2012 பொறியியல் கவுன்சிலிங்: ஜெயப்பிரகாஷ் காந்தி | Kalvimalar - News

2012 பொறியியல் கவுன்சிலிங்: ஜெயப்பிரகாஷ் காந்தி

எழுத்தின் அளவு :

ப்ளஸ்2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டவுடன், பல மாணவர்களுக்கு நினைவில் வருவது பொறியியல், மருத்துவ கவுன்சிலிங்தான்.

இந்தாண்டு, ப்ளஸ்2 பொதுத்தேர்வு, மார்ச் 8ம் தேதி துவங்குவதையடுத்து, மாணவர்கள் முழுமூச்சுடன் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2010ம் ஆண்டு பொதுத்தேர்வை ஒப்பிடும்போது, 2011ம் ஆண்டு நிறையபேர் அதிக மதிப்பெண் பெற்றனர். உதாரணமாக, 2010ம் ஆண்டு கணிதப் பாடத்தில் 200/200 பெற்றவர்கள் 1756 பேர், ஆனால் 2011ம் ஆண்டு கணிதத்தில் சதமடித்தவர்கள் 2697 பேர். எனவே, 2012ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 3000-ஐ தாண்டினால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

இயற்பியல் பாடத்தில் 2010ம் ஆண்டு 231பேர் 200 மதிப்பெண்கள். 2011ம் ஆண்டில் 246 பேர் முழு மதிப்பெண்கள். வேதியியல் பாடத்தில, 2010ம் ஆண்டு 741பேர் முழு மதிப்பெண்கள் பெற்ற அதேநேரத்தில், 2011ல் 1243பேர் முழு மதிப்பெண்கள். 2012ல் இன்னும் அதிகளவிலான மாணவர்கள் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில், தற்போதைய நிலையில் 525 பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், மேலும் சில புதிய கல்லூரிகள் கணக்கில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மொத்தமாக, சுமார் 540 பொறியியல் கல்லூரிகள் அடுத்த ஆண்டில் இருக்கும் என்று கொள்ளலாம். ஏனெனில், இந்த 2011ம் ஆண்டில் புதிதாக 37 பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் சேர்ந்தன. அடுத்த ஆண்டில் கூடுதலாக 15 கல்லூரிகள் கணக்கில் சேரும் என்று கொள்ளலாம்.

இந்த 2011ம் ஆண்டில், கவுன்சிலிங் மூலமாக பெறக்கூடிய பொறியியல் இடங்களாக 1,54,305 இருந்தன. அவற்றில் 1,06,182 இடங்கள் அகடமிக் பிரிவிலும், 3984 இடங்கள் தொழில் பிரிவிலும் நிரம்பின. காலியாக மிஞ்சிய இடங்களின் எண்ணிக்கை 44,139. மேனேஜ்மென்ட் கோட்டாவிலும் நிரம்பாமல் போன இடங்களை சேர்த்துக் கணக்கிட்டால், மொத்த காலியிடங்கள் 60,000க்கும் மேல்.

புதிய கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்தால், 2012ம் ஆண்டு அரசு பொறியியல் கவுன்சிலிங்கில் இருக்கக்கூடிய மொத்த இடங்களின் எண்ணிக்கை 1,75,000 என்ற அளவினைத் தாண்டிவிடும். அதேசமயம், தற்போது தமிழகத்தில், பொறியியல் படிப்பைப் பற்றிய மோகம் குறைந்துகொண்டே வருவதால், 2012ம் ஆண்டில் பொறியியல் காலியிடங்களின் எண்ணிக்கை 75,000க்கும் மேலே சென்றுவிடும்(மேனேஜ்மென்ட் இடங்களையும் சேர்த்து) என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில், மாணவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நமக்குப் பொறியியல் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று யாரும் நினைக்கவோ, குழம்வோ தேவையில்லை. AICTE விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச தகுதி உங்களுக்கு இருந்தாலே போதும், கவுன்சிலிங் மூலம் உங்களுக்கு பொறியில் இடம் கட்டாயம் கிடைக்கும். ஆனால், சிறந்த மற்றும் பெயர்பெற்ற கல்லூரிகளுக்கு போட்டி எப்போதும் உண்டு. அந்த சமயத்தில் மட்டுமே உங்களின் மதிப்பெண்களும், இதர தகுதிகளும் முக்கியப் பங்காற்றும்.

வரும் 2012ம் ஆண்டில், பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளவிருக்கும் பெற்றோர்-மாணவர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், குறிப்பிட்ட படிப்பைவிட, குறிப்பிட்ட கல்லூரிக்கே முக்கியத்துவம் கொடுங்கள். ஏனெனில், பல பெரிய மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்கள், சிறந்த மற்றும் புகழ்பெற்ற கல்லூரிகளிலேயே கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும். உதாரணமாக, முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில், பாடப்பிரிவுகள் என்ற எல்லையைத் தாண்டி, 85% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே, நல்ல வேலை வாய்ப்பு வேண்டுமென்றால், குறிப்பிட்ட பிரிவைவிட, கல்லூரிக்கே முக்கியத்துவம் கொடுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us