‘உயர்கல்வி கட்டணம் குறைக்கப்பட வேண்டும்’ | Kalvimalar - News

‘உயர்கல்வி கட்டணம் குறைக்கப்பட வேண்டும்’

எழுத்தின் அளவு :

கோவை: கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான பகுதி நேர வேலைவாய்ப்பு சேவை மையம் துவக்க விழாவில், பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:

பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 10 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை ஏழு சதவீதமாக மட்டுமே உள்ளது. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 20 சதவீதமாக உ<யர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த வளர்ச்சியில், உயர்கல்விக்காக மட்டும் நான்கு சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் உயர்கல்வி, அதிக கட்டணமுள்ளதாக உள்ளது. இந்நிலையை மாற்றியமைப்பது அவசியம். ஏழை மாணவர்களுக்கு எட்டக்கூடிய கல்வியாக உயர்கல்வி இருக்க வேண்டும்; அதனால், கல்வி கட்டணம் குறைக்கப்பட வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை போதுமானதாக இல்லை. ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும்போதே, பகுதி நேர வேலைக்குப் போய் சம்பாதிக்கின்றனர். இவர்களின் வசதிக்காக பாரதியார் பல்கலை  www.buparttimejobssupport.org என்ற இணையத்தளத்தை துவக்கியுள்ளது.

இந்த இணையத்தளத்தை பயன்படுத்தி நடப்பு கல்வியாண்டில் 10 ஆயிரம் மாணவ,மாணவியருக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us