உயர்கல்வி கிடைப்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது: யு.ஜி.சி. தலைவர் | Kalvimalar - News

உயர்கல்வி கிடைப்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது: யு.ஜி.சி. தலைவர்

எழுத்தின் அளவு :

இந்திய உயர்கல்வியின் நிலை மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் பேராசிரியர்.வேத் பிரகாஷ் அளித்த பேட்டி,

கடந்த 5 ஆண்டுகளாக, பல தனியார் பல்கலைக்கழகங்கள் நாட்டில் துவக்கப்பட்டு வருகின்றன. இது நாட்டிற்கு நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இது உண்மைதான். ஆனால், தனியார் பல்கலைகள், உயர்கல்வியை வணிக மயமாக்கும் செயல்பாட்டிலிருந்து விலகி நிற்பதை உறுதிசெய்ய வேண்டிய தேவை இருக்கிறது. நிதி என்பது அவசியம்தான். அதற்காக, நமது வருங்கால தலைமுறைகளுக்கு, பணத்தின் அடிப்படையில் கல்வி தரப்படுவதை நியாயப்படுத்த முடியாது. தனியார் பல்கலைகளின் விஷயத்தில், எனக்கு கவலை தரக்கூடிய இன்னொரு முக்கிய விஷயமும் உண்டு. அது என்னவெனில், பொதுவாக பல தனியார் பல்கலைகளில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களே, வேந்தர், இணைவேந்தர் மற்றும் துணைவேந்தர் போன்ற பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். இதனால், அப்பதவியின் தரமே கேள்விக்குள்ளாகிறது. எனவே, பல்கலைகளின் உயர் பதவியில் அமரும் நபர்கள், கல்வித்துறையில் அவர்களின் சாதனைகளை மதிப்பிட்டே அமர்த்தப்பட வேண்டும்.

உயர்கல்விக்கான விதிமுறை கட்டுப்பாட்டு அமைப்புகள் அதிகமாக இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனவே, NCHER அல்லது அதுபோன்ற வேறு ஏதேனும் அமைப்பை உருவாக்கும் நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

தற்போது, நாட்டில் ஒரேயொரு அமைப்பு மட்டுமே உயர்கல்வியை மேற்பார்வை செய்கிறது. ஆனால், அந்த அமைப்பும், குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் தரநிலைகளின் மூலமாக கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதில்லை. இந்த அமைப்பு, தனது நடவடிக்கைகளுக்காக, மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அந்த அமைப்புதான் பல்கலைக்கழக மானியக் குழு(UGC).

மேலும், உயர்கல்வியின் பிரிவுகளை மேற்பார்வையிட வேறுசில அமைப்புகளும் தற்போது நாட்டில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(AICTE), இந்திய மருத்துவக் கவுன்சில்(MCI), இந்திய பார்மசி கவுன்சில்(PCI), இந்திய பல் மருத்துவ கவுன்சில்(DCI), இந்திய நர்சிங் கவுன்சில்(NCI), இந்திய பார் கவுன்சில்(BCI), ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில்(NCTE) போன்றவை முக்கியமானவை.

இந்த அமைப்புகளின் பிரதானப் பணி, முறைப்படுத்தலாகும் மற்றும் தரமான கல்வி தொடர்பாக ஆய்வு செய்தலாகும். அதேசமயம், மிக அதிகமான முறைப்படுத்தும் அமைப்புகளால், ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் சுதந்திரம் பாதிக்கப்பட்டு, அதன் சீரிய செயல்பாட்டுத் திறன் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கமிஷனை(NCHER) உருவாக்கும் ஒரு முயற்சியை, அதிக சுயநிர்வாகத்தை ஊக்குவிக்கும் ஒரு செயல்பாடாக பார்க்கலாம்.

வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வை நடத்தும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்ற, தொழில்முறை நிபுணத்துவ சான்றளிப்பை வழங்கும் செயல்பாட்டை, தனி அமைப்புடன் இணைக்கும் நடவடிக்கை சரியான ஒன்று என நீங்கள் நினைக்கிறீர்களா?

ஒரு மாணவர், குறிப்பிட்ட படிப்பில் சேரும் முன்பாக, அவரின் தகுதியை மதிப்பிடுவதில், தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை. இவ்வாறு, தரமுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதால், பல்கலைகள், நாம் நினைக்கும் வகையில் சிறப்பானதாக மாறும். ஆனால், குறிப்பிட்ட தரத்தை சோதிக்க பயன்படுத்தப்படும் தேர்வு முறைகள் சரியானவையா என்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம்.

இதுபோன்ற தரப்படுத்தல் நடவடிக்கையானது, இளைய தலைமுறையினர் மத்தியில் ஒரு பொறுப்புணர்வை உருவாக்கி, தமது தகுதிகள் குறித்து மதிப்பிடும் நிலையை உருவாக்கும். அதேசமயம், சேர்க்கைக்கு முந்தைய தேர்வை, சான்றளிப்பு என்பதிலிருந்து, தொழிலில் பயிற்சி மேற்கொள்பவர் என்ற நிலைக்கு வேறுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

உண்மையை சொல்லப்போனால், நமது நாட்டைப் பொறுத்தவரை, ஒவ்வொரு துறையிலும் பயிற்சி மேற்கொள்பவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளன. ஆனால், அவை முறைப்படி பின்பற்றப்படுவதில்லை. எந்த ஒரு அறிவுசார் துறையிலும், அதன் தொழில்நுட்ப நிபுணருக்கு, அவரின் அறிவை புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு சோதனை தேர்வு கட்டாயம் இருக்க வேண்டும். இத்தகைய புதுப்பித்தலுக்கான செயல்பாட்டு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தொடர்ச்சியான தொழில்துறை மேம்பாட்டை நோக்கி செல்லும் பொறுப்பு, தனிநபரை சார்ந்தது.

பல்கலை உயர்கல்வியில், தொழில்நுட்ப பிரிவுகளில் பட்டம் பெறுவது அதிக செலவு வாய்ந்த ஒன்றாக உள்ளதே! இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உயர் மற்றும் தொழில்முறை கல்விக்கான செலவினங்கள், மிக அதிகமாகவே இருக்கும். அதைப்பற்றி அதிகம் விவாதிக்க வேண்டியதில்லை. தனியார் துறைகளில், பள்ளிக் கல்விக்கு ஆகும் செலவு, உயர்கல்வியை விட அதிகமாக இருக்கிறது. ஆனால், அதிக செலவாகிறது என்பதற்காகவே, ஒருவருக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்காமல் போவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஒரு மாணவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக அவர் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது. அவருக்கு தேவையான உதவித்தொகைகள் மற்றும் வங்கிகளின் கல்விக் கடன்கள் ஆகியவை, தேவைக்கேற்ப கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய சலுகைகளைப் பெறுவதில் இருக்கும் சிரமங்கள் குறைக்கப்பட வேண்டும். உலகில், புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களாக திகழ்பவை, பிற பல்கலைக்கழகங்களைக் காட்டிலும், அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன. அதுபோன்ற கல்வி நிறுவனங்களில் படிக்க நினைக்கும் மாணவர்கள், அதற்கு தேவையான நிதி வசதிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.

அமெரிக்காவின் ஹாவர்டு அல்லது பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு போன்ற உலகத்தரம் வாய்ந்த பல்கலையைப் போல், ஒரேயொரு உயர்கல்வி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்க நாம் இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்?

நீங்கள் குறிப்பிட்ட உலகத்தரம் வாய்ந்த பல்கலைகள், தான் தோன்றிய ஆரம்பத்திலேயே, அந்த நிலையை அடைந்துவிடவில்லை. அடுத்தடுத்த காலகட்டங்களில், தரமான மற்றும் சிறப்பான எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளின் வழியே அவை பயணப்பட்டதாலேயே, இந்த நிலையை அவை இன்று அடைந்துள்ளன. மற்றபடி, எடுத்தவுடன் அவை இந்த நிலையை எட்டிவிடவில்லை.

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பல்கலையும், முக்கிய அறிவுத்துறைகளில் தனது பங்களிப்பை, சிறப்பான வகையில் அளிக்க கடுமையாக முயன்று செயல்பட வேண்டும். அப்போதுதான் அவை, உலகத்தரம் வாய்ந்த பல்கலை என்ற நிலையை பிற்காலத்தில் அடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆராய்ச்சி நிலைகளில், ஒரு பல்கலையின் ஆழமான மற்றும் சிறப்பான செயல்பாடே, அதற்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுத்தரும்.

பல்வேறான முக்கிய அறிவுத் துறைகளில், சிறப்பான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட சில ஆராய்ச்சி மையங்களை, இந்தியாவில் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதில் எந்த தவறுமில்லை. இந்த மையங்களில் இருக்கும் முதல்தர ஆராய்ச்சி வசதிகளால், நாட்டின் மற்ற பல்கலைகளும் பயன்பெறும். இதனடிப்படையில், சிறந்த அறிவுள்ள இளைஞர்களுக்கான சில உயர்தர கல்வி நிறுவனங்களை நிறுவுவதானது, நன்மை தரக்கூடிய விஷயமாக இருக்கும்.

கல்வியில், நாம் பயன்பாட்டு(Utilitarian) நோக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா? இது நல்லதா?

பல்கலைக்கழக கருத்தாக்கத்தில், பயன்பாட்டு நோக்கம் என்பது, தத்துவார்த்த ரீதியாக பொருந்தி வராது என்பதை நான் ஒப்புக் கொண்டுள்ளேன். அறிவானது, பல்வேறான பரிமாணங்களில் பரிணமிக்கும் இடம் பல்கலைக்கழகமாகும். அது, மொழியியல், சமூக அறிவியல், மானுடவியல், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய எந்த துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

உண்மையைத் தேடும் நடவடிக்கைகளிலேயே, அனைத்து கண்டுபிடிப்புகளும் உருவாகின்றன. அறிவுத் துறைகளில், அடிப்படை விஷயங்களில் சிந்திப்பதில், இதுவொரு உயர்தர பயன் விளைவாகும். அது, சூழல்களுக்கான பயன்பாட்டின், குறிப்பான்களைத் தருகிறது. இதன்மூலம், சிக்கல்களுக்கான தீர்வுகளைப் பற்றிய அடிப்படை புரிதல் ஏற்படுகிறது.

இந்திய பல்கலைகள் சந்திக்கக்கூடிய சவால்கள் குறித்து உங்களின் கருத்து என்ன?

அறிவுத்திறனை மேம்படுத்துவது, புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி மனப்பாங்கை வலுப்படுத்துவது, பிராந்தியம், சமூகம் மற்றும் பாலின பாரபட்சமற்ற, உயர்கல்வியை, உள்ளடக்கம் மற்றும் தரத்துடன் பரவலாக்குதல் போன்ற சவால்கள் முக்கியமானவை. நடுவரிசையில், திறன்பெற்ற மனிதவளத்தை, தொழில் பயிற்சிகளின் மூலம் உருவாக்குதலும் முக்கியமானது. இந்நடவடிக்கை, சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது.

இவைத்தவிர, கல்வி உலகமயமாதல், பல்கலைக்கழக நிர்வாக சீர்திருத்தம் போன்றவையும் பெரிய சவால்களே. பல்கலைக்கு வெளியே இருக்கும் அறிவு வளங்களை பயன்படுத்திக் கொள்வதும் இதில் அடங்கும்.

நன்றி: கேரியர்ஸ்360

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us