
வேலை வாய்ப்பை வழங்கிய ஐ.டி., துறை தற்போது 12 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெறும் நிலைக்கு உயர்ந்துவிட்டது. 15 சதவீத வேலைவாய்ப்பு ஐ.டி., துறை மூலம் கிடைக்கிறது.

கம்ப்யூட்டர் துறையில் சிறந்து விளங்குவதற்கு ஆங்கிலம் முதன்மையாக தெரிந்து இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் படிப்பு படித்தவர்களுக்கு ஆட்டோமொபைல், கட்டுமானத்துறை, மருத்துவத் துறை, ஐ.டி., துறை, சுரங்கத்துறை என 14 துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

இந்தியாவில் பல வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கம்ப்யூட்டர் நிறுவனங்களை வைத்துள்ளனர். இதன் மூலம் அதிக அளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. இவ்வாறு பேராசிரியர் கோவிந்தராஜன் பேசினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us