மெர்ச்சன்ட் நேவி படித்தால் வாய்ப்புள்ளதா? | Kalvimalar - News

மெர்ச்சன்ட் நேவி படித்தால் வாய்ப்புள்ளதா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

உலகெங்கும் சுற்றி வர யாருக்குத் தான் பிடிக்காது? அதிலும் சுற்றிலும் குளிர்ச்சியும் அழகுமாக நீலக் கடலில் கப்பலில் சுற்றி வர பிடிக்காதவர் யார் இருக்கிறார்? இப்படி சுற்றி வர கவர்ச்சிகரமாக சம்பளமும் தரப்படுவது மெர்ச்சன்ட் நேவி பணிகளில் தான்.

மெர்ச்சன்ட் நேவி என்பது லட்சக்கணக்கான டன் கொள்ளவுகளைக் கொண்ட டேங்கர்கள், கார்கோ மற்றும் பயணிகள் கப்பல்களைக் குறிக்கிறது. கப்பற்படை என்பது ராணுவத்தோடு தொடர்புடையது. ஆனால் மெர்ச்சன்ட் நேவி என்பது வணிக ரீதியாக நடத்தப்படும் கப்பல் போக்குவரத்தைக் குறிக்கிறது. மெர்ச்சன்ட் நேவியை நடத்தும் நிறுவனங்கள் திறமை வாய்ந்த கப்பல் பணியாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்கின்றன. இந்தியாவில் ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங், எஸ்ஸார், சௌவுகுளே ஷிப்பிங் ஆகியவை இது போன்ற மெர்ச்சன்ட் நேவியை நடத்து கின்றன. பன்னாட்டு அளவில் அமெரிக்காவைச் சேர்ந்த செவ்ரான் மற்றும் மொபில், ஹாங்காங்கைச் சேர்ந்த வாலேம் ஷிப் மேனேஜ்மெண்ட், பிரிட்டனின் டென் ஹோம் மற்றும் சில நார்வே கம்பெனிகளும் இத்துறையில் செயல்பட்டு வருகின்றன. பன்னாட்டு வாணிபத்தில் மெர்ச்சன்ட் நேவி தான் முக்கிய பங்காற்றுகிறது.

இத்துறையில் 3 முக்கிய பணிகளுக்கு நபர்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். கப்பலின் மேல் தளம், இன்ஜின், சேவைப் பிரிவு ஆகியவற்றுக்கு ஏராளமான நபர்கள் எப்போதும் தேவைப்படுகிறார்கள். கேப்டன், தலைமை அதிகாரி, இரண்டு மற்றும் மூன்றாம் நிலை அதிகாரி, பிற இளநிலை அதிகாரிகள் டெக் பணிகளுக்குத் தேவைப்படுகிறார்கள். கடற்பயணத்தை வழிநடத்தவும், கார்கோ மற்றும் பயணிகளை பாதுகாக்கவும் இவர்கள் உதவுகிறார்கள். சீப் இன்ஜினியர், ரேடியோ ஆபீசர், எலக்ட்ரிகல் ஆபீசர், ஜூனியர் இன்ஜினியர் ஆகியோர் இன்ஜின் பிரிவில் பணியாற்றுகிறார்கள். கிச்சன், லாண்டரி, மருத்துவச் சேவை மற்றும் பிற சேவைகளுக்கானவர்கள் சேவைப் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.

தொடக்க நிலையாக மாதம் ரூ.20 ஆயிரம் முதல் பெறலாம். இலவச உணவு, தங்குமிடம், சம்பளத்தோடு கூடிய விடுமுறை, இலவச பயணப் படி, குடும்பத்திற்கான சலுகைகள் ஆகியவை மெர்ச்சன்ட் நேவி பணிகளில் கிடைக்கிறது. இது தவிர போனஸ், விடுமுறைப் படி போன்றவைகளும் தரப்படுகின்றன. வருமான வரி இல்லாத வருமானமாக இவற்றைப் பெற முடிகிறது என்பது கூடுதல் தகவல்.

பி.எஸ்சி., நாடிகல் சயின்ஸ், பி.இ., மரைன் இன்ஜினியரிங் மற்றும் கேட்டரிங் படிப்புகளைப் படிப்பவர் மெர்ச்சன்ட் நேவி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us