மேற்கத்திய கல்வி நமக்கு தேவையானதை கொடுத்து விடுமா? : கீதா ஹரிஹரன் | Kalvimalar - News

மேற்கத்திய கல்வி நமக்கு தேவையானதை கொடுத்து விடுமா? : கீதா ஹரிஹரன்

எழுத்தின் அளவு :

பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் போன்ற பன்முகங்களைக் கொண்டிருக்கும், கீதா ஹரிஹரன் கல்விமுறை குறித்து வழங்கிய பேட்டி,

முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட இரண்டு வெவ்வேறு நகரங்களில் நீங்கள் படித்திருக்கிறீர்கள். அதன்பொருட்டு, உங்களின் அனுபவம் எப்படி?

நான் மணிலாவுக்கு செல்லும்போது, எனது வயது வெறுமனே 13தான். ஆனால், அங்கே எனது கல்வி அனுபவம் அற்புதமானதாக இருந்தது. கணிதம், இலக்கியம், ஆராய்ச்சி, எழுத்துத் திறன்கள், இசை மற்றும் நடனம் போன்ற பல்வேறான விஷயங்களில் எனக்கு சிறப்பான பயிற்சி கிடைத்தது.

எனவே, அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு படிப்பு, பள்ளி நிலையிலும், இளநிலைப் பட்ட நிலையிலும் தேவை என்று நான் நினைக்கிறேன். ஆனால், இந்தியாவில், கலை, அறிவியல் என்று, ஒரு மாணவரை, ஒரு குறிப்பிட்ட துறைக்குள் அடைத்துவைக்க நாம் அவசரப்படுகிறோம்.

நீங்கள் ஒரு எழுத்தாளராக உருவானதில், கல்வியின் பங்கு என்ன?

கல்வியானது, விதிமுறைகளைப் பற்றி எனக்கு அதிகம் கற்றுத் தந்தது. விதிகளை முறியடிக்க, அவற்றைப் பற்றி நன்றாக கற்றுக் கொள்வது அவசியமானது. மேலும், சுதந்திரமாக சிந்திக்கவும், எனது கருத்துக்களை உருவாக்கவும் கற்றுக் கொண்டேன். இத்தகைய அம்சங்கள் அனைத்தும், ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையில் மதிப்பில்லாதவை.

இதன்மூலம், மற்றவர்கள் மத்தியில், ஒரு ஆர்வத்தை உங்களால் உருவாக்க முடிகிறது. ஆராய்ந்தறியும் மற்றும் மேம்பட்ட அளவிலான உலகப் பார்வையானது, ஒரு நல்ல எழுத்தாளரின் அணிகலன்கள்.

கல்வி நிறுவனங்கள், ஒருவரின் தனித்தன்மையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றனவா?

ஆம். குடும்பம், பிரபலமான கலாச்சாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றுடன் கலந்துறவாடுதல் மற்றும் காலநேரம் போன்றவையும் முக்கியப் பங்காற்றுகின்றன.

எந்த இந்தியப் பல்கலையும், உலகின் பிரபலமான பல்கலைகளில் ஒன்றாக இல்லை. ஏன்?

இந்தியப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் பற்றிய குறைகளை விவாதிக்க பல அம்சங்கள் இருப்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதற்காக, உலகளவிலான பட்டியல்களை வைத்து பேசவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அப்பட்டியல்கள், யாரால், எந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்படுகின்றன என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

மேற்கத்திய கல்விமுறையை நம் நாட்டில் அறிமுகப்படுத்துவதால், நேர்மறையான தாக்கம் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?

நமது சமூகத்திற்கு தேவையான அம்சங்களுடன், நமது கல்விமுறையை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நமது பள்ளி மற்றும் கல்லூரி கல்விமுறைகளில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன மற்றும் பல விஷயங்களை சீர்படுத்த வேண்டியுள்ளது. மற்றபடி, மேற்கத்திய கல்வி கலாச்சாரத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

மேற்கத்தியம் அல்லாத கல்வி நிறுவனங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு எதுவுமே இல்லை என்று எப்படி நம்மால் முடிவுசெய்ய முடியும்? நாம் பல மொழிகள் பேசக்கூடிய ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, இந்த அம்சமானது, நமது கல்வி முறையில் பிரதிபலிக்கப்பட வேண்டும். ஒற்றை மொழி அடிப்படையிலான மேற்கத்திய கல்வி முறை நமக்கு தேவையான சிறப்பான விஷயங்களை கற்றுத்தரும் என்று எப்படி நாம் நினைக்க முடியும்?

கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டுமா? இந்த விஷயத்தில் இந்தியா, இன்னும் அதிகதூரம் செல்ல வேண்டியுள்ளதா?

தேவையின்றி, அதிகளவில் பயன்படுத்தப்படும் இந்த அதிகாரம் என்ற வார்த்தையை இங்கே நாம் தவிர்க்கலாமே! விருப்பங்கள் பொதுவிலும், கல்வி வாய்ப்புகள் குறிப்பிட்ட வகையிலும், ஜாதி, மதம், பிரிவு, பாலினம் போன்ற வேறுபாடுகள் இன்றி, அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்த நிலையை அடைய, நாம் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

தற்போதைய இந்தியக் கல்விமுறைப் பற்றி?

ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு மதிப்பெண் முறைகளின் மூலமாக திறன்களை மதிப்பீடு செய்தல் ஆகியவை, இயல்பாகவே ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு தடையாக இருப்பவை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்கச் செய்தல் பற்றி உங்களின் கருத்து என்ன?

நான் ஒரு கல்வி நிபுணர் அல்ல. அதிக ஸ்காலர்ஷிப்புகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் திட்டங்கள், மொழிபெயர்ப்பு படிப்புகள், இயல்பான கற்றலின்பால் கவனம் செலுத்துதல், பாடத்திட்டத்தையும், சமூகத்தையும் இணைத்தல் போன்ற அம்சங்கள் சிறந்தவை என்று கருதுகிறேன்.

நன்றி: எஜுகேஷன் இன்சைடர்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us