நேரத்தை அட்டவணையிட்டு, பிள்ளைகளை தயார்படுத்துங்கள் | Kalvimalar - News

நேரத்தை அட்டவணையிட்டு, பிள்ளைகளை தயார்படுத்துங்கள்

எழுத்தின் அளவு :

ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. புது கல்வி ஆண்டு துவங்குகிறது. சீருடைகள், புத்தகங்கள் வாங்குவதில் மாணவர்கள், பெற்றோர் ஆர்வமாய் இருக்கின்றனர். புத்தும்புது கனவுகளுடன், லட்சியத்துடன் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள், வகுப்புகளில் அடி எடுத்து வைக்க உள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு கல்வியாண்டும் முக்கியமானது. ஒவ்வொரு வகுப்பும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிகள். அதை வெற்றிகரமாக கடந்து செல்வதற்கான வழிகாட்டியே இந்த பள்ளி காலங்கள் பகுதி.

உங்களின் இளமைக் கால படிப்பு கனவை, பிள்ளைகளிடம் திணிப்பதோ, விதைப்பதோ கூடாது என, மதுரை டாப்கிட்ஸ் குழந்தைகள் மனநல டாக்டர் தீப் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது : மழலைப் பருவத்தில் குழந்தைகள் தாயிடம் மிகுந்த ஒட்டுதலோடு இருக்கும். முதன்முதலாக பள்ளியில் சேர்க்கும் போது தாய்க்கும், குழந்தைக்குமே மனது கஷ்டமாக இருக்கும். அதற்காக பள்ளியில் சேர்த்தது முதல் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, குழந்தைகளை கவனிக்கக் கூடாது. ஆசிரியர்களிடம் நம்பிக்கை வைத்து, பிள்ளைகளை ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் ஆசிரியர்களிடம் ஈடுபாடு ஏற்படும். குழந்தைகள் வீடு திரும்பியவுடன் பள்ளியில் ஆசிரியர் அடித்தாரா, சக பிள்ளைகள் அடித்தனரா என எதிர்மறையான கேள்விகள் கேட்கக்கூடாது. உங்களின் ஆர்வக் கோளாறால், குழந்தைகள் தினமும் எதையாவது சொல்ல ஆரம்பித்துவிடும். ஆசிரியர்கள் என்றாலே அடிப்பார்கள் என்ற சிந்தனை மனதில் பதிந்து விடும்.

ஒன்றாம் வகுப்பு வரை, பிள்ளைகளிடம் படிப்பைப் பற்றி அதிகம் பேசவேண்டாம். அந்த வயதில் சகபிள்ளைகளுடன் இயல்பாக பழகுகின்றனரா, நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்கின்றனரா என்று கவனிக்கலாம். ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனித் திறமை இருக்கும். மூன்று வயது குழந்தைக்கும், மூன்றே கால் வயது குழந்தைக்கும் கூட அறிவின் தன்மை வித்தியாசப்படும். மேலும் வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஒரே வயதாக இருந்தாலும், சில மாதங்கள் வித்தியாசம் இருக்கும். எனவே பக்கத்து வீட்டு பிள்ளைகளுடனோ, உடன் பிறந்தவர்களுடனோ படிப்பை, மதிப்பெண்ணை ஒப்பிட்டு பேச வேண்டாம்.

கே.ஜி., முதல் இரண்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, வயதிலும், அனுபவத்திலும் மூத்த ஆசிரியர்களை பாடம் நடத்த, பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். ஆசிரியரின் உருவத்தில் அம்மாவை பார்ப்பது போல, குழந்தைகள் அமைதியாகிவிடும். குழந்தைகள் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே, டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும் என திணிக்காதீர்கள். அதுதவிர எவ்வளவோ துறைகள் நிறைய உள்ளன. உங்களது இளமைக்கால படிப்பு கனவை, பிள்ளைகள் மீது திணிப்பது நியாயமே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஈடுபாடு, திறமை இருக்கும். அத்திறமையை கண்டறிந்து, அதைநோக்கி பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும். பத்தாம் வகுப்பு படிக்கும் போது இயல்பாக விட வேண்டும்.

நடனம், பாட்டு, இசை, விளையாட்டில் பிள்ளைகள் ஆர்வமாக இருந்தால் கூட, பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வில் அனைத்தையும் நிறுத்தி விடுகின்றனர் பெற்றோர். இது பிள்ளைகள் மனதில் அதிக மனச்சோர்வையும், படிப்பின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும். ஓயாமல் படி, படி என்று சொல்வதை விடுத்து, ஒருநாளைக்கு தினமும் 45 நிமிடம் ஓடியாட அனுமதியுங்கள். அதுவும் வியர்வை நன்கு வெளியேறும் வகையில் விளையாட வேண்டும். அரைமணி நேரம், அவர்களுக்கு பிடித்த இசை, பாட்டை கேட்க அனுமதியுங்கள். நேரத்தை அட்டவணையிட்டு, அதற்கேற்ப பிள்ளைகளை தயார் செய்தால், அவர்களுக்கும் பதட்டம் இருக்காது. பெற்றோரும் நிம்மதி பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us