மைக்ரோபைனான்ஸ் துறை பற்றி கேள்விப்படுகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரமுடியுமா? | Kalvimalar - News

மைக்ரோபைனான்ஸ் துறை பற்றி கேள்விப்படுகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரமுடியுமா? ஏப்ரல் 15,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உள்ள பல்வேறு ஏழை குடும்பங்களுக்கு தொழில் செய்து பணம் சம்பாதிக்கும் விதத்தில் சிறு கடன்கள் வழங்குவதை மைக்ரோபைனான்ஸ் என்கிறார்கள். ஈடாக செக்யூரிடி பெறப்பட்டு தரப்படும் இத்தகைய கடனானது 500 ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை இருக்கும். கடனைப் பெற்றவர்கள் குறைவான வட்டியையும் அசலையும் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். இவ்வாறு திரும்பப் பெறப்பட்ட பணத்தை மீண்டும் தேவைப்படும் குடும்பங்களுக்குக் கடனாக தருகிறார்கள்.

இந்தியாவில் இந்தப் பணிகளை தனியார் மற்றும் அரசுடைமை வங்கிகளின் மைக்ரோபைனான்ஸ்பிரிவினர் நிர்வகிக்கிறார்கள். கடனைப் பெற்ற ஏழைக் குடும்பத்தினர் அதை முதலீடாக வைத்து அதிலிருந்து தங்கள் வாழ்விற்குத் தேவையான பொருளீட்டுவதுடன் குடும்ப பொருளாதாரத்தையும் மேம்படுத்தி முன்னேறுகிறார்கள்.

மைக்ரோபைனான்ஸ் வகைக் கடன்கள் பெரும்பாலும் பெண்களை இலக்காக வைத்தே தரப்படுகிறது. இந்தப் பணத்தைக் கொண்டு பெண்கள், ஊறுகாய் தயாரிப்பு, காய்கறி வியாபாரம் போன்ற சுய தொழில்களைச் செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். தற்போது வேகமாக விரிவடைந்து வரும் இந்த புதிய துறையில் பணி புரிய பல்வேறு வாய்ப்புகள் உருவாகிவருகின்றன.

மைக்ரோபைனான்ஸ் முறையில் கடன்கள் ஏழை குடும்பங்களைச் சென்றடைய கள அதிகாரிகள் எனப்படும் பீல்ட் ஆபிசர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகிறார்கள். இது தவிர, மைக்ரோ பைனான்ஸ் கடன் பெறும் மக்கள் முறையாகத் தொழில் நடத்த திட்டமிடலும் பயிற்சியும் தரப்படுகிறது. இதற்கு தனியாக திறனாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

எம்.எப்.ஐ. எனப்படும் மைக் ரோபைனான்ஸ் நிறுவனங்கள் இத்தகைய தேவைகளை திட்டமிடுவதோடு, அதற்கான முயற்சிகளையும் செய்கின்றனர். இந்தியாவில் இதற்கென்றே பிரத்யேகமாக உள்ள பந்தன் மைக்ரோபைனான்ஸ், ஷேர் மைக்ரோபின், எஸ்.கே.எஸ்.மைக்ரோபினான்ஸ்  போன்ற நிறுவனங்களிலும், எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஏ.பி.என். ஆம்ரோ, ஸ்டேட் பாங்க் போன்ற வங்கிகளின் மைக்ரோ பைனான்ஸ் துறைகளிலும் மைக்ரோபைனான்ஸ் வல்லுனர்களின் தேவை அதிகம் உள்ளது.

சில குறிப்பிட்ட துறைகளின் வல்லுனர்கள் இத்தகைய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் கன்சல்டன்டாக பணி புரியும் வாய்ப்புகளும் உள்ளன. பிளஸ் 2 முடித்து இத் துறையில் நுழைபவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிதாக பட்டப்படிப்பு முடிப்பவர்களுக்கும் எம்.பி.ஏ. முடித்து வெளிவருபவர்களுக்கும் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைத்தாலும், போகப் போக மாதம் ரூ. ஒரு லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இது தவிர, அரசால் தரப்படும் மானியத்தில் வழங்கப்படும் உணவு, இருப்பிடம் போன்ற வசதிகளையும் பெற முடிகிறது.

பட்டப்படிப்பு தகுதி அடிப்படைத் தகுதியாக இருக்கிறது. எனினும் சமூக அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றவருக்கு கள அதிகாரி பணியில் முன்னுரிமை தரப்படுகிறது. இவை தவிர சம்பந்தப்பட்ட கிராமங்களில் பிளஸ் 2 வரை படித்தவரையும் இணைத்து மைக்ரோபைனான்ஸ் பணிகள் நடக்கின்றன.

குஜராத் மாநிலம் ஆனந்திலுள்ள ஐ.ஆர்.எம்.ஏ., புவனேஸ்வரிலுள்ள எக்ஸ்.ஐ.எம்.பி., டில்லி ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க், அகமதாபாத்திலுள்ள என்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் ஊரக வளர்ச்சி மேலாண்மை மற்றும் மைக்ரோபைனான்ஸ் படிப்புகள் தரப்படுகின்றன. ஐ.நா.சபையும் இதில் ஆன்லைன் படிப்பு ஒன்றைத் தருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரச் சூழலில் இத் துறை ஆண்டொன்றுக்கு 300 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. கிராமங்கள் அதிகமாக இருப்பதாலும் வளரும் பொருளாதாரத்தாலும் இத் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us