‘டிஜிட்டல் வழிக் கல்வி தான் எதிர்காலம்’ | Kalvimalar - News

‘டிஜிட்டல் வழிக் கல்வி தான் எதிர்காலம்’

எழுத்தின் அளவு :

எதிர்காலத்தில் பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி, பாடங்கள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தான் வழங்கப்படும் என்று பலரும் நம்புகின்றனர். அந்தளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேசமயம், அதில் சில சவால்களும் உள்ளன. நவீன தொழில்நுட்பம் எப்படி முறையாக பயன்படுத்தப்படுகிறது? அதை எப்படி முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்? மாற்றத்திற்கு ஏற்ப தங்களை எப்படி தயார்ப்படுத்திக்கொள்ளப் போகிறார்கள்? என்பவையே அவை.

ஆயுர்வேதம், வேளாண்மை மற்றும் கலைப் படிப்புகளில் நவீன தகவல் தொழில்நுட்பம் இன்னும் முக்கியத்துவம் பெறவில்லை. அதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து தனித்துவமிக்க பாடத்திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதில் வெறும் தகவல் தொழில்நுட்பம் இடம்பெறாது; சாப்ட் ஸ்கில்ஸ், தலைமைப் பண்பு உள்ளிட்டவையும் இடம்பெறும். நாடு முழுவதும் 29 பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் பட்சத்தில், போதிய அனுபவமிக்க ஆசிரியர்களும் தேவை என்பதால், அவர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்க உள்ளோம்.

பாலிடெக்னிக் கல்லூரிகளை எடுத்துக்கொண்டால், அங்கு மாணவர்களுக்கு தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டத்திற்கும், தொழில்நிறுவனங்களின் தேவைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதனை அரசும் உணர்ந்துள்ளது. எனவே, மத்திய அரசுடன் இணைந்து சிறப்பு திட்டத்தில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ‘ஹேண்ட்ஸ் ஆன்’ பயிற்சி அளிக்க உள்ளோம்.

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நவீன வகுப்பறை சூழலை உருவாக்கும் முயற்சியாக சென்னையைச் சேர்ந்த 4 பள்ளிகளில் விண்டோஸ் ஹைபிரிட் டேப்லெட்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்பிப்பதை அப்படியே டிஜிட்டல் வடிவில் கொடுப்பதால், மாணவர்கள் தங்களுக்கு தேவையானபோதெல்லாம் அவற்றை திரும்ப பயன்படுத்தமுடியும். சுயமாக கற்றல் என்பது மிகவும் சக்திவாய்ந்தது.

வகுப்பறையில் கிடைக்கும் அதே அனுபவத்தை ஒரு டேப்லட் வாயிலாகவும் பெற வாய்ப்பு உண்டு. தற்போது அனைத்து பாடங்களையும் டேப்லட்டில் உருவாக்க சில சிரமங்கள் உள்ளன என்றபோதிலும், நவீன தொழில்நுட்ப வழிக் கல்வி தான் எதிர்காலம்.

- பிரதீக் மேத்தா, இயக்குனர், மைக்ரோசாப்ட் இந்தியா (கல்விப் பிரிவு)

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us