‘இந்திய வரலாறு கட்டாயமாக்கப்பட வேண்டும்’ | Kalvimalar - News

‘இந்திய வரலாறு கட்டாயமாக்கப்பட வேண்டும்’

எழுத்தின் அளவு :

டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் நரசிம்மன் அளித்த பேட்டி:

ஒரு பேராசிரியராக, துறைத் தலைவராக, துணை முதல்வராக, முதல்வராக கடந்த 34 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் இந்தக் கல்லூரியில் எனது பணியை செய்துவருவதில் பெருமைப்படுகிறேன். கல்லூரியில் பொருளாதாரப் படிப்பிற்கான முக்கியத்துவம் அதிகரித்தது முதல் தன்னாட்சி அங்கீகாரம், நாக் மறுமதிப்பீடு, கம்யூனிட்டி கல்லூரி, பொன்விழா ஆண்டு திட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடத்தக்க சாதனைகளாக கூறலாம்.

மொத்தம் 5,500 மாணவ, மாணவிகள் படிக்கும் இக்கல்லூரியில், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., விளையாட்டு ஆகியவற்றைப் போல், சி.ஏ., பயிற்சி, மத்திய, மாநில அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி, சிவில் சர்வீசஸ் பயிற்சி என பல்வேறு பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க உள்ளோம்.

தேசப்பற்று

நம்நாட்டை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. எனவேதான், நம்தேசதம் மற்றும் தேசத்திற்காக பாடுபட்டவர்கள் குறித்த அறிவை மக்கள் பெறுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். சுற்றுச்சூழலை ஒரு பாடமாக அனைத்து துறை மாணவ, மாணவிகளும் படிப்பதுபோல், இந்திய வரலாற்றையும் படிக்க வேண்டும். இதனால் வேற்றுமை மறையும்; நம் நாடு, நம் மக்கள் என்ற எண்ணமும் உருவாகி, தேசப்பற்று அதிகரிக்கும்.

வேலைவாய்ப்பு மையம்

பொருளாதாரம் படிப்பவர்கள் பாடத்திட்டத்திலுள்ள பொருளாதாரம் மட்டும் படித்தால் போதாது. அரசுத் திட்டங்கள், பொதுமக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும். முன்பு பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே வேலைவாய்ப்பு மையம் அமைக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துக்கொடுக்கும் வகையில் வேலைவாய்ப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்களும் கலை, அறிவியல் மாணவ, மாணவிகளை விரும்பி ஏற்றுக்கொள்கின்றன.

வடமாநில முறை

அரசியல் அறிவியல், பொருளாதாரம் போன்ற படிப்புகளுக்கு தமிழகத்தைவிட, வட மாநிலங்களில் அதிக மவுசு உள்ளது. தமிழகத்தில் இந்த படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத நிலைக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வுத் திட்டத்தையும் இவற்றுடன் இணைக்காமல் விட்டுவிட்டோம். அங்கு வணிகவியல் பாடத்தை சி.ஏ., உடனும், வங்கிப் பணிகளுடனும் இணைக்கிறார்கள்.  வட மாநில மாணவர்கள், உரியமுறையில் ஆராய்ந்து தங்களுக்கான பாடப்பிரிவுகளை தேர்வுசெய்கிறார்கள். இங்கு பாடப்பிரிவை தேர்வுசெய்வதில் நண்பர்கள், உறவினர்களின் அழுத்தம் அதிகமாக உள்ளது என்றும் கூறலாம்.

ஆராய்ச்சி படிப்பை பல்கலைக்கழங்கள் மட்டுமே வழங்கிவந்த நிலைமாறி, தற்போது கல்லூரிகளும் வழங்குகின்றன. கல்லூரிகள் மேலும் அதிக ஆராய்ச்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதிலும் இரண்டாவது கருத்து இல்லை. அவற்றிலும் ஆய்வகங்கள் சார்ந்த ஆராய்ச்சிகள் கல்லூரிகளில் அதிகரிக்கப்படவேண்டும். அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் அவசியம். தன்னாட்சி கல்லூரிகள் தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us