‘பொறியியல் பட்டதாரிகளுக்கான தேவை எப்போதும் உண்டு’ | Kalvimalar - News

‘பொறியியல் பட்டதாரிகளுக்கான தேவை எப்போதும் உண்டு’

எழுத்தின் அளவு :

தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயராகவன் அளித்த பேட்டி:

ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த சிறுபான்மை கல்வி நிறுவனம் துவக்கப்பட்டது. மூன்று படிப்புகளுடன் துவக்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது 6 இளநிலை பட்டப்படிப்புகளும், 4 முதுநிலை பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. மொத்தம் ஆயிரத்து 700 மாணவ மாணவியர், 220 பணியாளர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

பாடப் புத்தகத்தை கடந்து, பிற திறன்களை வளர்ப்பதற்கான பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கருத்தரங்குகள், பயிலரங்குகள், நிபுணர்களுடனான கலந்துரையாடல், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், துறைகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் என கடந்த ஆண்டில் மட்டும் 45 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டு அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்கிறோம்.

வேலைக்கு பயிற்சி

மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதற்காக 8 பேர் அடங்கிய குழு இடம்பெற்றுள்ள பிரத்யேக துறையை ஏற்படுத்தியுள்ளோம். வளாக நேர்காணல் பங்கேற்பதற்கு முன்பாக மாணவ, மாணவிகளுக்கு ஆப்டிடியூட், சாப்ட் ஸ்கில்ஸ் உட்பட நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தவிர, வாரந்தோறும் மூன்று மணிநேரம் வேலை வாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஸ்மார்ட் வகுப்பறைகள், லேப், நூலகம் என அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

சமநிலை அடையும்

தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தேவைப்படுகின்றனர். அனைத்து வேலைகளையும் அனைவராலும் செய்துவிட முடியாது. பொறியியல் படித்தவர்களால் மட்டுமே செய்யக்கூடிய வேலை என்று பல உண்டு. எனவே, தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகள் அவசியம் தேவை.

கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் புதிய பொறியியல் கல்லூரிகள் வரந்துவங்கின. அனைத்து கல்லூரிகளாலும் தரமான கல்வி வழங்கமுடியாததால், போதிய திறன் இல்லாத பொறியியல் பட்டதாரிகளும் வெளிவருகின்றனர். அதனால், அவர்களால் சிறந்த வேலை வாய்ப்பையும் பெற முடியவில்லை. இதேநிலை தொடருமா என்று அச்சப்படத்தேவையில்லை. காலப்போக்கில் தரமில்லாத கல்லூரிகள் ஒதுங்கிக்கொள்ளும். தரமான கல்லூரிகளால், தேவைக்கு ஏற்ப மட்டுமே பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்படுவார்கள். நிலைமை விரைவில் சீராகும்.

தரமான கல்வி

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆராய்ச்சி முடித்தவர்கள் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கிறார்கள். மேலும், திறமை மிக்க மாணவர்களே அங்கு சேர்க்கை பெறுகின்றனர். இதனால், அந்த கல்வி நிறுவனங்களால் மிகச் சிறப்பாக செயல்பட முடிகிறது. ஆனால், குறைந்த கட்டணத்தை பெற்று இயங்கும் தனியார் கல்லூரிகளால் போட்டியிட முடியவில்லை. எனினும், தரமான கல்வியை வழங்கவே கடுமையாக முயற்சி செய்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us