தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி சேர்க்கை - 2011 | Kalvimalar - News

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி சேர்க்கை - 2011

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியலில் எந்த பிரிவை தேர்வு செய்வது என்பது குறித்து விரிவாக விளக்குகிறார் கல்வி ஆலோசகர் செல்வக்குமரன்.

இந்தியாவின் வளர்ச்சி தொழில் துறையை பெரிதும் நம்பி இருப்பதும் தொழில் வளர்ச்சி ஆண்டுக்கு 9 விழுக்காடு என்ற அளவில் இருப்பதும், தொழில்கல்வியில் நாம் இன்னும் பல வகையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதையேக் காட்டுகிறது.

சிறப்பான அளவில் வளர்ந்து வரும் இந்தியாவில் தொழிற்கல்வியை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.

கிராஸ் என்ரோல்மென்ட் ரேடியோ எனப்படும் உயர்கல்விக்கு செல்லும் மொத்த மாணவர்களின் தற்போதைய எண்ணிக்கை 11 விழுக்காட்டிலிருந்து 2020ம் ஆண்டிற்குள் 15 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தை முன்னிறுத்தியே அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் தொழிற்கல்வியை பொறுத்த வரையில் அதிக அளவில் 446 பல் தொழில்நுட்ப கல்லூரிகளும், 491 பொறியியல் கல்லூரிகளும், 26 தனியார் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் உள்ளன. தற்பொழுது அதிக வேலை வாய்ப்புள்ள துறையாக விளங்கி வரும் தகவல் தொழில்நுட்பத்தில் இந்தாண்டு பொறியியல் கல்வியை முடிக்கும் ஒரு மாணவர் ஆண்டுக்கு 4 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறும் தகுதி பெறுகின்றனர். அந்த அளவிற்கு தொழில் துறையும் அதில் பணியாற்றும் பொறியாளர்களும் உள்ளனர்.

ஒவ்வொரு பெற்றோரும் தன்னுடைய மகள் அல்லது மகனை ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ ஆக்க வேண்டும் என்ற எண்ணமிகுதியால் எந்தவொரு தெளிவும் இல்லாமல் கல்லூரி அல்லது பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்துவிட்டு அதன் பிறகு ஏற்படும் பாதிப்புகளை கண்டு வருத்தப்படுகின்றனர்.

எனவே, உயர்கல்விக்கு செல்லவிருக்கும் மாணவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள பல தகவல்களை அறிந்த பின்பு அவர்கள் தங்களுடைய தேர்வினை உறுதி செய்வது சரியான முறையாகும்.

மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறமை
மாணவர்களின் தகுதி மற்றும் மதிப்பெண்கள்
கல்லூரியின் தரம் மற்றும் பாடப்பிரிவுகள்
தேர்வு செய்த துறையின் வருங்கால வாய்ப்புகள்
தேர்வு செய்த படிப்பின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்

மாணவர் ஒருவர் தன்னுடைய சரியான உயர்கல்வி வாய்ப்பினை தேர்வு செய்வதன் மூலம் தன்னுடைய வளமான எதிர்காலத்தை உறுதி செய்கின்றார். தமிழ்நாட்டில் 491 பொறியியல் கல்லூரிகளும், அவற்றில் கற்பிக்கப்படும் 50 வகையான பாடப்பிரிவுகளும் அவற்றில் உள்ள சுமார் 1,90,000 இடங்களும் பற்றிய விவரங்களை விரிவாக பார்ப்போம்.

கடந்த ஆண்டில் (2010) நடந்து முடிந்த பொறியியல் சேர்க்கை முடிவில் சுமார் 31000 காலி இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.

கட்டிடப் பொறியியல் (சிவில் இன்ஜினீயரிங்)
 20 ஆண்டுகளுக்கு முன்பாக பொறியியல் துறை என்றால் அது கட்டிடப் பொறியியலை மட்டுமே குறித்த காலம் மாறி தற்பொழுது 50க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. அந்த அளவிற்கு பழமையான துறையாக கருதப்படும். இத்துறை தற்பொழுது தனக்குரிய முறையில் நல்ல வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்பொழுது சிவில் இன்ஜினியரிங் படிப்பிற்கு 230 கல்லூரிகளும், அவற்றில் சுமார் 15000 இடங்களும் உள்ளன.

தமிழக அரசு தமிழ் வழியாக கட்டிடப் பொறியியல் கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம் தமிழில் ஆர்வம் கொண்ட மாணவர்களும் தங்களுடைய படிப்பை தொடர்கின்றனர். அதிக அளவில் அரசு, தனியார் துறை வேலை வாய்ப்புகளை கொண்ட இத்துறை மாணவர்கள் கட்டிட வரைகலை என்ற ஆர்க்கிடெக்சர் படிப்பையும் அதன் மூலம் அதிக சம்பளம் பெறும் வேலை வாய்ப்பையும் பெற முடியும். இதன் மூலம் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங், கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங், என்விரான்மென்டல் இன்ஜினியரிங், எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த முதுகலை பொறியியல் படிப்புகளையும் படிக்க வாய்ப்புள்ளது.

தற்பொழுது வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறை மற்றும் அதன் கட்டிடப்பணிகள் இந்த படிப்பிற்குரிய வேலை வாய்ப்புகளை எளிதாக்குகின்றன. பல பெரிய நிறுவனங்கள் இத்துறையில் கால்பதித்து இருப்பது இத்துறை என்றும் ஏற்றம் காணும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

2006ம் ஆண்டில் வெறும் 50 விழுக்காடு மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறையானது தற்பொழுது 2010ம் ஆண்டில் 91 விபக்காடுக்கு மேலான இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

தற்பொழுது ஐ.டி. துறையினரும் கட்டிடப் பொறயியில் வல்லுனர்களை அதிக அளவில் வேலைக்கு தேர்ந்தெடுப்பது, சுய தொழில் முறை எளிமையாக இருப்பது, கட்டுமான மேலாண்மை தேவைப்பாடு போன்றவற்றால் அதிக அளவில் மாணவிகளும் இத்துறையை தேர்வு செய்கின்றனர்.

சிறப்பான கல்லூரிகள்  துவங்கப்பட்ட ஆண்டு

1. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை  - 1859
2. ஏ.சி. பொறியியல் கல்லூரி, காரைக்குடி  - 1952
3. அரசு பொறியியல் கல்லூரி, சேலம்  - 1966
4. அரசு பொறியியல் கல்லூரி, கோவை  - 1952
5. பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை  - 1953
6. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை  - 1957

மெக்கானிக்கல் துறை

சிவில் படிப்பிற்கு அடுத்தபடியாக விளங்குவது மெக்கானிக்கல் எனப்படும் இயந்திரவியல். தற்பொழுது உள்ள கணினி வளர்ச்சியின் காரணமாக பழமையான துறைகளும் புத்துணர்வு பெற்று தமக்கென்ற தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன. என்றுமே ஒரே சீரான வளர்ச்சியைக் கொண்ட துறையாக விளங்குவதனால் மாணவர்கள் இதன் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 2009ம் ஆண்டு சேர்க்கை கலந்தாய்வில் 133 மாணவிகள் மெக்கானிக்கல் துறையை தேர்ந்தெடுத்ததன் மூலம் இத்துறையில் எவரும் சாதிக்கலாம் என்பதனை காட்டுகிறது.

மாணவிகளை விட  மாணவர்களால் அதிகம் தேர்வு செய்யப்படும் துறையாக இது இருக்கின்றது. தமிழ்நாட்டில் இதற்காக சுமார் 380 கல்லூரிகளும், அதில் சுமார் 25,600 இடங்களும் இருப்பது இதன் வலிமையை மாணவர்களிடம் உணர்த்துகின்றது.ள 2008ம் ஆண்டில் வெறும் 51 விபக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்த இத்துறையானது, தற்பொழுது 2010ம் ஆண்டில் 99 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் இத்துறை என்றுமே சிறந்த படிப்பாக திகழ்கின்றது.

இன்ஜினியரிங் டிசைன், எனர்ஜி இன்ஜினியரிங், பிராடக்ட் டிசைன், மெகாடிரானிக்ஸ், கேட்/கேம், மேனுபேக்சரிங் மற்றும் ஏரோநாடிக்கல் போன்ற வளமையான முதுமைகளைப் பொறியியல் படிப்புகளை பெற்றிருப்பதும், சுய தொழில் தொடங்குவதற்கான அதிக வாய்ப்புக்கள் இருப்பதும், ஐ.டி. துறை வாய்ப்புக்களும் இத்துறை மாணவர்களுக்கு மங்காத ஒளி விளக்காக இத்துறை திகழ்கின்றது.

சிறப்பான கல்லூரிகள்   துவங்கப்பட்ட ஆண்டு

1. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை  - 1859
2. ஏ.சி. பொறியியல் கல்லூரி, காரைக்குடி  - 1952
3. அரசு பொறியியல் கல்லூரி, கோவை  - 1956
4. பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை  - 1951
6. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை  - 1957

மேலே குறிப்பிடப்பட்ட துறைகள் மாணவர்களின் ஆர்வத்தினால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது ஆசை. மேலும் பல துறை பற்றிய விவரங்களுடன் அடுத்த இதழில் சந்திப்போம். 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us